திருப்புகழ் 1240 சாங்கரி பாடியிட (பொதுப்பாடல்கள்)

தாந்தன தானதன தாந்தன தானதன
தாந்தன தானதன ...... தனதான
சாங்கரி  பாடியிட  வோங்கிய  ஞானசுக 
தாண்டவ  மாடியவர்  ......  வடிவான 
சாந்தம  தீதமுணர்  கூந்தம  சாதியவர் 
தாங்களு  ஞானமுற  ......  வடியேனுந் 
தூங்கிய  பார்வையொடு  தாங்கிய  வாயுவொடு 
தோன்றிய  சோதியொடு  ......  சிவயோகந் 
தூண்டிய  சீவனொடு  வேண்டிய  காலமொடு 
சோம்பினில்  வாழும்வகை  ......  அருளாதோ 
வாங்குகை  யானையென  வீன்குலை  வாழைவளர் 
வான்பொழில்  சூழும்வய  ......  லயலேறி 
மாங்கனி  தேனொழுக  வேங்கையில்  மேலரிகள் 
மாந்திய  வாரணிய  ......  மலைமீதிற் 
பூங்கொடி  போலுமிடை  யேங்கிட  வாரமணி 
பூண்பன  பாரியன  ......  தனபாரப் 
பூங்குற  மாதினுட  னாங்குற  வாடியிருள் 
பூம்பொழில்  மேவிவளர்  ......  பெருமாளே. 
  • சாங்கரி பாடியிட
    சங்கரியாகிய பார்வதி தேவி பாடித் தாளம் இட,
  • ஓங்கிய ஞானசுகதாண்டவ மாடியவர்
    மேம்பட்ட ஞான ஆனந்தத் தாண்டவம் ஆடிய சிவபிரானின்
  • வடிவான
    வடிவை அடைந்தவர்களும்,
  • சாந்தம் அதீதம் உணர் கூந்தம சாதியவர் தாங்களு
    சாந்த குணத்தின் உச்சி நிலையில் இருந்து, உணர்ச்சி மிகுந்த சிவநேச இனத்தவர்களான பெரியோர்களும்,
  • ஞானமுற அடியேனும்
    (அந்தச் சிவ நடனத்தைப் பார்த்ததால்) ஞான நிலையை அடைய, அடியேனும்
  • தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு
    அறி துயில் கொண்ட ஞானக் கண்ணுடனும், வெளியில் விடாதபடி உள்ளேயே சுழுமுனையில் தாங்கிப் பிடித்த பிராணவாயுவுடனும்*,
  • தோன்றிய சோதியொடு
    அந்நிலையில் காணப்படும் ஜோதி தரிசனத்துடனும்,
  • சிவயோகந் தூண்டிய சீவனொடு
    சிவயோக நிலையில் பரசிவத்துடன் கூடி நிலைத்த ஆன்மாவுடன்,
  • வேண்டிய காலமொடு
    விரும்பிய கால அளவுக்கு
  • சோம்பினில் வாழும்வகை அருளாதோ
    சும்மா இருக்கும் மெளனஞான நிலையில் வாழும் பாக்கியத்தை உனது திருவருள் எனக்கு அருளாதோ?
  • வாங்குகை யானையென ஈன்குலை வாழைவளர்
    யானையின் தொங்கும் துதிக்கையைப் போல வாழைக் குலைகளைத் தள்ளுகின்ற வாழைமரங்கள் வளர்கின்ற,
  • வான்பொழில் சூழும்வயல் அயலேறி
    பெரிய சோலைகள் சூழ்ந்த வயல்களின் பக்கங்களில் ஏறி
  • மாங்கனி தேனொழுக வேங்கையில் மேல் அரிகள்
    மாம்பழங்கள் தேன் ஒழுகும்படி வேங்கை மரத்தின் மேலிருந்து பாயும் குரங்குகள்
  • மாந்திய ஆரணிய மலைமீதில்
    தேனையும் பழத்தையும் அருந்திய காடுகளைக் கொண்ட வள்ளிமலையில்,
  • பூங்கொடி போலும் இடை யேங்கிட
    பூங்கொடி போன்றுள்ள நுண்ணிய இடுப்பு சோரும்படி
  • ஆரமணி பூண்பன பாரியன தனபாரப் பூங்குற மாதினுடன்
    அணிந்துள்ள முத்தாபரணங்களின் கனமும், மார்பின் பாரமும் உடைய அழகிய குறப்பெண் வள்ளியுடன்
  • ஆங்குறவாடி
    அங்கே நேசம் பூண்டு கலந்து விளையாடி,
  • இருள் பூம்பொழில் மேவிவளர் பெருமாளே.
    அடர்ந்து இருண்ட சோலையிலே விரும்பி அமர்ந்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com