தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன
தத்தத் தனத்த ...... தனதான
கட்டக் கணப்பறைகள் கொட்டக் குலத்திளைஞர்
கட்டிப் புறத்தி ...... லணைமீதே
கச்சுக் கிழித்ததுணி சுற்றிக் கிடத்தியெரி
கத்திக் கொளுத்தி ...... யனைவோரும்
சுட்டுக் குளித்துமனை புக்கிட் டிருப்பரிது
சுத்தப் பொயொப்ப ...... துயிர்வாழ்வு
துக்கப் பிறப்பகல மிக்கச் சிவத்ததொரு
சொர்க்கப் பதத்தை ...... யருள்வாயே
எட்டுக் குலச்சயில முட்டத் தொளைத்தமரர்
எய்ப்புத் தணித்த ...... கதிர்வேலா
எத்திக் குறத்தியிரு முத்தத் தனக்கிரியை
யெற்பொற் புயத்தி ...... லணைவோனே
வட்டக் கடப்பமலர் மட்டுற்ற செச்சைமலர்
வைத்துப் பணைத்த ...... மணிமார்பா
வட்டத் திரைக்கடலில் மட்டித் தெதிர்த்தவரை
வெட்டித் துணித்த ...... பெருமாளே.
- கட்டக் கணப் பறைகள் கொட்டக் குலத்து இளைஞர் கட்டிப்
புறத்தில் அணை மீதே
துயரத்தைக் குறிக்கும் தோல் பறை வகைகள் கொட்டப்பட்டு ஒலிக்க, (இறந்தவருடைய) சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் வாசலில் பாடையைக் கட்டி விறகுப் படுக்கையின் மேல் - கச்சுக் கிழித்த துணி சுற்றிக் கிடத்தி எரி கத்திக் கொளுத்தி
அனைவோரும் சுட்டுக் குளித்து மனை புக்கிட்டு இருப்பர்
கிழிக்கப்பட்ட கந்தல் துணி கொண்டு சுற்றி, படுக்க வைத்து, நெருப்பு கொழுந்துவிட்டு எரியும்படி தீ இட்டு, சுடுகாட்டுக்கு வந்த அனைவரும் உடலைச் சுட்ட பிறகு நீராடி தத்தம் வீட்டுக்குப் போய் இருப்பார்கள். - இது சுத்தப் பொய் ஒப்பது உயிர் வாழ்வு
இவ்வாறு முற்றிலும் பொய்யான இந்த வாழ்க்கை நிலை இல்லாதது. - துக்கப் பிறப்பு அகல மிக்கச் சிவத்தது ஒரு சொர்க்கப்
பதத்தை அருள்வாயே
துக்கத்துக்குக் காரணமான இந்தப் பிறவிச் சுழல் நீங்க, மிகவும் சிவந்ததானவையும் ஒப்பற்ற பேரின்பத்துக்கு இடமானவையுமான உனது திருவடிகளை எனக்குத் தந்தருள வேண்டும். - எட்டுக் குலசயிலம் முட்டத் தொளைத்து அமரர் எய்ப்புத்
தணித்த கதிர் வேலா
எட்டுத் திக்குகளிலும் உள்ள மலைகளில் இருந்த அசுரர்களை அடியோடு கலக்கி, தேவர்களின் இளைப்பை நீக்கின ஒளி வீசும் வேலனே. - எத்திக் குறத்தி இரு முத்தத் தனக் கிரியை எல் பொன்
புயத்தில் அணைவோனே
ஏமாற்றி, குறமகள் வள்ளியின் முத்துமாலை அணிந்த இரண்டு மலை போன்ற மார்பகங்களை ஒளி பொருந்திய அழகிய திருப் புயங்களில் தழுவுபவனே, - வட்டக் கடப்ப மலர் மட்டு உற்ற செச்சை மலர் வைத்துப்
பணைத்த மணி மார்பா
வட்டமான கடப்ப மலர் மாலையையும், தேன் சொரியும் வெட்சி மலர் மாலையையும் இணைத்து அணிந்து பெருமையுறும் அழகிய மார்பனே, - வட்டத் திரைக் கடலில் மட்டித்து எதிர்த்தவரை வெட்டித்
துணித்த பெருமாளே.
வட்ட வடிவமானதும் அலைகளை வீசுவதுமான கடலில் எதிர்த்து வந்த அசுரர்களை முறியடித்து, (அவர்களை) வெட்டிப் பிளந்த பெருமாளே.