திருப்புகழ் · 1219இருநோய் மலத்தை (பொதுப்பாடல்கள்)

irunOymalaththai

தனனா தனத்ததன தனனா தனத்ததன
தனனா தனத்ததன ...... தனதான
இருநோய்ம லத்தைசிவ வொளியால்மி ரட்டியெனை
யினிதாவ ழைத்தெனது ...... முடிமேலே
இணைதாள ளித்துனது மயில்மேலி ருத்தியொளி
ரியல்வேல ளித்துமகி ...... ழிருவோரும்
ஒருவாகெ னக்கயிலை யிறையோன ளித்தருளு
மொளிர்வேத கற்பகந ...... லிளையோனே
ஒளிர்மாம றைத்தொகுதி சுரர்பார்து தித்தருள
உபதேசி கப்பதமு ...... மருள்வாயே
கருநோய றுத்தெனது மிடிதூள்ப டுத்திவிடு
கரிமாமு கக்கடவு ...... ளடியார்கள்
கருதாவ கைக்குவர மருள்ஞான தொப்பைமகிழ்
கருணாக டப்பமல ...... ரணிவோனே
திருமால ளித்தருளு மொருஞான பத்தினியை
திகழ்மார்பு றத்தழுவு ...... மயில்வேலா
சிலைதூளெ ழுப்பிகவ டவுணோரை வெட்டிசுரர்
சிறைமீள விட்டபுகழ் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • இருநோய்மலத்தை
    பிறப்பு, இறப்பு என்ற இரு பெரு நோயையும், ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலத்தையும்,
  • சிவ வொளியால் மிரட்டி
    சிவ தேஜஸ் கொண்டு விரட்டி ஓட்டி,
  • எனை யினிதா அழைத்தெனது முடிமேலே
    என்னை இனிமையாக அழைத்து என் சிரசின் மீது
  • இணைதாள் அளித்து உனது மயில்மேல் இருத்தி
    உன் இரு திருவடிகளைச் சூட்டி, உனது மயிலின் மீது என்னையும் இருக்கச் செய்து,
  • ஒளிர் இயல்வேல் அளித்து மகிழ்
    ஒளி வீசி விளங்கும் வேலினை என் கையில் அளித்து நான் மகிழும்படியாக,
  • இருவோரும் ஒருவாகென
    நாம் இருவரும் (வேறாக இன்றி) ஒன்று படுவோமாக என்று,
  • கயிலை யிறையோன் அளித்தருளும்
    கயிலாச நாதன் சிவபிரான் பெற்று அருளிய
  • ஒளிர்வேத கற்பகநல் இளையோனே
    விளங்கும் வேத நாயகன் கற்பக விநாயக மூர்த்திக்கு நல்ல தம்பியே,
  • ஒளிர்மாமறைத்தொகுதி சுரர்பார்துதித்தருள
    தேவர்களும் பூவுலகில் உள்ளவர்களும் போற்றும்படியாக, பிரகாசமான சிறந்த வேதப்பகுதிகளையும்,
  • உபதேசிகப்பதமும் அருள்வாயே
    உபதேச மொழிகளையும் எனக்குக் கற்பித்து அருள்வாயாக.
  • கருநோய் அறுத்தெனது மிடிதூள்படுத்திவிடு
    மீண்டும் கருவிற் சேரும் பிறவி நோயை ஒழித்து, எனது தரித்திரத்தையும் தூளாக்கி அழித்துவிடக்கூடிய
  • கரிமாமுகக்கடவுள்
    யானையின் சிறந்த முகத்தை உடைய கடவுள்,
  • அடியார்கள் கருதா வகைக்கு வரமருள் ஞான தொப்பை
    அடியார்கள் நினைத்திராத வகைக்கு வரங்களை அள்ளித் தந்தருளும் ஞானமூர்த்தியாம் தொந்திக் கணபதி
  • மகிழ் கருணாகடப்பமலர் அணிவோனே
    உன்னிடம் மகிழ்ச்சி அடைகின்ற கருணாமூர்த்தியே, கடப்பமலர் மாலையை அணிகின்றவனே,
  • திருமால் அளித்தருளும் ஒருஞான பத்தினியை
    திருமால் பெற்றருளிய ஒப்பற்ற ஞான பத்தினியாகிய வள்ளியை,
  • திகழ்மார்புறத்தழுவும் அயில்வேலா
    விளங்கும் மார்பில் பொருந்த அணைத்த கூர் வேலனே,
  • சிலைதூளெழுப்பி கவட அவுணோரை வெட்டி
    கிரெளஞ்ச மலையைத் தூளாக்கி, கபட வஞ்சனை உள்ள அசுரர்களை வெட்டிச் சாய்த்து,
  • சுரர் சிறைமீள விட்டபுகழ் பெருமாளே.
    தேவர்களைச் சிறைமீட்ட பெருமையுடைய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits