தனந்தனந் தத்தத் தனந்தனந் தத்தத்
தனந்தனந் தத்தத் ...... தனதானம்
எழுந்திடுங் கப்புச் செழுங்குரும் பைக்கொத்
திரண்டுகண் பட்டிட் ...... டிளையோர்நெஞ்
சிசைந்திசைந் தெட்டிக் கசிந்தசைந் திட்டிட்
டிணங்குபொன் செப்புத் ...... தனமாதர்
அழுங்கலங் கத்துக் குழைந்துமன் பற்றுற்
றணைந்துபின் பற்றற் ...... றகல்மாயத்
தழுங்குநெஞ் சுற்றுப் புழுங்குபுண் பட்டிட்
டலைந்தலைந் தெய்த்திட் ...... டுழல்வேனோ
பழம்பெருந் தித்திப் புறுங்கரும் பப்பத்
துடன்பெருங் கைக்குட் ...... படவாரிப்
பரந்தெழுந் தொப்பைக் கருந்திமுன் பத்தர்க்
கிதஞ்செய்தொன் றத்திக் ...... கிளையோனே
தழைந்தெழுந் தொத்துத் தடங்கைகொண் டப்பிச்
சலம்பிளந் தெற்றிப் ...... பொருசூரத்
தடம்பெருங் கொக்கைத் தொடர்ந்திடம் புக்குத்
தடிந்திடுஞ் சொக்கப் ...... பெருமாளே.
- எழுந்திடும் கப்புச் செழும் குரும்பைக்கு ஒத்து இரண்டு கண்
பட்டு இட்டு இளையோர் நெஞ்சு இசைந்து இசைந்து
வெளித் தோன்றி எழுகின்றதும், கவர்ச்சி தருவதுமான, செழுமை வாய்ந்த, தென்னங் குரும்பைக்கு இணையாகி, இளைஞர்களின் இரண்டு கண்களும் படுவதாகி அந்த இளையோர்களின் மனம் அதன் மேல் வெகுவாக ஈடுபடச் செய்து, - எட்டிக் கசிந்து அசைந்து இட்டு இட்டு இணங்கு பொன்
செப்புத் தன மாதர்
தாவி, உள்ளம் இளகி, சலனப்படுவதற்கு இடம் கொடுப்பதான அழகிய குடம் போன்ற மார்பகங்களை உடைய விலைமாதர்கள். - அழுங்கல் அங்கத்துக் குழைந்து மன் பற்று உற்று அணைந்து
பின் பற்று அற்று அகல் மாயத்து அழுங்கு நெஞ்சு உற்றுப்
புழுங்கு புண்பட்டிட்டு அலைந்து அலைந்து எய்த்திட்டு
உழல்வேனோ
உருவழியக் கூடிய அங்கங்களின் மேல் மனம் உருகுதல் உற்று, நிரம்ப காம ஆசை கொண்டவனாய் அவர்களை அணைந்து, பிறகு அந்த ஆசை அற்று நீங்குவதான மாய வாழ்க்கையில் வருந்துவதான நெஞ்சத்தைக் கொண்டு, கொதிப்புறும் மனப் புண்ணைக் கொண்டவனாய், மிகவும் அலைச்சல் உற்று இளைப்பு எய்தித் திரிவேனோ? - பழம் பெரும் தித்திப்பு உறும் கரும்பு அப்பத்துடன் பெரும்
கைக்குள் பட வாரிப் பரந்து எழும் தொப்பைக்கு அருந்தி
முன் பத்தர்க்கு இதம் செய்து ஒன்று அத்திக்கு
இளையோனே
பழ வகைகளையும், மிக்க இனிப்பைக் கொண்ட கரும்பு அப்பம் இவைகளையும் பெரிய தும்பிக்கையில் உட்கொள்ளும்படி வாரி, அகன்று வெளித் தோன்றும் தொப்பைக்குள் உண்டு, முன்னதாகவே அடியார்களுக்கு நன்மை பொருந்தி விளங்கும் யானை முக விநாயகருக்குத் தம்பியே, - தழைந்து எழும் தொத்துத் தடம் கை கொண்டு அப்பிச் சலம்
பிளந்து எற்றிப் பொருசூர் அத் தடம் பெரும் கொக்கைத்
தொடர்ந்து இடம் புக்குத் தடிந்திடும் சொக்கப் பெருமாளே.
செழிப்புற்று வெளித் தோன்றி திரண்ட விசாலமான இடங்களைக் கவர்ந்து மூடி, கடல் நீரைக் கிழித்து மோதிச் சண்டைக்கு நின்ற சூரனாகிய அந்த மிகப் பெரிய மாமரத்தைப் பின் தொடர்ந்து, அது இருந்த இடத்தை அணுகிச் சென்று வெட்டி அழித்த அழகிய பெருமாளே.