திருப்புகழ் · 1199வளைகரம் ஆட்டி (பொதுப்பாடல்கள்)vaLaikaramAtti
தனதன தாத்த தாத்த தனதன தாத்த தாத்த
தனதன தாத்த தாத்த ...... தனதான
தினம் ஒரு திருப்புகழ் Dinam oru Thiruppugazh
வளைகர மாட்டி வேட்டி னிடைதுயில் வாட்டி யீட்டி
வரிவிழி தீட்டி யேட்டின் ...... மணம்வீசும்
மழைகுழல் காட்டி வேட்கை வளர்முலை காட்டி நோக்கின்
மயில்நடை காட்டி மூட்டி ...... மயலாகப்
புளகித வார்த்தை யேற்றி வரிகலை வாழ்த்தி யீழ்த்து
புணர்முலை சேர்த்து வீக்கி ...... விளையாடும்
பொதுமட வார்க்கு ஏற்ற வழியுறு வாழ்க்கை வேட்கை
புலைகுண மோட்டி மாற்றி ...... யருள்வாயே
தொளையொழு கேற்ற நோக்கி பலவகை வாச்சி தூர்த்து
சுடரடி நீத்த லேத்து ...... மடியார்கள்
துணைவன்மை நோக்கி நோக்கி னிடைமுறை யாய்ச்சி மார்ச்சொல்
சொலியமு தூட்டி யாட்டு ...... முருகோனே
இளநகை யோட்டி மூட்டர் குலம்விழ வாட்டி யேட்டை
யிமையவர் பாட்டை மீட்ட ...... குருநாதா
இயல்புவி வாழ்த்தி யேத்த எனதிடர் நோக்கி நோக்க
மிருவினை காட்டி மீட்ட ...... பெருமாளே.
பத உரைword meanings
- வளை கரம் மாட்டி வேட்டின் இடை துயில் வாட்டி ஈட்டி வரி
விழி தீட்டி ஏட்டின் மணம் வீசும் மழை குழல் காட்டி
வளையல்களைக் கையில் மாட்டிக் கொண்டு, காம வேட்கையின் இடையே தூக்கத்தைக் கெடுத்து, ஈட்டி போல் கூரியதும் ரேகைகளை உடையதும் ஆகிய கண்களுக்கு மையை இட்டு, மலர் இதழ்களின் நறு மணம் வீசுகின்ற, கருமேகம் போன்ற கூந்தலைக் காட்டி, - வேட்கை வளர் முலை காட்டி நோக்கின் மயில் நடை காட்டி மூட்டி மயல்
ஆகப் புளகித வார்த்தை ஏற்றி
காமத்தை வளர்க்கும் மார்பினைக் காட்டி, மயில் போன்ற தமது நடை அழகைக் காட்டி, காமப் பற்று உண்டாகும்படி செய்து புளகிதம் கொள்ளும்படியான வார்த்தைகளை (வந்தவர்களின்) காதில் ஏற வைத்து, - வரி கலை வாழ்த்தி ஈழ்த்து புணர் முலை சேர்த்து வீக்கி
விளையாடும் பொது மடவார்க்கு ஏற்ற வழி உறு வாழ்க்கை
வேட்கை புலை குணம் ஓட்டி மாற்றி அருள்வாயே
கட்டியுள்ள ஆடையைப் புகழ்ந்து பேசிக்கொண்டே இழுத்து, நெருங்கிப் பொருந்திய மார்பில் அணைத்துக் கட்டி விளையாடுகின்ற விலைமாதர்களுக்கு உகந்ததான வழியில் செல்லும் வாழ்க்கையில் விருப்பம் கொள்ளும் இழிவான என் குணத்தை ஓட்டி நீக்கி, எனக்கு அருள் புரிவாயாக. - தொளை ஒழுகு ஏற்ற(ம்) நோக்கி பல வகை வாச்சி தூர்த்து
சுடர் அடி நீ(நி)த்தல் ஏத்தும் அடியார்கள் துணை
(குழல் போன்ற) தொளைக் கருவிகளில் (பரந்து வரும் இசையின்) மேன்மையைக் கேட்டு, பல விதமான வாத்திய வகைகளை பெருக்க ஒலித்து, உனது ஒளி வீசும் திருவடிகளை தினந்தோறும் போற்றி வணங்கும் அடியவர்களின் துணைவனே, - வன்மை நோக்கி நோக்கின் இடை முறை ஆய்ச்சிமார் சொல்
சொல்லி அமுது ஊட்டி ஆட்டு முருகோனே
உனது வலிமையைக் கண்டு, தங்கள் விருப்பத்தினிடையே ஒருவர் பின் ஒருவராக முறைப்படி (கார்த்திகை மாதர்களாகிய) தாய்மார்கள் அன்பு வார்த்தைகளைக் கூறி, பாலை ஊட்டி, உன்னைத் தாலாட்டித் துங்கச் செய்த முருகனே, - இள நகை ஓட்டி மூட்டர் குலம் விழ வாட்டி ஏட்டை இமையவர்
பாட்டை மீட்ட குரு நாதா
புன்சிரிப்பைச் சிரித்து*, மூடர்களாகிய அசுரர்களின் குலம் அழிய அவர்களை வாட்டி, சோர்வுற்றிருந்த தேவர்களின் துன்பத்தை நீக்கிய குரு நாதனே, - இயல் புவி வாழ்த்தி ஏத்த எனது இடர் நோக்கி நோக்கம் இரு
வினை காட்டி மீட்ட பெருமாளே.
தகுதியுள்ள உலகப் பெரியோர்கள் வாழ்த்திப் போற்ற, எனது வருத்தங்களைக் கண்டு, உனது அருட் பார்வையால், என் இரு வினைகளின் நிலையை எனக்குப் புலப்படுத்தி, என்னை இழிந்த குணத்தினின்றும் மீள்வித்த பெருமாளே.
குறிப்புகள் · notes
- * சூரனுடைய சேனைகள் முருகனைச் சூழ்ந்த போது அந்தச் சேனைகளைப் புன்சிரிப்பால் முருக வேள் எரித்தார்.
- * When SUran's armies encircled Lord Murugan in combat, He burnt them all merely by His smile.
