தந்த தானன தந்த தானன
தந்த தானன ...... தனதான
கண்டு போல்மொழி வண்டு சேர்குழல்
கண்கள் சேல்மதி ...... முகம்வேய்தோள்
கண்டு பாவனை கொண்டு தோள்களி
லொண்டு காதலி ...... லிருகோடு
மண்டி மார்பினில் விண்ட தாமென
வந்த கூர்முலை ...... மடவார்தம்
வஞ்ச மாலதில் நெஞ்சு போய்மடி
கின்ற மாயம ...... தொழியாதோ
கொண்ட லார்குழல் கெண்டை போல்விழி
கொண்டு கோகில ...... மொழிகூறுங்
கொங்கை யாள்குற மங்கை வாழ்தரு
குன்றில் மால்கொடு ...... செலும்வேலா
வெண்டி மாமன மண்டு சூர்கடல்
வெம்ப மேதினி ...... தனில்மீளா
வென்று யாவையு மன்றி வேளையும்
வென்று மேவிய ...... பெருமாளே.
- கண்டு போல் மொழி வண்டு சேர் குழல்
கற்கண்டைப் போன்ற இனிய பேச்சு, வண்டுகள் சேரும் கூந்தல், - கண்கள் சேல் மதி முகம் வேய் தோள்
சந்திரனை ஒத்த முகம், மூங்கில் போன்ற மென்மையான தோள், - கண்டு பாவனை கொண்டு தோள்களில் ஒண்டு காதலில்
உவமைகளை அவ்வாறே பாவித்து தோள்களில் சாரும்படி ஆசை ஏற்படுவதால், - இரு கோடு மண்டி மார்பினில் விண்டதாம் என வந்த கூர்
முலை மடவார் தம்
இரண்டு மலைகள் நெருங்கி மார்பில் வெளிப்பட்டுள்ளன என்று சொல்லும்படி சிறப்புற்ற மார்பகங்களை உடைய விலைமாதர்களின் - வஞ்ச மால் அதில் நெஞ்சு போய் மடிகின்ற மாயம் அது
ஒழியாதோ
வஞ்சகம் நிறைந்த மாயத்தில் மனம் போய் மாய்கின்ற மயக்க அறிவு நீங்காதோ? - கொண்டல் ஆர் குழல் கெண்டை போல் விழி கொண்டு
கோகில மொழி கூறும்
கரிய மேகம் போன்ற கூந்தல், கெண்டை மீன் போன்ற கண் இவைகளைக் கொண்டு, குயில் கூவுதல் போன்ற பேச்சுக்களைப் பேசும் - கொங்கையாள் குற மங்கை வாழ் தரு குன்றில் மால் கொடு
செலும் வேலா
அழகிய மார்பினளான குற மகள் வள்ளி வாழும் வள்ளி மலையில் காதலோடு சென்ற வேலனே, - வெண்டி மா மனம் மண்டு சூர் கடல் வெம்ப மேதினி தனில்
மீளா
சிறந்த தன் மனம் களைத்துப்போய், நெருங்கி வந்த சூரன் வாடவும், கடல் கொதித்து வேகவும், உலகையே காக்க வந்து, - வென்று யாவையும் அன்றி வேளையும் வென்று மேவிய
பெருமாளே.
எல்லாவற்றையும் வென்று, பின்னும் மன்மதனையும் உன் அழகால் வென்ற* பெருமாளே.