தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன ...... தனதான
கப்பரை கைக்கொள வைப்பவர் மைப்பயில்
கட்பயி லிட்டிள ...... வளவோரைக்
கைக்குள்வ சப்பட பற்கறை யிட்டுமு
கத்தைமி னுக்கிவ ...... ருமுபாயப்
பப்பர மட்டைகள் பொட்டிடு நெற்றியர்
பற்றென வுற்றவொர் ...... தமியேனைப்
பத்மப தத்தினில் வைத்தருள் துய்த்திரை
பட்டதெ னக்கினி ...... யமையாதோ
குப்பர வப்படு பட்சமி குத்துள
முத்தரை யர்க்கொரு ...... மகவாகிக்
குத்திர மற்றுரை பற்றுணர் வற்றவொர்
குற்றம றுத்திடு ...... முதல்வோனே
விப்ரமு னிக்குழை பெற்றகொ டிச்சிவி
சித்ரத னக்கிரி ...... மிசைதோயும்
விக்ரம மற்புய வெற்பினை யிட்டெழு
வெற்பைநெ ருக்கிய ...... பெருமாளே.
- கப்பரை கைக் கொள வைப்பவர்
(தம்மை நாடி வருபவர்) பிச்சை எடுக்கும் ஓட்டைக் கையில் ஏந்தும்படி வைப்பவர்கள். - மைப் பயில் கண் பயிலிட்டு இள வளவோரைக் கைக்குள்
வசப் பட பல் கறை இட்டு முகத்தை மினுக்கி வரும் உபாயப்
பப்பர மட்டைகள்
மை தீட்டிய கண் பார்வை கொண்டு இளமைப் பருவத்தினராக செல்வம் உள்ளவர்களை தமது கையில் வசப்படும்படி, வெற்றிலைக் கறை கொண்ட பல்லைக் காட்டி முகத்தை மினுக்கச் செய்து மயக்கும் தந்திரக் கூத்தாடிகள். - பொட்டு இடு நெற்றியர் பற்று என உற்ற ஒர் தமியேனை
பொட்டு வைத்த நெற்றியை உடையவர்கள் ஆகிய வேசியர்களே துணை எனக் கொண்ட ஒரு தன்னந்தனியனான கதி அற்ற என்னை, - பத்ம பதத்தினில் வைத்து அருள் துய்த்து இரை பட்டது
எனக்கு இனி அமையாதோ
தாமரை போன்ற உன் திருவடிக் கீழ் வைத்து, திருவருளைத் தந்து, அருள் பிரசாதத்தைப் பெற்றேன் என்ற நிலை எனக்கு இனிமேல் கூடாதோ? - குப் பரவப் படு பட்ச மிகுத்துள முத்தரையர்க்கு ஒரு மகவு
ஆகி
உலகத்தாரால் புகழப்படும் அன்பு மிகவும் உள்ள, மூவுலகுக்கும் தலைவராகிய சிவபெருமானுக்கு ஒப்பற்ற குழந்தையாகி, - குத்திரம் அற்று உரை பற்று உணர்வு அற்ற ஒர் குற்றம்
அறுத்திடு முதல்வோனே
வஞ்சகம் இல்லாமல் உன்னைப் புகழ்தல், உன்னிடம் ஆசை கொள்ளுதல், உன்னை அறிதல் இம்மூன்றும் இல்லாத ஒரு பிழையை நீக்கும் முன்னவனே, - விப்ர முனிக்கு உழை பெற்ற கொடிச்சி விசித்ர தனக் கிரி
மிசை தோயும் விக்ரம
அந்தணராகிய சிவ முனிவர்க்கு மான் பெற்ற குறிஞ்சி நிலத்துப் பெண்ணாகிய வள்ளியின் அழகிய மார்பகங்களைத் தழுவும் பராக்கிரமசாலியே, - மல் புய வெற்பினை இட்டு எழு வெற்பை நெருக்கிய
பெருமாளே.
பொருந்திய புய மலையைக் கொண்டு சூரனுடைய ஏழு குலமலைகளையும் தாக்கி அழித்த பெருமாளே.