திருப்புகழ் 1226 கடலினும் பெரிய (பொதுப்பாடல்கள்)

தனதனந் தனதனன தனதனந் தனதனன
தனதனந் தனதனன ...... தனதான
கடலினும்  பெரியவிழி  மலையினும்  பெரியமுலை 
கவரினுந்  துவரதர  ......  மிருதோள்பைங் 
கழையினுங்  குழையுமென  மொழிபழங்  கிளவிபல 
களவுகொண்  டொருவர்மிசை  ......  கவிபாடி 
அடலசஞ்  சலனதுல  னநுபமன்  குணதரன்மெய் 
அருள்பரங்  குரனபய  ......  னெனஆசித் 
தலமரும்  பிறவியினி  யலமலம்  பிறவியற 
அருணபங்  கயசரண  ......  மருள்வாயே 
வடநெடுங்  குலரசத  கிரியினின்  றிருகலுழி 
மகிதலம்  புகவழியு  ......  மதுபோல 
மதசலஞ்  சலசலென  முதுசலஞ்  சலதிநதி 
வழிவிடும்  படிபெருகு  ......  முதுபாகை 
உடையசங்  க்ரமகவள  தவளசிந்  துரதிலக 
னுலகுமிந்  திரனுநிலை  ......  பெறவேல்கொண் 
டுததிவெந்  தபயமிட  மலையொடுங்  கொலையவுண 
ருடனுடன்  றமர்பொருத  ......  பெருமாளே. 
  • கடலினும் பெரிய விழி மலையினும் பெரிய முலை கவர் இனும் துவர் அதரம்
    கடலைக் காட்டிலும் பெரிதான கண்கள், மலையைக் காட்டிலும் பெரிதான மார்பகம், பின்னும் நுகர்தலுக்குரிய பவளம் போன்ற உதடுகள்,
  • இரு தோள் பைங் கழையினும் குழையும் என மொழி பழங் கிளவி பல
    இரண்டு தோள்களும் பசுமை வாய்ந்த மூங்கிலைக் காட்டிலும் குழைந்து நிற்பவை என்று விலைமாதர்களைப் புகழ்வதற்கு (பணம் தேடுவதற்காக) பழைய உவமைச் சொற்கள் பலவற்றை
  • களவு கொண்டு ஒருவர் மிசை கவி பாடி
    (பழைய நூல்களிலிருந்து) திருடி (பொருட் செல்வம் உடைய) ஒருவர் மீது கவிகளைப் புனைந்து கவி பாடி,
  • அடல் அசஞ்சலன் அதுலன் அநுபமன் குணதரன் மெய் அருள் பர அங்குரன் அபயன் என ஆசித்து
    (நீ) வலிமை பொருந்தியவன், கவலை அற்றவன், நிகரில்லாதவன், உவமை கூற முடியாதவன், நற் குணங்கள் உடையவன், உண்மைப் பொருளை அருள வல்ல மேன்மையான தோற்றம் உடையவன், அடைக்கலம் தர வல்லவன் என்றெல்லாம் விரும்பிப் புகழ்ந்து பாடி,
  • அலமரும் பிறவி இனி அலம் அலம்
    மனம் கலங்கி வருந்தும் இப்பிறப்பு இனிப் போதும் போதும்.
  • பிறவி அற அருண பங்கய சரணம் அருள்வாயே
    (ஆதலால்) பிறவி என்பது ஒழிவதற்காக, சிவந்த தாமரை போன்ற உன் பாதங்களை எனக்கு அருள் செய்வாயாக.
  • வட நெடும் குல ரசத கிரியினின்று இரு கலுழி மகிதலம் புக வழியும் அது போல
    வடக்கே உள்ள பெரிய சிறந்த வெள்ளி மலையிலிருந்து இரு காட்டாறுகள் பூமியில் புக வழிந்து வருவது போல,
  • மத சலம் சல சல என முது சலம் சலதி நதி வழி விடும் படி பெருகு
    (இரு கண்களிலிருந்தும்) மத நீர் சல சல என்ற ஒலியுடன், பழமையான நீர் நிறைந்த கடலும் ஆறும் வழி விடும்படியாகப் பெருகுவதும்,
  • முது பாகை உடைய சங்க்ரம கவள தவள சிந்துரம் திலகன் உலகும் இந்திரனும் நிலை பெற வேல் கொண்டு
    யானைப் பாகனாக இந்திரனை உடையதும், ஊண் உண்டைகள் உண்பதும், வெண்மை நிறமானதுமான யானை ஐராவதத்தைக் கொண்ட சிறந்தவனான இந்திரனுடைய பொன்னுலகமும், அந்த இந்திரனும் நிலை பெற்று உய்ய, வேலாயுதத்தால்
  • உததி வெந்து அபயம் இட மலையொடும் கொலை அவுணருடன் உடன் அன்று அமர் பொருத பெருமாளே.
    கடல் வற்றி ஓலமிட, கிரெளஞ்ச மலையுடனும், கொலைத் தொழிலைப் பூண்ட அசுரர்களுடனும் மாறுபட்டுச் சண்டை செய்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com