தனதன தான தானன, தனதன தான தானன
தனதன தான தானன ...... தனதான
இருகுழை மீது தாவடி யிடுவன வோதி நீழலி
னிடமது லாவி மீள்வன ...... நுதல்தாவி
இழிவன காம வேதமு மொழிவன தாரை வேலென
எறிவன காள கூடமு ...... மமுதாகக்
கருகிய நீல லோசன அபிநய மாத ரார்தரு
கலவியில் மூழ்கி வாடிய ...... தமியேனுங்
கதிபெற ஈட றாதன பதிபசு பாச மானவை
கசடற வேறு வேறுசெய் ...... தருள்வாயே
ஒருபது பார மோலியு மிருபது வாகு மேருவு
முததியில் வீழ வானர ...... முடனேசென்
றொருகணை யேவு ராகவன் மருகவி பூதி பூஷணர்
உணருப தேச தேசிக ...... வரையேனற்
பரவிய கான வேடுவர் தருமபி ராம நாயகி
பரிபுர பாத சேகர ...... சுரராஜன்
பதிகுடி யேற வேல்தொடு முருகம யூர வாகன
பரவச ஞான யோகிகள் ...... பெருமாளே.
- இரு குழை மீது தாவடி இடுவன ஓதி நீழலின் இடமது
உலாவி மீள்வன
காதில் உள்ள இரண்டு குண்டலங்களின் மீதிலும் தாவிப் போர் புரிபவனவும், கூந்தலின் நிழலிடத்தில் உலாவி மீண்டு வருவனவும், - நுதல் தாவி இழிவன காம வேதமும் மொழிவன தாரை வேல்
என எறிவன
நெற்றியின் மேலும் கீழுமாக ஏறியும் இறங்குபவனவாயும் உள்ள, காம சாஸ்திரத்தை எடுத்து உரைக்கும் கூர்மையான வேல் பாய்வது போலப் பாய்வனவும், - காள கூடமும் அமுதாகக் கருகிய நீல லோசன
ஆலகால விஷமும் (அவற்றோடு ஒப்பிடும்போது) அமுது என்று சொல்லும்படியான குணத்தை உடையவையும், கரிய நீல நிறமுள்ளவனவும் ஆகிய கண்களை உடைய - அபிநய மாதரார் தரு கலவியில் மூழ்கி வாடிய தமியேனும்
அழகிய நாடகக் கணிகையர் தருகின்ற புணர்ச்சி இன்பத்தில் முழுகி வாடிக் கிடக்கும் திக்கற்றவனாகிய தனியேனாகிய நானும், - கதி பெற ஈடு அறாதன பதி பசு பாசம் ஆனவை கசடு அற
வேறு வேறு செய்து அருள்வாயே
நற்கதி பெறுவதற்காக, தன்னிகரற்ற கடவுள், உயிர், தளை (கட்டு) எனப்படும் இம் மூன்றின் இலக்கணங்களை ஐயம் இல்லாத வகையில் தனித்தனியாக விளக்கி எனக்கு அருள் செய்வாயாக. - ஒரு பது பாரம் மோலியும் இருபது வாகு மேருவும் உததியில்
வீழ வானரம் உடனே சென்று
(ராவணனுடைய) ஒரு பத்து பாரமான மணி முடிகளும், இருபது மேருவைப் போன்ற தோள் மலைகளும் கடலில் விழவும், குரங்குப் படையுடன் போய் - ஒரு கணை ஏவு ராகவன் மருக
ஒப்பற்ற அம்பைச் செலுத்திய ராமனின் மருகனே, - விபூதி பூஷணர் உணர உபதேச தேசிக
திருநீறு அணிந்த சிவபெருமான் உணர்ந்து கொள்ள உபதேசம் செய்த குரு மூர்த்தியே, - வரை ஏனல் பரவிய கான வேடுவர் தரும் அபிராம நாயகி
பரிபுர பாத சேகர
வள்ளி மலையில் தினைப் புனத்தே, (உன்னைக்) குல தெய்வமாகப் போற்றித் துதித்த, காட்டில் உள்ள வேடர்கள் வளர்த்த, அழகிய வள்ளி நாயகியின் சிலம்பு அணிந்த திருவடிகளைத் தலையில் சூடினவனே, - சுர ராஜன் பதி குடி ஏற வேல் தொடு முருக மயூர வாகன
தேவர்களுக்கு அரசனான இந்திரன் பொன்னுலகில் குடி ஏறுவதற்காக வேலைச் செலுத்திய முருகனே, மயில் வாகனனே, - பரவச ஞான யோகிகள் பெருமாளே.
ஆனந்த நிலையில் இருக்கும் ஞான யோகிகளின்* பெருமாளே.