திருப்புகழ் 1213 ஆசைக் கொளுத்தி (பொதுப்பாடல்கள்)

தானத் தனத்ததன தானத் தனத்ததன
தானத் தனத்ததன ...... தனதான
ஆசைக்  கொளுத்திவெகு  வாகப்  பசப்பிவரு 
மாடைப்  பணத்தையெடெ  ......  னுறவாடி 
ஆரக்  கழுத்துமுலை  மார்பைக்  குலுக்கிவிழி 
யாடக்  குலத்துமயில்  ......  கிளிபோலப் 
பேசிச்  சிரித்துமயிர்  கோதிக்  குலைத்துமுடி 
பேதைப்  படுத்திமய  ......  லிடுமாதர் 
பீறற்  சலத்துவழி  நாறப்  படுத்தியெனை 
பீடைப்  படுத்துமய  ......  லொழியாதோ 
தேசத்  தடைத்துபிர  காசித்  தொலித்துவரி 
சேடற்  பிடுத்துதறு  ......  மயில்வீரா 
தேடித்  துதித்தஅடி  யார்சித்  தமுற்றருளு 
சீர்பொற்  பதத்தஅரி  ......  மருகோனே 
நேசப்  படுத்தியிமை  யோரைக்  கெடுத்தமுழு 
நீசற்  கனத்தமுற  ......  விடும்வேலா 
நேசக்  குறத்திமய  லோடுற்  பவித்தபொனி 
நீர்பொற்  புவிக்குள்மகிழ்  ......  பெருமாளே. 
  • ஆசைக் கொளுத்தி வெகுவாகப் பசப்பி வரும் மாடைப் பணத்தை எடு என உறவாடி
    காமத்தை மூட்டி, வெகு பக்குவமாக இனிமையாகப் பேசி, வரவேண்டிய பொற்காசை எடுத்துத்தா என்று உரிமையுடன் நட்புப் பேச்சுக்கள் பேசி,
  • ஆரக் கழுத்து முலை மார்பைக் குலுக்கி விழி ஆடக் குலத்து மயில் கிளி போலப் பேசிச் சிரித்து மயிர் கோதிக் குலைத்து முடி பேதைப் படுத்தி மயல் இடு மாதர்
    முத்து மாலை அணிந்த கழுத்தையும், மார்பகங்களையும் குலுக்கி, கண்கள் அசைய, சிறப்புள்ள மயில் போல உலவியும் கிளி போலப் பேசியும், சிரித்தும், தலை மயிரைக் கோதிவிட்டும், அவிழ்த்தும் (எனக்குப்) பேதைமையை ஊட்டி மயக்கத்தைத் தருகின்ற விலைமாதர்களின்
  • பீறல் சலத்து வழி நாறப் படுத்தி எனை பீடைப் படுத்து மயல் ஒழியாதோ
    கிழிபட்டதும், சிறு நீர் பிரியும் நாற்றமுடைய வழியையும் வெளிக்காட்டி என்னைத் துன்பத்துக்கு ஆளாக்கும் காம மயக்கம் என்னை விட்டு நீங்காதோ?
  • தேசம் தடைத்து பிரகாசித்து ஒலித்து வரி சேடன் பிடித்து உதறு மயில் வீரா
    ஒளிமிக்க மாணிக்கத்தைத் தன்னுள் கொண்டதும், பிரகாசம் உடையதும், சீறி ஒலிப்பதும், கோடுகளை உடையதுமான ஆதிசேஷனைப் பிடித்து உதறி எறியும் மயில் மேல் அமரும் வீரனே,
  • தேடித் துதித்த அடியார் சித்தம் உற்று அருளு(ம்) சீர் பொன் பதத்த அரி மருகோனே
    நீ வீற்றிருக்கும் தலங்களைத் தேடி உன்னைப் போற்றும் அடியார்களுடைய உள்ளத்தில் நின்று அருள் புரியும், சிறப்பையும் அழகையும் கொண்ட திருவடியை உடையவனே, திருமாலின் மருகனே,
  • நேசப் படுத்தி இமையோரைக் கெடுத்த முழு நீசற்கு அனத்தம் உற விடும்வேலா
    அன்பே இல்லாமல் தேவர்களைக் கெடுத்த முற்றிலும் இழிவான அசுரர்களுக்கு கேடு உண்டாகும்படியாக செலுத்திய வேலாயுதனே,
  • நேசக் குறத்தி மயலோடு உற்பவித்த பொ(ன்)னி நீர் பொன் புவிக்குள் மகிழ் பெருமாளே.
    அன்பு நிறைந்த குறப் பெண்ணாகிய வள்ளி உன் மீது காதலுடன் பிறந்த இடமாகிய வள்ளி மலையில் மகிழ்ந்து வீற்றிருப்பவனே, பொன்னி (காவேரி) ஆறு பாயும் அழகிய புவிக்குள் (அதாவது, வயலூர், திரிசிராப்பள்ளி, சுவாமி மலை முதலிய தலங்களில்) மகிழ்ச்சி கொள்ளும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com