தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
தனதாத்த தய்ய ...... தனதான
கலைகோட்டு வல்லி விலைகாட்டு வில்ல
ரிவைமார்க்கு மெய்யி ...... லவநூலின்
கலைகாட்டு பொய்ய மலைமாக்கள் சொல்ல
கடுகாட்டி வெய்ய ...... அதிபாரக்
கொலைகோட்டு கள்ளி டறிவோர்க்கு முள்ள
முகையாக்கை நையு ...... முயிர்வாழக்
கொடிகோட்டு மல்லி குரவார்க்கொள் தொல்லை
மறைவாழ்த்து செய்ய ...... கழல்தாராய்
சிலைகோட்டு மள்ளர் தினைகாத்த கிள்ளை
முலைவேட்ட பிள்ளை ...... முருகோனே
திணிகோட்டு வெள்ளி பவனாட்டி லுள்ள
சிறைமீட்ட தில்ல ...... மயில்வீரா
அலைகோட்டு வெள்ள மலைமாக்கள் விள்ள
மலைவீழ்த்த வல்ல ...... அயில்மோகா
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.
- கலை கோட்டு வல்லி விலை காட்டு வில் அரிவைமார்க்கு
வளைத்துக் கட்டிய புடவை சுற்றிய கொடி போன்ற தங்கள் இடுப்புக்கு விலை பேசுகின்ற அழகிய விலைமாதர்க்கு, - மெய்யில் அவ நூலின் கலை காட்டு
உண்மையற்ற பயனற்ற காம நூல்களின் கலை நுணுக்கங்களை விளக்குபவர்களாய், - பொய்ய மலைமாக்கள் சொல்ல கடு காட்டி
பொய் நிறைந்த, மலைவாசிகளான வேடர்களின் பேச்சைப் போல் முரட்டுத் தனமானதும் கோபமானதுமான வார்த்தைகளைப் பேசுபவர்களாய், - வெய்ய அதி பாரக் கொலை கோட்டு கள் இடு
அறிவோர்க்கும்
கொடுமையானதும், அதிக பாரமானதும், கொலை செய்ய வல்லதும், மலை போன்றதுமான மார்பகங்களை உடையவராய், மதுவை ஊட்டுகின்ற கேவலமான புத்தியை உடைய வேசிகளுக்கு, - உள்ள முகை யாக்கை நையும் உயிர் வாழ
உள்ளமும், மொட்டுப் போன்ற உடலும் வேதனைப் படுகின்ற என்னுடைய உயிர் வாழும் பொருட்டு, - கொடி கோட்டு மல்லி குரவார்க் கொள் தொல்லை மறை
வாழ்த்து செய்ய கழல் தாராய்
கொடி மல்லிகை போன்றதும், குரா மலர், ஆத்தி மலர் இவைகளைக் கொண்டதும், பழைய வேதங்கள் வாழ்த்துவதுமான உன் சிவந்த திருவடிகளைத் தந்து அருளுக. - சிலை கோட்டு மள்ளர் தினை காத்த கிள்ளை முலை
வேட்ட பிள்ளை முருகோனே
வில்லை வளைக்கும் குறிஞ்சி நில மக்களாகிய வேடர்களின் தினைப் புனத்தைக் காத்த கிளி போன்ற வள்ளியின் மார்பகங்களை விரும்பிய பிள்ளையாகிய முருகனே, - திணி கோட்டு வெள் இபவன் நாட்டிலுள்ள சிறை மீட்ட
தில்ல(ம்) மயில் வீரா
திண்ணிய தந்தங்களை உடைய வெண்ணிறமான ஐராவதம் என்ற யானையை உடைய இந்திரனின் பொன்னுலகில் உள்ள தேவர்களுக்கு (சூரனால்) ஏற்பட்ட சிறையை நீக்குவித்த, கானகத்தில் வாழும் மயில் வீரனே, - அலை கோட்டு வெள்ள(ம்) மலை மாக்கள் விள்ள மலை
வீழ்த்த வல்ல அயில் மோகா
கடலிடத்தும், மலை இடத்தும் இருந்த வெள்ளக் கணக்கான மலை போன்ற அசுரர்களை வெட்டி அழிக்கவும், கிரெளஞ்சம் எழுகிரி ஆகிய மலைகளை வீழ்த்தவும் வல்ல வேலாயுதப் பிரியனே, - அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல
பெருமாளே.
உனது திருவடியைப் போற்றி, தாமரை மாலையை திருமுடியில் சூட்டும் திறம் வாய்ந்த அடியார்களுக்கு நன்மை செய்யும் பெருமாளே.