திருப்புகழ் 1220 இனமறை விதங்கள் (பொதுப்பாடல்கள்)

தனதனன தந்தனம் தனதனன தந்தனம்
தனதனன தந்தனம் ...... தந்ததான
இனமறைவி  தங்கள்கொஞ்  சியசிறுச  தங்கைகிண் 
கிணியிலகு  தண்டையம்  ......  புண்டரீகம் 
எனதுமன  பங்கயங்  குவளைகுர  வம்புனைந் 
திரவுபகல்  சந்ததஞ்  ......  சிந்தியாதோ 
உனதருளை  யன்றியிங்  கொருதுணையு  மின்றிநின் 
றுளையுமொரு  வஞ்சகன்  ......  பஞ்சபூத 
உடலதுசு  மந்தலைந்  துலகுதொறும்  வந்துவந் 
துழலுமது  துன்புகண்  ......  டன்புறாதோ 
கனநிவத  தந்தசங்  க்ரமகவள  துங்கவெங் 
கடவிகட  குஞ்சரந்  ......  தங்கும்யானை 
கடகசயி  லம்பெறும்  படியவுணர்  துஞ்சமுன் 
கனககிரி  சம்பெழுந்  ......  தம்புராசி 
அனலெழமு  னிந்தசங்  க்ரமமதலை  கந்தனென் 
றரனுமுமை  யும்புகழ்ந்  ......  தன்புகூர 
அகிலபுவ  னங்களுஞ்  சுரரொடுதி  ரண்டுநின் 
றரிபிரமர்  கும்பிடுந்  ......  தம்பிரானே. 
  • இன மறை விதங்கள் கொஞ்சிய
    வேதத் தொகுதியின் வகைகளை விதவிதமாக கொஞ்சிக் கொஞ்சி ஒலித்துக் காட்டுகின்ற
  • சிறு சதங்கை கிண்கிணி இலகு தண்டை அம் புண்டரீகம்
    சிறிய சதங்கை, கிண்கிணி, தண்டை விளங்கும் உன் அழகிய தாமரை போன்ற திருவடியை
  • எனது மன பங்கயம் குவளை குரவம் புனைந்து
    எனது மனம் என்னும் தாமரை, செங்கழுநீர், குராமலர் (இவைகளைக் கொண்டு) அலங்கரித்து
  • இரவு பகல் சந்ததம் சிந்தியாதோ
    இரவும், பகலும், எப்பொழுதும் தியானிக்காதோ?
  • உனது அருளை அன்றி இங்கு ஒரு துணையும் இன்றி நின்று
    உனது திருவருளைத் தவிர இங்கு வேறொரு துணையும் இல்லாமல் நின்று,
  • உளையும் ஒரு வஞ்சகன் பஞ்ச பூத உடல் அது
    வேதனைப்படும் ஒரு வஞ்சகனாகிய நான் மண், நீர், தீ, காற்று, விண் ஆகிய ஐந்து பூதங்களால் ஆகிய உடலை
  • சுமந்து அலைந்து உலகு தொறும் வந்து வந்து
    சுமந்து, அலைந்து, உலகு ஒவ்வொன்றிலும் மீண்டும் மீண்டும் பிறந்து வந்து
  • உழலும் அது துன்பு கண்டு அன்பு உறாதோ
    அலைச்சல் உறும் அந்தத் துன்பத்தைக் கண்டு (உனக்கு என் மீது) அன்பு பிறவாதோ?
  • கனம் நிவத தந்த சங்க்ரம கவள
    பெருமையுடன் உயர்ச்சியை உடைய தந்தங்களைக் கொண்டதும், உணவு உண்டைகளை உண்ணுவதும்,
  • துங்கம் வெம் கடம் விகட குஞ்சரம் தங்கும் யானை
    பரிசுத்தமான, கொடிய மதம் கொண்ட, அழகுள்ள ஐராவதம் என்னும் யானை மீது வீற்றிருக்கும் தேவயானை
  • கடகம் சயிலம் பெறும்படி
    (உனது) கங்கணம் அணிந்த மலை போன்ற திருப்புயத்தைப் பெறும்படியும்,
  • அவுணர் துஞ்ச
    அசுரர்கள் மடியவும்,
  • முன் கனக கிரி சம்பெழுந்து
    முன்பு பொன்மலையாக இருந்த கிரெளஞ்சம் பாழ்பட்டு (அது இருந்த இடத்தில்) சம்புப் புல் எழவும்,
  • அம்பு ராசி அனல் எழ
    கடல் தீப்பற்றி வற்றும்படியாக
  • முனிந்த சங்க்ரம மதலை கந்தன் என்று
    கோபித்தவனும், போருக்கு உற்றவனுமாகிய பிள்ளை கந்தன் என்று
  • அரனும் உமையும் புகழ்ந்து அன்பு கூர
    சிவபெருமானும் பார்வதியும் (உன்னைப்) புகழ்ந்து அன்பு கூர்ந்திருக்க,
  • அகில புவனங்களும் சுரரொடு திரண்டு நின்று
    சகல பூமியில் உள்ளவர்களும் தேவர்களுடன் கூட்டமாய்க் கூடி நின்று,
  • அரி பிரமர் கும்பிடும் தம்பிரானே.
    திருமாலும், பிரமனும் வணங்கும் தலைவனே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com