திருப்புகழ் · 1244செழும் தாது (பொதுப்பாடல்கள்)

தனந்தான தானான தனந்தான தானான
தனந்தான தானான ...... தனதான

Thiruppugazh Anbargal

செழுந்தாது பார்மாது மரும்பாதி ரூபோடு
சிறந்தியாதி லூமாசை ...... யொழியாத
திறம்பூத வேதாள னரும்பாவ மேகோடி
செயுங்காய நோயாள ...... னரகேழில்
விழுந்தாழ வேமூழ்க இடுங்காலன் மேயாவி
விடுங்கால மேநாயென் ...... வினைபாவம்
விரைந்தேக வேவாசி துரந்தோடி யேஞான
விளம்போசை யேபேசி ...... வரவேணும்
அழுங்கோடி தேவார்க ளமர்ந்தார வானீடி
அழன்றேகி மாசீத ...... நெடுவேலை
அதிர்ந்தோட வேகாலன் விழுந்தோட வேகூர
அலங்கார வேலேவு ...... முருகோனே
கொழுங்கானி லேமாதர் செழுஞ்சேலை யேகோடு
குருந்தேறு மால்மாயன் ...... மருகோனே
குறம்பாடு வார்சேரி புகுந்தாசை மாதோடு
குணங்கூடி யேவாழு ...... பெருமாளே.

பத உரை

  • செழும் தாது பார் மாது
    செழுமையான பொன், மண், பெண் (என்னும் மூவாசைகளும்)
  • அரும்பு ஆதி ரூபோடு
    முதலில் அரும்பு விட்டுப் பின்னர் வளருவது போன்ற உருவத்துடன்,
  • சிறந்து யாதிலும் ஆசை ஒழியாத
    மேலும் மேலும் விளங்கி எதிலுமே ஆசை நீங்காத
  • திறம் பூத வேதாளன்
    கோட்பாட்டினை உடைய பேய் பிசாசு (நான்).
  • அரும் பாவமே கோடி செ(ய்)யும் காய நோயாளன்
    கொடிய பாவங்களைக் கோடிக் கணக்கில் செய்யும் உடலில் நோய் கொண்டவன்.
  • நரகு ஏழில் விழுந்து ஆழவே மூழ்க இடும் காலன் மேவி
    ஏழு நரகங்களிலும் விழுந்து ஆழ்ந்து முழுகும்படி தள்ளுகின்ற யமன் என்னை அணுக,
  • ஆவி விடும் காலமே நாயேன்
    நான் உயிர் விடும் காலத்தில் அடியேனுடைய
  • வினை பாவம் விரைந்து ஏகவே
    வினை பாவம் ஆகியவை அதி வேகத்தில் என்னை விட்டு அகலும்படி,
  • வாசி துரந்து ஓடியே
    குதிரையாகிய மயிலை வேகமாகச் செலுத்தி,
  • ஞான விளம்பு ஓசையே பேசி வர வேணும்
    ஞான மொழிகளைச் சொல்லும் ஒலியே எனக்குக் கேட்கும்படியாக பேசி வந்தருள வேண்டும்.
  • அழும் கோடி தேவர்கள் அமர்ந்து ஆர வான் நீடி
    அழுத கோடிக் கணக்கான தேவர்கள் விண்ணில் நீண்ட காலம் அமர்ந்து வாழ்ந்திருக்கும்படியாக,
  • அழன்று ஏகி மா சீத நெடு வேலை அதிர்ந்து ஓடவே
    கொதிப்புடன் கோபித்துச்சென்று, மிகவும் குளிர்ச்சியான பெரிய கடல் அதிர்ச்சி அடையும்படி நீ வேகமாகப் பாய்ந்து செல்ல,
  • காலன் விழுந்து ஓடவே
    யமன் (அசுரர்களின் உயிரைக் கவர) விழுந்து அடித்துக்கொண்டு (போர் முனைக்கு) ஓடவே,
  • கூர அலங்கார வேல் ஏவும் முருகோனே
    கூர்மையான, அலங்காரம் உள்ள வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே,
  • கொழும் கானிலே மாதர் செழும் சேலையே கோடு
    செழிப்பான காட்டிலே பெண்களின் நல்ல ஆடைகளை எடுத்துக் கொண்டு
  • குருந்து ஏறு மால் மாயன் மருகோனே
    குருந்த மரத்தில் ஏறி (ஆடைகளை மறைத்த) மாயக் கண்ணனாகிய திருமாலின் மருகோனே,
  • குறம் பாடுவார் சேரி புகுந்து
    குறம் என்னும் பாடல் வகையைப் பாடுபவர்களாகிய குறவர்களின் சேரியில் புகுந்து,
  • ஆசை மாதோடு குணம் கூடியே வாழு(ம்) பெருமாளே.
    உன் ஆசைக்கு உகந்த வள்ளியுடன், அவள் குணத்துக்கு மகிழ்ந்து, பிறகு அவளுடன் கூடியே வாழ்கின்ற பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout