தானனா தத்த தானனா தத்த
தானனா தத்த ...... தனதான
ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம
மானபூ வைத்து ...... நடுவேயன்
பானநூ லிட்டு நாவிலே சித்ர
மாகவே கட்டி ...... யொருஞான
வாசம்வீ சிப்ர காசியா நிற்ப
மாசிலோர் புத்தி ...... யளிபாட
மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர
வாளபா தத்தி ...... லணிவேனோ
மூசுகா னத்து மீதுவாழ் முத்த
மூரல்வே டிச்சி ...... தனபார
மூழ்குநீ பப்ர தாபமார் பத்த
மூரிவே ழத்தின் ...... மயில்வாழ்வே
வீசுமீ னப்ப யோதிவாய் விட்டு
வேகவே தித்து ...... வருமாசூர்
வீழமோ திப்ப ராரைநா கத்து
வீரவேல் தொட்ட ...... பெருமாளே.
- ஆசைகூர் பத்தனேன்
உன் மீது ஆசை மிகுந்த பக்தியை உடைய நான் - மனோ பத்மமானபூ வைத்து
மனம் எனப்படும் தாமரை மலரை வைத்து, - நடுவேயன்பானநூலிட்டு
இடையில் அன்பு என்னும் நாரைக் கொண்டு, - நாவிலே சித்ரமாகவே கட்டி
நாக்கு என்னும் இடத்திலே அழகான ஒரு மாலையைத் தொடுத்து, - ஒருஞான வாசம்வீசி
அந்த மாலையின் மீது ஒப்பற்ற ஞானம் என்னும் நறுமணத்தைத் தடவி, - ப்ரகாசியா நிற்ப
அந்த மாலை மிக்க ஒளியுடன் விளங்கவும், - மாசிலோர் புத்தி யளிபாட
அதைச் சுற்றி குற்றமற்ற ஒரு அறிவு என்ற வண்டு மொய்த்துப் பாடவும், - மாத்ருகா புஷ்ப மாலை
மாத்ருகா மந்திர* மாலையான இந்தப் பூமாலையை - கோல ப்ரவாள பாதத்தில் அணிவேனோ
அழகிய பவளம் போல் சிவந்த திருவடிகளில் அணிவிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ? - மூசுகானத்து மீதுவாழ்
சிள்வண்டுகள் மொய்க்கும் காட்டிலே வாழ்கின்ற, - முத்த மூரல்வே டிச்சி தனபார மூழ்கு
முத்தை நிகர்த்த அழகிய பற்களை உடைய, வேடர் குலப்பெண் வள்ளியின் மார்பகத்தில் முழுகி அழுந்திக் கிடக்கும், - நீபப்ரதாப மார்பத்த
கடப்ப மாலையைச் சிறப்பாக அணியும், மார்பை உடைய ஐயனே, - மூரிவே ழத்தின் மயில்வாழ்வே
வலிமையான ஐராவத யானை வளர்த்த மயிலின் சாயலுள்ள தேவயானையின் மணவாளனே, - வீசுமீன் அப் பயோதிவாய் விட்டு வேக
அலை வீசும், மீன்கள் மிகுந்த, கடல் பேரொலியோடு வெந்து வற்ற, - வேதித்து வருமாசூர் வீழ
தேவர்களை வருத்தித் துன்புறுத்தி வந்த பெரும் சூரன் அழிபட்டு விழ, - மோதிப் பராரை நாகத்து
தாக்குதல் செய்து, பருத்த அடிப்பாகத்தை உடைய கிரெளஞ்சமலை மீது - வீரவேல் தொட்ட பெருமாளே.
வீரம் பொருந்திய வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.