தத்தத் தாத்த தத்தத் தாத்த
தத்தத் தாத்த ...... தனதான
கச்சுப் பூட்டு கைச்சக் கோட்ட
கத்திற் கோட்டு ...... கிரியாலங்
கக்கித் தேக்கு செக்கர்ப் போர்க்க
யற்கட் கூற்றில் ...... மயலாகி
அச்சக் கூச்ச மற்றுக் கேட்ட
வர்க்குத் தூர்த்த ...... னெனநாளும்
அத்தப் பேற்றி லிச்சிப் பார்க்க
றப்பித் தாய்த்தி ...... ரியலாமோ
பச்சைக் கூத்தர் மெச்சிச் சேத்த
பத்மக் கூட்டி ...... லுறைவோரி
பத்திற் சேர்ப்பல் சக்கிற் கூட்டர்
பத்தக் கூட்ட ...... ரியல்வானம்
மெச்சிப் போற்ற வெற்புத் தோற்று
வெட்கக் கோத்த ...... கடல்மீதே
மெத்தக் காய்த்த கொக்குக் கோட்டை
வெட்டிச் சாய்த்த ...... பெருமாளே.
- கச்சுப் பூட்டுகைச் சக்கு ஓடு அகத்தில் கோட்டு கிரி
(விலைமாதரின்) கச்சு இணைக்கப்பட்டதும், (ஆண்களின்) கண்கள் செல்லுகின்ற இடமாய் விளங்குவதுமான சிகரம் கொண்ட மலை போன்ற மார்பகங்களிலும், - ஆலம் கக்கித் தேக்கு செக்கர்ப் போர்க் கயல் கண் கூற்றில்
மயலாகி
ஆலகால விஷத்தை வெளியிட்டு நிரம்பினதாய், சிவந்த நிறத்ததாய், போருக்கு உற்றதான கயல் மீன் போன்றதான கண்கள் மீதும், (இனிய) பேச்சிலும் காம மயக்கம் கொண்டு - அச்சக் கூச்சம் அற்றுக் கேட்டவர்க்குத் தூர்த்தன் என
பயமும் நாணமும் இல்லாதவனாகி என்னைப் பற்றி விசாரிப்பவர்களுக்கு இவன் காம ஒழுக்கமுடையவன் என்று பலரும் கூற, - நாளும் அத்தப் பேற்றில் இச்சிப்பார்க்கு அறப் பித்தாய்த்
திரியலாமோ
தினமும் பொன் பொருள் பெறுவதிலேயே ஆசை கொள்ளும் விலைமாதர்க்கு மிகவும் காமம் கொண்டவனாய் உழன்றிடலாமோ? - பச்சைக் கூத்தர் மெச்சிச் சேத்த பத்மக் கூட்டில் உறைவோர்
பச்சை நிறமுடையவரும், (காளிங்கன் என்னும் பாம்பின் மேல்) நடனம் புரிபவரும் ஆகிய திருமால் புகழ்ந்து போற்றும் சிவந்த தாமரை ஆசனத்தில் வீற்றிருக்கும் பிரமன், - இபத்தில் சேர்ப் பல் சக்கில் கூட்டர்
வெள்ளை யானையின் மீது ஏறுபவரும், பல (ஆயிரம்) கண்களோடு கூடியவருமான இந்திரன், - பத்தக் கூட்டர் இயல் வானம் மெச்சிப் போற்ற வெற்புத்
தோற்று வெட்க
அடியார் கூட்டங்கள், தகுதி வாய்ந்த வானவர் ஆகிய இவர்கள் புகழ்ந்து போற்றவும், கிரெளஞ்சமலை வெட்கித் தோற்றுப்போய் விழவும், - கோத்த கடல் மீதே மெத்தக் காய்த்த கொக்குக் கோட்டை
வெட்டிச் சாய்த்த பெருமாளே.
உலகுக்கு ஆடையாகவுள்ள கடலினிடையே பெரிதாக வளர்ந்த மாமரத்தின் (சூரனின்) கொம்புகளை வெட்டி வீழ்த்திய பெருமாளே.