தனதான தந்த தந்த தனதான தந்த தந்த
தனதான தந்த தந்த ...... தனதான
அடியார்ம னஞ்சலிக்க எவராகி லும்ப ழிக்க
அபராதம் வந்து கெட்ட ...... பிணிமூடி
அனைவோரும் வந்து சிச்சி யெனநால்வ ருஞ்சி ரிக்க
அனலோட ழன்று செத்து ...... விடுமாபோற்
கடையேன்ம லங்கள் முற்று மிருநோயு டன்பி டித்த
கலியோடி றந்து சுத்த ...... வெளியாகிக்
களிகூர என்ற னுக்கு மயிலேறி வந்து முத்தி
கதியேற அன்பு வைத்து ...... னருள்தாராய்
சடைமீது கங்கை வைத்து விடையேறு மெந்தை சுத்த
தழல்மேனி யன்சி ரித்தொர் ...... புரமூணும்
தவிடாக வந்தெ திர்த்த மதனாக முஞ்சி தைத்த
தழல்பார்வை யன்ற ளித்த ...... குருநாதா
மிடிதீர அண்ட ருக்கு மயிலேறி வஞ்சர் கொட்டம்
வெளியாக வந்து நிர்த்த ...... மருள்வோனே
மினநூல்ம ருங்குல் பொற்பு முலைமாதி ளங்கு றத்தி
மிகுமாலொ டன்பு வைத்த ...... பெருமாளே.
- அடியார்மனஞ்சலிக்க எவராகிலும் பழிக்க
உன் அடியார்கள் மனம் துன்பப்படும்படி அவர்களை யாராலும் பழித்தால், - அபராதம் வந்து கெட்ட பிணிமூடி
அதனால் பிழை ஏற்பட்டு, கெட்ட நோய்கள் வந்து பழித்தவர்களைப் பீடித்து, - அனைவோரும் வந்து சிச்சி யென
எல்லோரும் வந்து சீ சீ என்று அருவருப்புடன் இகழ, - நால்வருஞ்சிரிக்க
நாலு பேர் பரிகசித்துச் சிரிக்க, - அனலோடு அழன்று செத்து விடுமாபோல்
கடைசியில் இறந்து நெருப்பிடை வீழ்ந்து வெந்துவிடுவது போல, - கடையேன்மலங்கள் முற்றும் இருநோயுடன்
இழிந்தவனாகிய என்னுடைய ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் யாவும், நல்வினை, தீவினை என்ற இரு நோய்களுடனும், - பிடித்தகலியோடு இறந்து
என்னைப் பிடித்துள்ள தரித்திரத்தோடும் யாவுமாக அழிபட்டு, - சுத்த வெளியாகி
ஞான பரிசுத்த பரவெளி எனக்குப் புலப்பட்டதாகி, - களிகூர என்றனுக்கு மயிலேறி வந்து
மகிழ்ச்சி மிகுந்து ஏற்பட, நீ எனக்காக மயில் மீது ஏறி வந்து, - முத்தி கதியேற அன்பு வைத்து உன் அருள்தாராய்
முக்தி வீட்டை யான் அடையுமாறு என்மீது அன்பு வைத்து, உனது திருவருளைத் தந்தருள்க. - சடைமீது கங்கை வைத்து விடையேறு மெந்தை
சடையின் மீது கங்கை நதியைச் சூடி, நந்தி வாகனத்தின் மீதேறும் எங்கள் தந்தை, - சுத்த தழல்மேனியன்சிரித்து ஒர் புரமூணும் தவிடாக
பரிசுத்தமான நெருப்பு மேனியன் ஆகிய சிவபிரான் சிரித்தே ஒப்பற்ற திரிபுரம் மூன்றையும் எரித்துத் தவிடு பொடியாகும்படியும், - வந்தெதிர்த்த மதன் ஆகமுஞ் சிதைத்த
வந்து தன்னை எதிர்த்த மன்மதனின் உடலைச் சிதைத்து அழியுமாறு செய்த - தழல்பார்வை அன்றளித்த குருநாதா
(நெற்றியிலுள்ள) நெருப்புக்கண்ணின் சுடரில் ஒருநாள் வெளிப்பட்ட குருநாதனே, - மிடிதீர அண்டருக்கு மயிலேறி
தேவர்களுக்கு எற்பட்ட துன்பம் தீர, மயில் மீதேறி, - வஞ்சர் கொட்டம் வெளியாக வந்து நிர்த்தம் அருள்வோனே
வஞ்சக அரக்கர்களின் இறுமாப்பும், செயல்களும் ஒடுங்கும்படிச் செய்து வெளிவந்து வெற்றி நடனம் புரிந்தவனே, - மினநூல் மருங்குல் பொற்பு முலைமாது இளங்குறத்தி
மின்னல் போன்றும், நூல் போன்றும் நுண்ணிய இடையையும், அழகிய மார்பையும் உடைய பெண்ணாம் இளங் குறத்தி வள்ளியின் மீது - மிகுமாலொடு அன்பு வைத்த பெருமாளே.
மிக்க ஆசையுடன் அன்பு வைத்த பெருமாளே.