திருப்புகழ் 1241 சிவஞான புண்டரிக (பொதுப்பாடல்கள்)

தனதான தந்ததன தனதான தந்ததன
தனதான தந்ததன ...... தனதான
சிவஞான  புண்டரிக  மலர்மாது  டன்கலவி 
சிவபோக  மன்பருக  ......  அறியாமற் 
செகமீது  ழன்றுமல  வடிவாயி  ருந்துபொது 
திகழ்மாதர்  பின்செருமி  ......  யழிவேனோ 
தவமாத  வங்கள்பயில்  அடியார்க  ணங்களொடு 
தயவாய்ம  கிழ்ந்துதினம்  ......  விளையாடத் 
தமியேன்ம  லங்களிரு  வினைநோயி  டிந்தலற 
ததிநாளும்  வந்ததென்முன்  ......  வரவேணும் 
உவகாரி  யன்பர்பணி  கலியாணி  யெந்தையிட 
முறைநாய  கங்கவுரி  ......  சிவகாமி 
ஒளிரானை  யின்கரமில்  மகிழ்மாது  ளங்கனியை 
யொருநாள்ப  கிர்ந்தவுமை  ......  யருள்பாலா 
அவமேபி  றந்தஎனை  யிறவாம  லன்பர்புகு 
மமுதால  யம்பதவி  ......  யருள்வோனே 
அழகாந  கம்பொலியு  மயிலாகு  றிஞ்சிமகிழ் 
அயிலாபு  கழ்ந்தவர்கள்  ......  பெருமாளே. 
  • சிவஞான புண்டரிக மலர்மாதுடன்
    சிவஞானம் என்னும் தாமரை மலரில் வீற்றிருக்கும் சிவமாதுடனே
  • கலவி சிவபோக மன்பருக அறியாமல்
    இணையும் மங்களகரமான பேரின்பத்தை நன்றாக அனுபவிக்கத் தெரியாமல்,
  • செகமீது உழன்று மல வடிவாயிருந்து
    இவ்வுலகில் அலைந்து திரிந்து, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மல சொரூபமாகி,
  • பொது திகழ்மாதர் பின்செருமி அழிவேனோ
    பொதுவாய்த் திகழும் விலைமாதரைப் பின்தொடர்ந்து அழிந்து போவேனோ?
  • தவ மாதவங்கள்பயில்
    தவமும் நிஷ்டைகளும் செய்கின்ற
  • அடியார் கணங்களொடு
    உன் அடியார்களின் கூட்டங்களுடன்
  • தயவாய் மகிழ்ந்துதினம் விளையாட
    அன்போடு மகிழ்ந்து தினமும் விளையாடவும்,
  • தமியேன்மலங்கள் இரு வினைநோய்
    அடியேனது மும்மலங்கள், பிறப்பு, இறப்பு, நல்வினை, தீவினை, நோய்கள் யாவும்
  • இடிந்து அலற
    அச்சமுற்று அலறி ஓடும்படியாகவும்,
  • ததிநாளும் வந்ததென்முன் வரவேணும
    தக்க சமயத்தில் தினமும் பிரத்யக்ஷமாக வந்தவனாக என்முன்னால் நீ வரவேண்டும்.
  • உவகாரி யன்பர்பணி கலியாணி
    யாவர்க்கும் உதவி செய்பவளும், அன்பர்கள் பணிந்து போற்றும் கல்யாணியும்,
  • எந்தை இடம் உறை நாயகங் கவுரி
    எந்தை சிவபிரானின் இடது பாகத்தில் நாயகியாக விளங்கும் கெளரியும்,
  • சிவகாமி
    சிவகாம சுந்தரியும்,
  • ஒளிர் ஆனையின்கரமில்
    விளங்கும் யானைமுக விநாயகனுக்குக் கரத்தில்
  • மகிழ்மாதுளங்கனியை ஒருநாள் பகிர்ந்த
    மகிழும்படியாக மாதுளங்கனியை முன்பொருநாள் அளித்தவளும்
  • உமை யருள்பாலா
    ஆகிய உமாதேவி பார்வதி அருளிய பாலகனே,
  • அவமேபி றந்தஎனை யிறவாமல்
    வீண் காலம் போக்கும் பிறவியை எடுத்த எனக்கு இறவாத வரத்தைத் தந்து
  • அன்பர்புகும் அமுதாலயம் பதவியருள்வோனே
    அன்பர்கள் புகுகின்ற அமுதக்கோயிலாகிய உயர் நிலையை அருள்வோனே,
  • அழகாநகம்பொலியு மயிலா
    அழகனே, மலைகளில் விளங்கி வாழ்பவனே, மயில் வாகனனே,
  • குறிஞ்சிமகிழ் அயிலா
    குறிஞ்சி நிலத்தில் மகிழ்ச்சியோடு குடியிருக்கும் வேலவனே,
  • புகழ்ந்தவர்கள் பெருமாளே.
    புகழ்ந்து போற்றும் அடியவர்களின் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com