திருப்புகழ் 1207 அருக்கி மெத்ததோள் (பொதுப்பாடல்கள்)

தனத்த தத்தனா தனத்த தத்தனா
தனத்த தத்தனா ...... தனதான
அருக்கி  மெத்ததோள்  திருத்தி  யுற்றுமார் 
பசைத்து  வக்குமா  ......  லிளைஞோரை 
அழைத்து  மிக்ககா  சிழைத்து  மெத்தைமீ 
தணைத்து  மெத்தமா  ......  லதுகூர 
உருக்கி  யுட்கொள்மா  தருக்கு  ளெய்த்துநா 
வுலற்றி  யுட்குநா  ......  ணுடன்மேவி 
உழைக்கு  மத்தைநீ  யொழித்து  முத்திபா 
லுறக்கு  ணத்ததா  ......  ளருள்வாயே 
சுருக்க  முற்றமால்  தனக்கு  மெட்டிடா 
தொருத்தர்  மிக்கமா  ......  நடமாடுஞ் 
சுகத்தி  லத்தர்தா  மிகுத்த  பத்திகூர் 
சுரக்க  வித்தைதா  ......  னருள்வோனே 
பெருக்க  வெற்றிகூர்  திருக்கை  கொற்றவேல் 
பிடித்து  குற்றமா  ......  ரொருசூரன் 
பெலத்தை  முட்டிமார்  தொளைத்து  நட்டுளோர் 
பிழைக்க  விட்டவோர்  ......  பெருமாளே. 
  • அருக்கி மெத்த தோள் திருத்தி உற்று மார்பு அசைத்து
    அருமை பாராட்டி நன்றாகத் தோள்களை ஒழுங்கு படுத்தியும், மார்பை அசைத்தும்,
  • உவக்கும் மால் இளைஞோரை அழைத்து மிக்க காசு இழைத்து மெத்தை மீது அணைத்து
    தம்மைக் கண்டு மகிழ்ந்து மோகம் கொண்ட இளைஞர்களை அழைத்து, நிரம்பப் பணத்தை அவர்கள் தரச்செய்து, மெத்தையின் மீது அணைத்து,
  • மெத்த மால் அது கூர உருக்கி உட்கொள் மாதருக்கு உள் எய்த்து நா உலற்றி உட்கு நாணுடன் மேவி
    நிரம்பக் காமம் மிகும்படி அவர்கள் மனதை உருக்கி தம் வசப்படுத்தும் விலைமாதர்களுக்கு நான் இளைப்புற்று, நா வறண்டு, அஞ்சி, நாணம் கொண்டவனாக இருந்து,
  • உழைக்கும் அத்தை நீ ஒழித்து முத்தி பால் உற அக்குணத்த தாள் அருள்வாயே
    காலம் தள்ளுவதை நீ ஒழித்து அருள, முக்தி வீட்டை நான் அடைய, அந்த மேன்மை தங்கிய திருவடியைத் தந்து அருள்வாயாக.
  • சுருக்கம் உற்ற மால் தனக்கும் எட்டிடாது ஒருத்தர் மிக்க மா நடமாடும்
    குறள் வடிவத்தில் வாமனராக வந்த (பின் வானளவு உயர்ந்த) திருமாலாலும் அளவிட முடியாத ஒப்பற்ற பெருமான், மிகச் சிறந்த நடனம் ஆடும்
  • சுகத்தில் அத்தர் தாம் மிகுத்த பத்தி கூர் சுரக்க வித்தை தான் அருள்வோனே
    இன்பம் கொண்ட சிவபெருமானுக்கு மிக்க பக்தி முதிர்ந்து பெருக ஞானத்தை (மூலப் பொருளை) உபதேசித்து அருளியவனே,
  • பெருக்க வெற்றி கூர் திருக் கை கொற்ற வேல் பிடித்து குற்றம் ஆர் ஒரு சூரன் பெலத்தை முட்டி மார் தொளைத்து
    நிரம்ப வெற்றியே மிக்க அழகிய கரத்தில் வீர வேல் கொண்டு, குற்றங்கள் நிறைந்த ஒப்பற்ற சூரனுடைய பலத்தைத் தாக்கி, அவனது மார்பைத் தொளைத்து,
  • நட்டு உ(ள்)ளோர் பிழைக்க விட்ட ஓர் பெருமாளே.
    நட்புடைய தேவர்கள் பிழைக்க அந்த வேலைச் செலுத்திய ஒப்பற்ற பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com