தானான தாத்த தானான தாத்த
தானான தாத்த ...... தனதான
தீயூதை தாத்ரி பானீய மேற்ற
வானீதி யாற்றி ...... கழுமாசைச்
சேறூறு தோற்பை யானாக நோக்கு
மாமாயை தீர்க்க ...... அறியாதே
பேய்பூத மூத்த பாறோரி காக்கை
பீறாஇ ழாத்தி ...... னுடல்பேணிப்
பேயோன டாத்து கோமாளி வாழ்க்கை
போமாறு பேர்த்து ...... னடிதாராய்
வேயூறு சீர்க்கை வேல்வேடர் காட்டி
லேய்வாளை வேட்க ...... வுருமாறி
மீளாது வேட்கை மீதூர வாய்த்த
வேலோடு வேய்த்த ...... இளையோனே
மாயூர வேற்றின் மீதே புகாப்பொன்
மாமேரு வேர்ப்ப ...... றியமோதி
மாறான மாக்கள் நீறாக வோட்டி
வானாடு காத்த ...... பெருமாளே.
- தீ ஊதை தாத்ரி பானீயம் ஏற்ற வான் ஈதியால் திகழும்
நெருப்பு, காற்று, மண், நீர், உயர்ந்த விண் இந்த ஐம்பூதங்களால் விளங்குகின்றதும், - ஆசைச் சேறு ஊறு தோல் பை
ஆசை என்னும் சேறு ஊறியுள்ளதும், தோலால் ஆனதுமான பையாகிய இந்த உடம்பு, - யானாக நோக்கு(ம்) மா மாயை தீர்க்க அறியாதே
நானாக எண்ணுகின்ற பெரும் மாயையை ஒழிக்க அறியாமல், - பேய் பூதம் மூத்த பாறு ஓரி காக்கை
பேய்களும், பூதங்களும், வயதான பருந்துகளும், நரிகளும், காகங்களும் - பீறா இழாத் தி(ன்)னு(ம்) உடல் பேணி
கிழித்து, இழுத்து உண்ணப் போகின்ற உடலை விரும்பிப் பாதுகாத்து, - பேயோன் நடாத்து கோமாளி வாழ்க்கை
பேய் போன்ற நான் நடத்துகின்ற கோணங்கித்தனமான வாழ்க்கை - போம் ஆறு பேர்த்து உன் அடி தாராய்
தொலையும் வண்ணம் விலக்கவல்ல உனது திருவடிகளைத் தந்து அருள்வாயாக. - வேய் ஊறு சீரக் கை வேல் வேடர் காட்டில்
புல்லாங் குழலில் வைத்துத் தடவும் சீரான கையில் வேல் ஏந்தும் வேடுவர்கள் (வாழும்) வள்ளிமலைக் காட்டில், - ஏய்வாளை வேட்க உரு மாறி
பொருந்தி இருந்த வள்ளியை விரும்பித் திருமணம் செய்ய உருவத்தை மாற்றிக் கொண்டு, - மீளாது வேட்கை மீது ஊர வாய்த்த வேலோடு வேய்த்த
இளையோனே
திரும்பாது காம ஆசை மேலெழ, பொருந்திய வேலுடனே, ஒற்றர் செய்தி அறியப் போவதுபோலச் சென்ற இளையவனே, - மாயூர ஏற்றின் மீதே புகாப் பொன் மா மேரு வேர்ப் பறிய
மோதி
ஒப்பற்ற மயிலின் மேல் ஏறி, பொன்னிறம் உடைய கிரெளஞ்ச மலையின் வேர் பறியும்படி அதனைத் தாக்கி, - மாறு ஆன மாக்கள் நீறாக ஓட்டி
மாறுபட்டு எதிர்த்த அசுரர்கள் வெந்து சாம்பலாக ஓட்டி ஒழித்து, - வான் நாடு காத்த பெருமாளே.
தேவர்களின் திருநாட்டைக் காப்பாற்றிய பெருமாளே.