திருப்புகழ் 1243 சூதினுண வாசை (பொதுப்பாடல்கள்)

தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன ...... தனதான
சூதினுண  வாசைதனி  லேசுழலு  மீனதென 
தூசுவழ  கானவடி  ......  வதனாலே 
சூதமுட  னேருமென  மாதர்நசை  தேடுபொரு 
ளாசைதமி  லேசுழல  ......  வருகாலன் 
ஆதிவிதி  யோடுபிற  ழாதவகை  தேடியென 
தாவிதனை  யேகுறுகி  ......  வருபோது 
ஆதிமுரு  காதிமுரு  காதிமுரு  காஎனவு 
மாதிமுரு  காநினைவு  ......  தருவாயே 
ஓதமுகி  லாடுகிரி  யேறுபட  வாழசுரர் 
ஓலமிட  வேயயில்கொ  ......  டமராடீ 
ஓநமசி  வாயகுரு  பாதமதி  லேபணியும் 
யோகமயி  லாஅமலை  ......  மகிழ்பாலா 
நாதரகு  ராமஅரி  மாயன்மரு  காபுவன 
நாடுமடி  யார்கள்மன  ......  துறைவோனே 
ஞானசுர  வானைகண  வாமுருக  னேயமரர் 
நாடுபெற  வாழவருள்  ......  பெருமாளே. 
  • சூதினுண வாசைதனி லேசுழலு மீனதென
    வஞ்சனையாக வைக்கப்பட்ட தூண்டிலில் உள்ள உணவை உண்ணும் ஆசையிலே சுழன்று வரும் மீன்போல,
  • தூசுவழ கானவடிவதனாலே சூதமுட னேருமென
    ஆடையின் அழகுடன் கூடிய உருவத்தைக்கண்டு மாந்தளிரின் நிறத்துக்கு உடல் நிறம் சமமாகும் என்று நினைத்து
  • மாதர்நசை தேடுபொருளாசைதமி லேசுழல
    பெண்கள் மீதுள்ள காம இச்சை காரணமாகத் தேடுகின்ற பொருளாசையால் மனம் அலைச்சல் அடையும்போது,
  • வருகாலன் ஆதிவிதி யோடுபிற ழாதவகை
    வருகின்ற யமன் முதலில் பிரமனால் எழுதப்பட்ட விதிக்குத் தவறாத வகையில்
  • தேடியெனதாவிதனை யேகுறுகி வருபோது
    என்னைத் தேடி என் உயிரைப் பற்ற அருகில் வரும்சமயம்,
  • ஆதிமுருக ஆதிமுருக ஆதிமுரு காஎனவும்
    ஆதிமுருகா, ஆதிமுருகா, ஆதிமுருகா, என்று நான் கூறுவதற்கு
  • ஆதிமுரு காநினைவு தருவாயே
    ஆதி முருகனே, நீ அந்த ஞாபகத்தைத் தர வேண்டுகிறேன்.
  • ஓதமுகில் ஆடுகிரி யேறுபட
    ஈரம் உள்ள மேகம் படியும் கிரெளஞ்சகிரி பொடியாகும்படி,
  • வாழசுரர் ஓலமிடவே அயில்கொடு அமராடீ
    அங்கு வாழ்ந்த அசுரர்கள் பயத்தினால் கூக்குரல் இடும்படி, வேல் கொண்டு போர் புரிந்தவனே,
  • ஓநமசி வாயகுரு பாதமதி லேபணியும்
    ஓம் நமசிவாய என்னும் பஞ்சாட்சரத்துக்கு ஏற்ற குருவாம் சிவபிரான் உனது பாதங்களிலே பணியும்படியான
  • யோகமயி லாஅமலை மகிழ்பாலா
    யோக மூர்த்தியான மயில்வாகனனே, குற்றமற்ற பார்வதி மகிழ்ந்து குலாவும் குழந்தையே,
  • நாதரகு ராமஅரி மாயன்மருகா
    தலைவனே, ரகுராமனாம் திருமாலாகிய மாயனுடைய மருகனே,
  • புவன நாடும் அடியார்கள்மனதுறைவோனே
    பூமியில் உன்னை விரும்பிப் போற்றும் அடியார்களின் உள்ளத்தில் உறைபவனே,
  • ஞானசுர ஆனைகணவாமுருகனே
    ஞான ஸ்வரூபியான தேவயானையின் கணவனே, முருகனே,
  • அமரர் நாடுபெற வாழவருள் பெருமாளே.
    தேவர்கள் தமது பொன்னுலகை மீண்டும் பெற்று வாழும்படி அருள் புரிந்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com