திருப்புகழ் 1242 சீறிட்டு உலாவு (பொதுப்பாடல்கள்)

தானத்த தான தந்த தானத்த தான தந்த
தானத்த தான தந்த ...... தனதான
சீறிட்டு  லாவு  கண்கள்  மாதர்க்கு  நாள்ம  ருண்டு 
சேவித்து  மாசை  கொண்டு  ......  முழல்வேனைச் 
சீரிட்ட  மாக  நின்ற  காசைக்கொ  டாத  பின்பு 
சீரற்று  வாழு  மின்பம்  ......  நலியாதே 
ஆறெட்டு  மாய்வி  ரிந்து  மாறெட்டு  மாகி  நின்று 
மாருக்கு  மேவி  ளம்ப  ......  அறியாதே 
ஆகத்து  ளேம  கிழ்ந்த  ஜோதிப்ர  காச  இன்பம் 
ஆவிக்கு  ளேது  லங்கி  ......  அருளாதோ 
மாறிட்டு  வான  டுங்க  மேலிட்டு  மேல  கண்டம் 
வாய்விட்டு  மாதி  ரங்கள்  ......  பிளவாக 
வாள்தொட்டு  நேர்ந  டந்த  சூர்வஜ்ர  மார்பு  நெஞ்சும் 
வான்முட்ட  வீறு  செம்பொன்  ......  வரையோடு 
கூறிட்ட  வேல  பங்க  வீரர்க்கு  வீர  கந்த 
கோதற்ற  வேடர்  தங்கள்  ......  புனம்வாழுங் 
கோலப்பெண்  வாகு  கண்டு  மாலுற்று  வேளை  கொண்டு 
கூடிக்கு  லாவு  மண்டர்  ......  பெருமாளே. 
  • சீறிட்டு உலாவு கண்கள் மாதர்க்கு நாள் மருண்டு சேவித்தும் ஆசைகொண்டும் உழல்வேனை
    கோபத்துடன் உலவுகின்ற கண்களை உடைய விலைமாதர்களுக்கு நாள்தோறும் மருட்சி உற்று, அவர்களை வணங்கியும், அவர்கள் மீது காம ஆசை கொண்டும் திரிகின்ற என்னை
  • சீர் இட்டமாக நின்ற காசைக் கொடாத பின்பு சீர் அற்று வாழும் இன்பம் நலியாதே
    சீராகவும் மிக விருப்பத்துடனும் முதலில் கொடுத்த பொருளை மீண்டும் கொடுக்காத பின்னர், அந்தச் சீரும் சிறப்பும் அழிந்து வாழச் செய்யும் சிற்றின்பத்தில் நான் ஈடுபட்டு வறுமையில் வருந்தாமல்,
  • ஆறு எட்டுமாய் விரிந்தும் ஆறு எட்டுமாகி நின்றும் ஆருக்குமே விளம்ப அறியாதே
    நாற்பத்து எட்டாக விரிந்து நாற்பத்து எட்டு கூடச் சேர்ந்து தொண்ணூற்றாறு* தத்துவங்களாக விளங்கி நின்று யாராலும் சொல்லுதற்கு முடியாத வகையில்,
  • ஆகத்து உ(ள்)ளே மகிழ்ந்த ஜோதி ப்ரகாச இன்பம் ஆவிக்கு உ(ள்)ளே துலங்கி அருளாதோ
    உடலிடத்தே பூரித்த ஜோதி ஒளி இன்பம் என் ஆவிக்குள்ளே உயிருக்கு உயிராய் விளங்கி எனக்கு அருள் பாலிக்காதோ?
  • மாறிட்டு வான் நடுங்க மேலிட்டு மேல கண்டம் வாய் விட்டு மாதிரங்கள் பிளவாக
    பகைமை பூண்டு தேவர்கள் நடுங்கும்படி ஆகாயத்தில் கிளம்பி, மேலே உள்ள பொன்னுலகம் வாய்விட்டு ஓலமிட, திசைகள் பிளவுபடும்படி,
  • வாள் தொட்டு நேர் நடந்த சூர் வஜ்ர மார்பு நெஞ்சும் வான் முட்ட
    வாள் ஏந்தி நேரே எதிர்த்துச் சென்ற சூரனுடைய வலிய மார்பும் நெஞ்சமும் வான் முகடு வரை சிதற,
  • வீறு செம் பொன் வரையோடு கூறு இட்ட வேல் அபங்க வீரர்க்கு வீர கந்த
    விளங்குகின்ற பொன் மலையான மேரு, கிரெளஞ்ச கிரியையும் கூறு செய்த வேலாயுதனே, குறைவு இல்லாதவனே, வீரர்களுக்கும் வீரனே, கந்தனே,
  • கோது அற்ற வேடர் தங்கள் புனம் வாழும் கோலப் பெண் வாகு கண்டு
    குற்றமில்லாத வேடர்களின் தினைப் புனத்தில் வாழ்ந்திருந்த அழகிய வள்ளியின் அழகைப் பார்த்து
  • மால் உற்ற வேளை கொண்டு கூடிக் குலாவும் அண்டர் பெருமாளே.
    ஆசை கொண்டு, தக்க சமயம் அறிந்து, அவளோடு கூடிக் குலாவிய, தேவர்களின் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com