திருப்புகழ் 1224 ஏட்டிலே வரை (பொதுப்பாடல்கள்)

தாத்த தானன தாத்த தானன
தாத்த தானன ...... தந்ததான
ஏட்டி  லேவரை  பாட்டி  லேசில 
நீட்டி  லேயினி  ......  தென்றுதேடி 
ஈட்டு  மாபொருள்  பாத்து  ணாதிக 
லேற்ற  மானகு  ......  லங்கள்பேசிக் 
காட்டி  லேயியல்  நாட்டி  லேபயில் 
வீட்டி  லேஉல  ......  கங்களேசக் 
காக்கை  நாய்நரி  பேய்க்கு  ழாமுண 
யாக்கை  மாய்வதொ  ......  ழிந்திடாதோ 
கோட்டு  மாயிர  நாட்ட  னாடுறை 
கோட்டு  வாலிப  ......  மங்கைகோவே 
கோத்த  வேலையி  லார்த்த  சூர்பொரு 
வேற்சி  காவள  ......  கொங்கில்வேளே 
பூட்டு  வார்சிலை  கோட்டு  வேடுவர் 
பூட்கை  சேர்குற  ......  மங்கைபாகா 
பூத்த  மாமலர்  சாத்தி  யேகழல் 
போற்று  தேவர்கள்  ......  தம்பிரானே. 
  • ஏட்டிலே வரை பாட்டிலே
    ஏட்டில் எழுதப்படும், மனிதர்களைத் துதிக்கும் பாடல்களும்,
  • சிலநீட்டிலே
    அவற்றுள் சிலவற்றை நீட்டி முழக்கிப் பாடுதலும்
  • இனிதென்று தேடி ஈட்டு மாபொருள்
    சம்பாதிக்க இனிய வழிகள் என்று பிரபுக்களை நாடி சேர்க்கும் பொருட்களை
  • பாத்துணாது இகல் ஏற்றமான
    மற்றவர்களோடு பங்கிட்டு உண்ணாது, தகுதிக்கு ஏற்றாற்போல்
  • குலங்கள்பேசி
    குலப்பெருமையையே பேசிக்கொண்டு,
  • காட்டிலே யியல் நாட்டிலே
    காட்டிலும், பொருந்திய நாட்டிலும்,
  • பயில் வீட்டிலே உலகங்கள் ஏச
    பழகும் வீட்டிலும் உள்ள உலகத்தார் அனைவரும் பழிக்கும்படியாக வாழ்ந்து,
  • காக்கை நாய்நரி பேய்க் குழாம் உண
    (கடைசியில்) காக்கை, நாய், நரி, பேய்களின் கூட்டங்களுக்கு உணவாகும்
  • யாக்கை மாய்வது ஒழிந்திடாதோ
    இந்த உடம்பு இறந்து படுவது என்பது நீங்காதோ?
  • கோட்டும் ஆயிர நாட்டன் நாடுறை
    விளங்கும் ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரனது நாட்டில் வாழும்
  • கோட்டு வால் இப மங்கை கோவே
    தந்தங்களை உடைய வெள்ளை யானை (ஐராவதம்) வளர்த்த தேவயானையின் மணவாளா,
  • கோத்த வேலையில் ஆர்த்த சூர்
    உலகு ஆடையாக உடுத்த கடலில் ஆர்ப்பரித்து நின்ற சூரனுடன்
  • பொரு வேற் சிகாவள
    போரிட்ட வேலாயுதனே, மயில் வாகனனே,
  • கொங்கில்வேளே
    கொங்கு நாட்டின்* தலங்களில் அமர்ந்த செவ்வேளே,
  • பூட்டு வார்சிலை கோட்டு வேடுவர்
    நாண் ஏற்றப்பட்ட பெரிய வில்லை ஏந்திய மலை வேடர்களின்
  • பூட்கை சேர்குற மங்கைபாகா
    குலதர்மக் கொள்கைப்படி வளர்ந்த குறமாது வள்ளியின் பங்கனே,
  • பூத்த மாமலர் சாத்தியே
    அன்றலர்ந்த நல்ல பூக்களைச் சாத்தியே
  • கழல் போற்று தேவர்கள் தம்பிரானே.
    உன் திருவடியைப் போற்றும் தேவர்கள் தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com