தனன தான தந்த தந்த தனன தான தந்த தந்த
தனன தான தந்த தந்த ...... தனதான
அளக பார முங்கு லைந்து அரிய பார்வை யுஞ்சி வந்து
அணுகி யாக மும்மு யங்கி ...... யமுதூறல்
அதர பான மும்நு கர்ந்து அறிவு சோர வும்மொ ழிந்து
அவச மாக வும்பு ணர்ந்து ...... மடவாரைப்
பளக னாவி யுந்த ளர்ந்து பதறு மாக மும்ப யந்து
பகலி ராவை யும்ம றந்து ...... திரியாமற்
பரம ஞான முந்தெ ளிந்து பரிவு நேச முங்கி ளர்ந்து
பகரு மாறு செம்ப தங்கள் ...... தரவேணும்
துளப மாய னுஞ்சி றந்த கமல வேத னும்பு கழ்ந்து
தொழுது தேட ரும்ப்ர சண்ட ...... னருள்பாலா
சுரர்கள் நாய கன்ப யந்த திருவை மாம ணம்பு ணர்ந்து
சுடரு மோக னம்மி குந்த ...... மயில்பாகா
களப மார்பு டன்த யங்கு குறவர் மாது டன்செ றிந்து
கலவி நாட கம்பொ ருந்தி ...... மகிழ்வோனே
கடிய பாத கந்த விர்ந்து கழலை நாடொ றுங்கி ளர்ந்து
கருது வார்ம னம்பு குந்த ...... பெருமாளே.
- அளக பாரமும் குலைந்து அரிய பார்வையும் சிவந்து அணுகி
ஆகமும் முயங்கி
கூந்தல் பாரமும் கலைந்து, அருமையான கண் பார்வையும் செந்நிறம் உற்று, நெருங்கிச் சென்று, - அமுது ஊறல் அதர பானமும் நுகர்ந்து அறிவு சோரவும்
மொழிந்து அவசமாகவும் புணர்ந்து மடவாரைப் பளகன்
அமுது போல் இனித்து ஊறும் வாயிதழ் ஊறலைப் பருகி அனுபவித்து, அறிவு தடுமாற்றத்துடன் பேசி, தன்வசமின்றி விலைமாதர்களைப் புணரும் குற்றமுள்ளவன் நான். - ஆவியும் தளர்ந்து பதறும் ஆகமும் பயந்து பகல் இராவையும்
மறந்து திரியாமல்
ஆவியும் தளர்ந்து, கலக்கமுற்ற உடலும் பயந்து, இராப் பகல் பிரிவினையையும் மறந்து நான் அலைச்சல் அடையாமல், - பரம ஞானமும் தெளிந்து பரிவு நேசமும் கிளர்ந்து பகருமாறு
செம் பதங்கள் தர வேணும்
மேலான ஞானத்தைத் தெளிந்து உணர்ந்து, அன்பும் நட்பும் கலந்து மேலெழுந்து, உன்னைப் போற்றிப் புகழுமாறு, உனது செவ்விய திருவடிகளைத் தர வேண்டும். - துளப மாயனும் சிறந்த கமல வேதனும் புகழ்ந்து தொழுது
தேட அரும் ப்ரசண்டன் அருள்பாலா
துளசி மாலை அணிந்த திருமாலும், சிறந்த தாமரை மேல் வீற்றிருக்கும் பிரமனும் புகழ்ந்து வணங்கித் தேடுதற்கு அரியரான பெரு வீரன் சிவபெருமான் அருளிய குழந்தையே, - சுரர்கள் நாயகன் பயந்த திருவை மா மணம் புணர்ந்து
சுடரும் மோகனம் மிகுந்த மயில்பாகா
தேவர்களின் தலைவனான இந்திரன் பெற்ற அழகிய தேவயானையைச் சிறப்புடன் திருமணம் செய்து கூடியவனே, விளங்கும்படியான கவர்ச்சி மிகப் பெற்ற மயில் வாகனனே, - களப மார்புடன் தயங்கு குறவர் மாதுடன் செறிந்து கலவி
நாடகம் பொருந்தி மகிழ்வோனே
கலவைச் சாந்து பூசின மார்புடன் விளங்கும், குறவர் பெண்ணாகிய வள்ளியுடன் நெருங்கிப் பழகிச் சேர்க்கை நாடகம் உடையவனாய் மகிழ்ந்தவனே, - கடிய பாதகம் தவிர்ந்து கழலை நாள் தொறும் கிளர்ந்து
கருதுவார் மனம் புகுந்த பெருமாளே.
பொல்லாத பாபச் செயல்களை விட்டுவிட்டு, உன் திருவடியை நாள் தோறும் நிரம்பக் கருத்தில் தியானிக்கும் உன் அடியார்களது மனதில் புகுந்து விளங்கும் பெருமாளே.