தானான தான தனதன தானான தான தனதன
தானான தான தனதன ...... தனதான
ஆசார வீன னறிவிலி கோபாப ராதி யவகுண
னாகாத நீச னநுசிதன் ...... விபரீதன்
ஆசாவி சார வெகுவித மோகாச ரீத பரவச
னாகாச நீர்ம ணனல்வளி ...... யுருமாறி
மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம்
வாயாத பாவி யிவனென ...... நினையாமல்
மாதாபி தாவி னருணல மாறாம காரி லெனையினி
மாஞான போத மருள்செய ...... நினைவாயே
வீசால வேலை சுவறிட மாசூரர் மார்பு தொளைபட
வேதாள ராசி பசிகெட ...... அறைகூறி
மேகார வார மெனஅதிர் போர்யாது தான ரெமபுர
மீதேற வேல்கொ டமர்செயு ...... மிளையோனே
கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரை
கூறாம னீய அவனுகர் ...... தருசேடங்
கோதாமெ னாம லமுதுசெய் வேதாக மாதி முதல்தரு
கோலோக நாத குறமகள் ...... பெருமாளே.
- ஆசார வீனன் அறிவிலி
ஒழுக்கக் குறைவு உடையவன், அறிவில்லாதவன், - கோப அபராதி யவகுணன்
கோபம் காரணமாகக் குற்றங்கள் பல செய்பவன், கெட்ட குணத்தை உடையவன், - ஆகாத நீசன் அநுசிதன்
யாருக்கும் பயனாகாத இழிந்த குணத்தவன், தகாத காரியங்களைச் செய்யும் அசுத்தன், - விபரீதன்
மாறுபாடான புத்தியை உடையவன், - ஆசாவிசார வெகுவித மோக ஆசரீத பரவசன்
(மண், பெண், பொன் என்ற) மூவாசைகளிலே எண்ணத்தை வைத்து, பலவிதமான ஆசைச் செயல்களைச் செய்து தன்வசம் இழந்தவன், - ஆகாச நீர்மண் அனல்வளி யுருமாறி
ஆகாயம், நீர், மண், தீ, காற்று என்ற பஞ்சபூதச் சேர்க்கையால் வெவ்வேறு பிறவிகளில் பல உடல்களை எடுத்து, - மாசான நாலெண் வகைதனை
குற்றங்களுடன் கலந்த முப்பத்திரண்டு* தத்துவங்களைக் கொண்ட - நீநானெனாத அறிவுளம் வாயாத பாவி
இந்த உடல்களை நீ என்பதும் நான் என்பதுமான பிரிவைக் காணாத, ஞான உள்ளம் வாய்க்கப் பெறாத பாவி, - இவனெனநினையாமல்
இத்தனையும் இவன் என்று நினைத்து என்னை நீ ஒதுக்கி விடாமல், - மாதாபிதாவின் அருள் நல மாறா மகாரிலெனையினி
தாய் தந்தையரின் அருள் நிறைந்த உபகாரச் செயல்கள் மாறாத குழந்தைகள் போல, உன் குழந்தையாகிய என்மீது இனிமேலாயினும் - மாஞான போதம் அருள்செய நினைவாயே
சிறந்த ஞானோபதேசத்தை அருள்வதற்கு உன் திருவுள்ளத்தில் நினைப்பாயாக. - வீசால வேலை சுவறிட
அகன்ற சமுத்திரமானது வற்றிப் போகவும், - மாசூரர் மார்பு தொளைபட
பெரிய சூரன் முதலியோரது மார்புகள் தொளைபடவும், - வேதாள ராசி பசிகெட
வேதாள கணங்களின் பசி (சூர சம்ஹாரத்தால்) தீர்ந்திடவும், - அறைகூறி
போருக்கு வாருங்கள் என்று அசுரர்களைக் கூவி அழைத்து, - மேக ஆரவார மெனஅதிர் போர்
மேகங்களின் பெரும் ஆரவாரமான இடியோசை போல முழங்கும் போரில், - யாது தானர்** எமபுர மீதேற
அரக்கர்கள் யம பட்டணம் போய்ச் சேரும்படியாக, - வேல்கொடு அமர்செயும் இளையோனே
வேலைக் கொண்டு போர் செய்த இளையோனே, - கூசாது வேடன் உமிழ்தரு நீராடி
கொஞ்சமும் தயங்காது வேடன் கண்ணப்பன் வாயினின்று உமிழ்ந்த நீர் அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டு, - ஊனு ணெனுமுரை கூறா
இந்த மாமிசம் சுவையானது, இதை உண்டருள்க என்று அவன் கூறிய சொல்லைக் கேட்டு, - மன் ஈய அவனுகர் தருசேடம்
நிரம்பவும் அவன் தருவதை, அந்த வேடன் எச்சில் செய்து தந்த மீதம் - கோதாம் எனாமல் அமுதுசெய்
குற்றமுள்ளது என்று பாவிக்காமல் அமுதாக எண்ணி உண்டு அருளியவரும், - வேத ஆகமாதி முதல்தரு கோ
வேதங்களுக்கும் ஆகமங்களுங்கும் ஆதி முதல்வர் ஆனவருமான சிவபிரான் பெற்றெடுத்த அரசனே, - லோக நாத குறமகள் பெருமாளே.
இந்த உலகத்துக்கெல்லாம் நாதனே, குறமகள் வள்ளியின் பெருமாளே.