திருப்புகழ் 1202 வேல் ஒத்து வென்றி (பொதுப்பாடல்கள்)

தானத்த தந்த தந்த தானத்த தந்த தந்த
தானத்த தந்த தந்த ...... தனதான
வேலொத்து  வென்றி  யங்கை  வேளுக்கு  வெஞ்ச  ரங்க 
ளாமிக்க  கண்க  ளென்று  ......  மிருதோளை 
வேயொக்கு  மென்று  கொங்கை  மேல்வெற்ப  தென்று  கொண்டை 
மேகத்தை  வென்ற  தென்று  ......  மெழில்மாதர் 
கோலத்தை  விஞ்ச  வெஞ்சொல்  கோடித்து  வஞ்ச  நெஞ்சர் 
கூடத்தில்  நின்று  நின்று  ......  குறியாதே 
கோதற்ற  நின்ப  தங்கள்  நேர்பற்றி  யின்ப  மன்பு 
கூர்கைக்கு  வந்து  சிந்தை  ......  குறுகாதோ 
ஞாலத்தை  யன்ற  ளந்து  வேலைக்கு  ளுந்து  யின்று 
நாடத்தி  முன்பு  வந்த  ......  திருமாலும் 
நாடத்த  டஞ்சி  லம்பை  மாவைப்பி  ளந்த  டர்ந்து 
நாகத்த  லங்கு  லுங்க  ......  விடும்வேலா 
ஆலித்தெ  ழுந்த  டர்ந்த  ஆலத்தை  யுண்ட  கண்ட 
ராகத்தில்  மங்கை  பங்கர்  ......  நடமாடும் 
ஆதிக்கு  மைந்த  னென்று  நீதிக்குள்  நின்ற  அன்பர் 
ஆபத்தி  லஞ்ச  லென்ற  ......  பெருமாளே. 
  • வேல் ஒத்து வென்றி அங்கை வேளுக்கு வெம் சரங்களாம் மிக்க கண்கள் என்றும்
    வெற்றி கொண்ட அழகிய கையில் உள்ள வேலாயுதத்தை நிகர்த்து, மன்மதனுடைய கொடிய மலர்ப் பாணங்களாக மேம்பட்டு விளங்கும் கண்கள் என்று உவமை கூறியும்,
  • இரு தோளை வேய் ஒக்கும் என்று கொங்கை மேல் வெற்புஅது என்று
    இரண்டு தோள்களை மூங்கிலை நிகர்க்கும் என்றும், மார்பகங்கள் மேலான மலைக்கு ஒப்பானவை என்றும்,
  • கொண்டை மேகத்தை வென்றது என்றும்
    கூந்தல் (கரு நிறத்தில்) மேகத்தையும் வென்றது என்று கூறியும்,
  • எழில் மாதர் கோலத்தை விஞ்ச வெம் சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர் கூடத்தில் நின்று நின்று குறியாதே
    அழகிய (விலை) மாதர்களின் எழிலினை மேலான வகையில், விரும்பத் தக்க சொற்கள் கொண்டு அலங்கரித்துப் பேசி, வஞ்சக மனம் உடைய அப் பொது மகளிர்களின் வீட்டு முற்றத்தில் அடிக்கடி நின்று அவர்களைக் குறித்தே காலம் கழிக்காமல்,
  • கோது அற்ற நின் பதங்கள் நேர் பற்றி இன்பம் அன்பு கூர்கைக்கு வந்து சிந்தை குறுகாதோ
    குற்றம் இல்லாத உன் திருவடிகளை நேராகப் பற்றி, இன்பமும் அன்பும் மிகுந்து பெருகுதற்கு வேண்டிய மனத்தை அடைய மாட்டேனோ?
  • ஞாலத்தை அன்று அளந்து வேலைக்கு(ள்)ளும் துயின்று நாடு அத்தி முன்பு வந்த திருமாலும்
    பூமியை முன்பு ஓரடியால் (வாமனனாக வந்து) அளந்து, பாற்கடலினிடையே துயிலும் தன்னை நாடி ஓலமிட்ட (கஜேந்திரன்) என்னும் யானையின் முன்பு வந்து உதவிய திருமாலும்,
  • நாடத் தடம் சிலம்பை மாவைப் பிளந்து அடர்ந்து நாகத் தலம் குலுங்க விடும் வேலா
    உனது உதவியை நாட, விசாலமான கிரவுஞ்ச மலையையும், மாமரமாக வடிவெடுத்த சூரனையும் பிளந்து நெருங்கி, மலைப் பிரதேசங்கள் எல்லாம் குலுங்கி அசையும்படி வேலைச் செலுத்திய வேலனே,
  • ஆலித்து எழுந்து அடர்ந்த ஆலத்தை உண்ட கண்டர் ஆகத்தில் மங்கை பங்கர்
    ஒலித்து எழுந்து நெருங்கி வந்த ஆலகால விஷத்தைப் பருகி அடக்கிய கழுத்தை உடையவர், தமது உடலில் மங்கையாகிய பார்வதிக்கு இடது பாகம் தந்தவர்,
  • நடமாடும் ஆதிக்கு மைந்தன் என்று நீதிக்குள் நின்ற அன்பர் ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே.
    நடனம் ஆடுபவர் ஆகிய முதல்வராகிய சிவ பெருமானுக்குப் பிள்ளை என்று விளங்கி, நீதி நெறியில் நிற்கும் அன்பர்களுக்கு, அவர்களுக்கு ஆபத்து நேரிடும் போதில் அஞ்ச வேண்டாம் என்று அருளும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com