திருப்புகழ் · 1205அப்படி ஏழும் ஏழும் (பொதுப்பாடல்கள்)appadiEzhumEzhum
தத்தன தான தானன தத்தன தான தானன
தத்தன தான தானன ...... தனதான
Thiruppugazh Anbargal
அப்படி யேழு மேழும்வ குத்துவ ழாது போதினி
னக்ரம்வி யோம கோளகை ...... மிசைவாழும்
அக்ஷர தேவி கோவின்வி திப்படி மாறி மாறிய
னைத்துரு வாய காயம ...... தடைவேகொண்
டிப்படி யோனி வாய்தொறு முற்பவி யாவி ழாவுல
கிற்றடு மாறி யேதிரி ...... தருகாலம்
எத்தனை யூழி காலமெ னத்தெரி யாது வாழியி
னிப்பிற வாது நீயருள் ...... புரிவாயே
கற்பக வேழ மேய்வன பச்சிள ஏனல் மீதுறை
கற்புடை மாது தோய்தரு ...... மபிராம
கற்புர தூளி லேபன மற்புய பாக சாதன
கற்பக லோக தாரண ...... கிரிசால
விப்ரச மூக வேதன பச்சிம பூமி காவல
வெட்சியு நீப மாலையு ...... மணிவோனே
மெத்திய ஆழி சேறெழ வெற்பொடு சூர னீறெழ
விக்ரம வேலை யேவிய ...... பெருமாளே.
பத உரைword meanings
- அப்படி ஏழும் ஏழும் வகுத்து வழாது போதினின் அக்ரம
அவ்வாறாக பதினான்கு உலகங்களும்* தவறில்லாமல் படைத்து, தாமரை மலரில் அமர்ந்து முதன்மை ஸ்தானம் வகிப்பவரும், - வியோம கோளகை மிசை வாழும்
அண்ட கோளத்திலும் வாழ்கின்றவரும், - அக்ஷர தேவி கோவின் விதிப்படி மாறி மாறி
சரஸ்வதி தேவியின் கணவனுமான பிரமதேவன் எழுதியுள்ள விதியின்படி, (பிறப்புக்கள்) மாறி மாறி, - அனைத்து உரு ஆய காயம் அது அடைவே கொண்டு
எல்லா உருவங்களையும் கொண்ட உடல்களை முறையே நான் எடுத்து, - இப்படி யோனி வாய் தொறும் உற்பவியா விழா
இவ்வாறாக (எண்பத்து நான்கு லக்ஷம்) கருக்குழி பேதங்களிலும் தோன்றிப் பிறந்தும், பின்னர் இறந்தும், - உலகில் தடுமாறியே திரிதரு காலம் எத்தனை ஊழி காலம்
எனத் தெரியாது
இங்ஙனம் உலகில் தடுமாற்றம் அடைந்து அலைகின்ற காலம் எத்தனை ஊழி காலம் என்று எனக்குத் தெரியாது. - வாழி இனிப் பிறவாது நீ அருள் புரிவாயே
(இறைவனே) நீ வாழ்வாயாக. நான் இனிப் பிறவாமல் நீ அருள் புரிவாயாக. - கற்பகம் வேழம் ஏய்வன பச்சிள ஏனல் மீது உறை
தென்னை, கரும்பு இவைகளுக்கு ஒப்பாக (நீண்டு வளர்ந்துள்ள) பசுமையான இளந் தினைகள் உள்ள புனத்தில் வீற்றிருந்த - கற்புடை மாது தோய் தரும் அபிராம
கற்பு நிறைந்த வள்ளி தழுவும் அழகனே, - கற்புர தூளி லேபன மல் புய
பச்சைக் கற்பூரப் பொடி பூசிய, மல் யுத்தத்துக்கு ஏற்ற புயத்தை உடையவனே, - பாக சாதன கற்பகலோக தாரண கிரி சால
இந்திரனுடைய (நினைத்ததைத் தரும்) கற்பக மரங்கள் உள்ள பொன்னுலகத்துக்கு நிலைத்த வாழ்வைத் தந்தவனே, மலைக் கூட்டத்தில் விளங்குபவனே, - விப்ர சமூக வேதன பச்சிம பூமி காவல
அந்தணர் கூட்டத்தில் இருப்பவனே, வேதத்தில் உள்ளவனே, மேற் புறத்தில் உள்ள விண்ணுலகின் காவலனே, - வெட்சியு(ம்) நீப மாலையும் அணிவோனே
வெட்சியும் கடப்ப மாலையையும் அணிபவனே, - மெத்திய ஆழி சேறு எழ வெற்பொடு சூரன் நீறு எழ
நிரம்பிய கடல் சேறுபட்டு எழவும், எழு கிரிகளும் சூரனும் பொடிபட்டு அழியவும், - விக்ரம வேலை ஏவிய பெருமாளே.
பராக்ரமம் பொருந்திய வேலைச் செலுத்திய பெருமாளே.
குறிப்புகள் · notes
- * பதினான்கு உலகங்கள் கீழ் உலகங்கள் ஏழு: அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம். மேல் உலகங்கள் ஏழு: பூலோகம், புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம்.
- * The lower seven worlds are: athalam, vithalam, suthalam, tharAthalam, mahAthalam, rasAthalam and pAthAlam.
- The upper seven worlds are: bUlOgam, bhuvalOgam, suvalOgam, janalOgam, thabOlOgam, mahAlOgam and sathyalOgam.
