திருப்புகழ் · 1204அடி இல் விடாப் பிணம் (பொதுப்பாடல்கள்)adiilvidAppiNam
தனதன தாத்தன தனதன தாத்தன
தனதன தாத்தன ...... தனதான
சீமான் சிவானி, seemanshivani
அடியில்வி டாப்பிண மடையவி டாச்சிறி
தழியுமுன் வீட்டுமு ...... னுயர்பாடை
அழகொடு கூட்டுமி னழையுமின் வார்ப்பறை
யழுகையை மாற்றுமி ...... னொதியாமுன்
எடுமினி யாக்கையை யெனஇடு காட்டெரி
யிடைகொடு போய்த்தமர் ...... சுடுநாளில்
எயினர்கு லோத்தமை யுடன்மயில் மேற்கடி
தெனதுயிர் காத்திட ...... வரவேணும்
மடுவிடை போய்ப்பரு முதலையின் வாய்ப்படு
மதகரி கூப்பிட ...... வளையூதி
மழைமுகில் போற்கக பதிமிசை தோற்றிய
மகிபதி போற்றிடு ...... மருகோனே
படர்சடை யாத்திகர் பரிவுற ராட்சதர்
பரவையி லார்ப்பெழ ...... விடும்வேலாற்
படமுனி யாப்பணி தமனிய நாட்டவர்
பதிகுடி யேற்றிய ...... பெருமாளே.
பத உரைword meanings
- அடி இல் விடாப் பிணம் அடைய விடாச் சிறிது அழியு முன்
வீட்டின் உள்ளே விடாது கிடந்திருக்கும் பிணத்தை அங்கேயே இருக்க விடாமல், கொஞ்சம் அழுகிப் போவதற்கு முன்னமேயே - வீட்டு முன் உயர் பாடை அழகொடு கூட்டுமின் அழையுமின்
வார்ப்பறை அழுகையை மாற்றுமி(ன்)
வீட்டுக்கு எதிரில் சிறப்புடன் பாடையை அழகாகக் கட்டுங்கள். நன்கு கட்டப்பட்ட பறை வாத்தியங்களை வரவழையுங்கள். அழுகையை நிறுத்துங்கள். - நொதியா முன் எடுமின் யாக்கையை என இடு காட்டு எரி
இடை கொ(ண்)டு போய்த் தமர் சுடுநாளில்
பிணம் கெட்டு அழியும் முன்னர் உடலை எடுத்துச் செல்லுங்கள். - என்று கூறி சுடுகாட்டில் தீயின் இடையே கொண்டு போய்ச் சுற்றத்தார் சுட்டெரிக்கும் அந்த நாளில், - எயினர் குல உத்தமை உடன் மயில் மேல் கடிது எனது உயிர்
காத்திட வரவேணும்
வேடுவர் குலத்தைச் சேர்ந்த, உத்தம குணம் உடைய, வள்ளியோடு மயில் மேல் ஏறி விரைவாக என் உயிரைக் காப்பதற்கு வரவேண்டும். - மடு இடை போய்ப் பரு முதலையின் வாய்ப்படு மத கரி
கூப்பிட வளை ஊதி
மடு இருந்த இடத்துக்குப் போய் பெரிய முதலையின் வாயில் அகப்பட்டிருந்த மதயானையாகிய கஜேந்திரன் கூப்பிட, சங்கை ஊதுபவனும், - மழை முகில் போல் கக பதி மிசை தோற்றிய மகிபதி
போற்றிடு மருகோனே
கரிய மேகம் போன்றவனும், பட்சிகளின் அரசனான கருடன் மேல் ஏறி வந்தவனும், இப்பூவுலகின் தலைவனுமாகிய திருமால் துதித்து ஏத்தும் மருகனே, - படர் சடை ஆத்திகர் பரி உற ராட்சதர் பரவையில் ஆர்ப்பு
எழ விடும் வேலால் பட முனியா
பரந்த சடையை உடைய, கடவுள் உண்டென்று நம்புவோர்க்குப் பொருளாயுள்ள, சிவபெருமான் அன்பு கொள்ளும் வகையில், அரக்கர்கள் கடலில் கூச்சலிட்டு அலறும்படிச் செலுத்திய வேலால் அவர்கள் அழியும்படி கோபித்து, - பணி தமனிய நாட்டவர் பதி குடி ஏற்றிய பெருமாளே.
தன்னைப் பணிந்த, பொன்னுலகத்தில் வாழும் தேவர்களின் தலைவனான, இந்திரனை மீண்டும் குடி ஏற்றிய பெருமாளே.
