திருப்புகழ் 1206 அயில் விலோசனம் (பொதுப்பாடல்கள்)

தனன தானனம் தனன தானனம்
தனன தானனம் ...... தனதான
அயில்வி  லோசனங்  குவிய  வாசகம் 
பதற  ஆனனங்  ......  குறுவேர்வுற் 
றளக  பாரமுங்  குலைய  மேல்விழுந் 
ததர  பானமுண்  ......  டியல்மாதர் 
சயில  பாரகுங்  குமப  யோதரந் 
தழுவு  மாதரந்  ......  தமியேனால் 
தவிரொ  ணாதுநின்  கருணை  கூர்தருந் 
தருண  பாதமுந்  ......  தரவேணும் 
கயிலை  யாளியுங்  குலிச  பாணியுங் 
கமல  யோனியும்  ......  புயகேசன் 
கணப  ணாமுகங்  கிழிய  மோதுவெங் 
கருட  வாகனந்  ......  தனிலேறும் 
புயலி  லேகரும்  பரவ  வானிலும் 
புணரி  மீதினுங்  ......  கிரிமீதும் 
பொருநி  சாசரன்  தனது  மார்பினும் 
புதைய  வேல்விடும்  ......  பெருமாளே. 
  • அயில் விலோசனம் குவிய வாசகம் பதற ஆனனம் குறு வேர்வுற
    வேல் போன்ற கண்கள் குவியவும், பேச்சு பதறவும், முகத்தில் சிறு வேர்வை துளிர்க்கவும்,
  • அளக பாரமும் குலைய மேல் விழுந்து அதர பானம் உண்டு
    இறுகக் கட்டியிருந்த கூந்தல் பாரம் கலையவும், மேல் விழுந்து வாயிதழ் ஊறலைப் பருகி,
  • இயல் மாதர் சயில பார(ம்) குங்கும பயோதரம் தழுவும் ஆதரம் தமியேனால் தவிர ஒணாது நின் கருணை கூர் தரும் தருண பாதமும் தரவேணும்
    அழகிய வேசியர்களின் மலை போன்று கனத்த, குங்குமம் கொண்ட மார்பகங்களைத் தழுவ வேண்டும் என்கின்ற ஆசை அடியேனால் நீக்க முடியாததாய் இருக்கின்றது. (இவ்வாசையை நீக்க) உனது கருணை மிக்குள்ள இளமை பொலியும் திருவடிகளை எனக்குத் தந்தருள வேண்டும்.
  • கயிலை யாளியும் குலிச பாணியும் கமல யோனியும் புயகேசன் கண பணா முகம் கிழிய மோது வெம் கருட வாகனம் தனில் ஏறும் புயல் இலேகரும் பரவ
    கயிலைக்குத் தலைவனான சிவபெருமானும், வஜ்ராயுத கரத்தனான இந்திரனும், திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரமனும், பாம்புகளுக்குத் தலைவனான ஆதிசேஷனுடைய கூட்டமான படங்களின் முகம் அறும்படி மோத வல்ல கொடிய கருட வாகனத்தின் மேல் ஏறும் மேக வண்ணனாம் திருமாலும், தேவர்களும் போற்ற,
  • வானிலும் புணரி மீதினும் கிரி மீதும் பொரு நிசாசரன் தனது மார்பினும் புதைய வேல் விடும் பெருமாளே.
    ஆகாயத்திலும், கடல் மீதும், மலை மீதும் இருந்து சண்டை செய்யும் அசுரனாகிய சூரன் மார்பிலே புதைந்து அழுந்தும்படி வேலைச் செலுத்திய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com