தனதன தனத்த தத்த தனதன தனத்த தத்த
தனதன தனத்த தத்த ...... தனதான
சலமல மசுத்த மிக்க தசைகுரு தியத்தி மொய்த்த
தடியுடல் தனக்கு ளுற்று ...... மிகுமாயம்
சகலமு மியற்றி மத்த மிகுமிரு தடக்கை யத்தி
தனிலுரு மிகுத்து மக்க ...... ளொடுதாரம்
கலனணி துகிற்கள் கற்பி னொடுகுல மனைத்து முற்றி
கருவழி யவத்தி லுற்று ...... மகிழ்வாகிக்
கலைபல பிடித்து நித்த மலைபடு மநர்த்த முற்றி
கடுவினை தனக்குள் நிற்ப ...... தொழியாதோ
மலைமக ளிடத்து வைத்து மதிபுனல் சடைக்குள் வைத்து
மழுவனல் கரத்துள் வைத்து ...... மருவார்கள்
மடிவுற நினைத்து வெற்பை வரிசிலை யிடக்கை வைத்து
மறைதொழ நகைத்த அத்தர் ...... பெருவாழ்வே
பலதிசை நடுக்க முற்று நிலைகெட அடற்கை யுற்ற
படையது பொருப்பில் விட்ட ...... முருகோனே
பழுதறு தவத்தி லுற்று வழிமொழி யுரைத்த பத்தர்
பலருய அருட்கண் வைத்த ...... பெருமாளே.
- சலமலம் அசுத்த மிக்க தசை
ஜலம், மலம், அழுக்குகள் நிறைந்த மாமிசம், - குருதி யத்தி மொய்த்த தடியுடல் தனக்குள்
ரத்தம், எலும்பு - இவைகள் நெருங்கிச் சூழ்ந்துள்ள தடித்த இந்த உடலில் - உற்று மிகுமாயம் சகலமு மியற்றி
வாசம் செய்து, மிக்க வஞ்சனையான செயல்கள் பலவற்றையும் செய்து, - மத்தமிகும் இரு தடக்கை யத்தி தனிலுரு மிகுத்து
மதம் மிகுந்ததும், பெரும் துதிக்கையை உடையதுமான யானையைப் போல் உருவம் பெருத்து, - மக்களொடு தாரம் கலனணி துகிற்கள்
குழந்தைகள், மனைவி, ஆபரணங்கள், அணிந்து கொள்ளும் துணிமணிகள், - கற்பி னொடுகுல மனைத்து முற்றி
கல்வி இவைகளுடன் குலம் வரை முழுவதுமாக வளர்ச்சி பெற்று, - கருவழி யவத்தி லுற்று மகிழ்வாகி
பிறப்பு வழி என்ற பயனற்ற பாதையில் சென்று அதில் மகிழ்ச்சி அடைந்தவனாகி, - கலைபல பிடித்து நித்தம் அலைபடும் அநர்த்த முற்றி
பலவித சாத்திர நூல்களைக் கற்று, நாள்தோறும் அலைச்சல் உறும் வேதனையை அடைந்து, - கடுவினை தனக்குள் நிற்பதொழியாதோ
பொல்லாத வினைக்கு உள்ளாகி நிற்கும் இச்செயல் நீங்காதோ? - மலைமகள் இடத்து வைத்து மதிபுனல் சடைக்குள் வைத்து
மலைமகள் பார்வதியை இடது பாகத்தில் வைத்து, சந்திரனையும் கங்கையையும் ஜடைக்குள்ளே வைத்து, - மழுவனல் கரத்துள் வைத்து
மழு என்ற கோடரியையும் நெருப்பையும் கையிலே வைத்து, - மருவார்கள் மடிவுற நினைத்து வெற்பை வரிசிலை யிடக்கை
வைத்து
பகைவர்களாகிய திரிபுரத்து அசுரர்கள் இறந்தொழிய நினைத்து, மேருமலையைக் கட்டப்பட்ட வில்லாக இடது கையிலே வைத்து, - மறைதொழ நகைத்த அத்தர் பெருவாழ்வே
வேதங்கள் தொழுது நிற்க, சிரிப்பினாலேயே திரிபுரத்தை எரித்த பெருமானாம் சிவபிரானின் பெரும் செல்வக் குழந்தையே, - பலதிசை நடுக்க முற்று நிலைகெட
பல திசைகளில் உள்ளவர்களும் நடுக்கம் அடைந்து நிலை தடுமாற, - அடற்கை யுற்ற படையது பொருப்பில் விட்ட முருகோனே
வலிமை பொருந்திய திருக்கையிலே இருந்த படையாகிய வேலாயுதத்தை கிரெளஞ்சகிரியின் மீது செலுத்திய முருகனே, - பழுதறு தவத்தி லுற்று வழிமொழி யுரைத்த பத்தர் பலருய
குற்றமற்ற தவநிலையில் இருந்து துதி மொழிகளைச் சொல்கின்ற பக்தர்கள் பலரும் நற்கதி பெற, - அருட்கண் வைத்த பெருமாளே.
திருக்கண்களால் அருள் பாலித்த பெருமாளே.