திருப்புகழ் 1198 வட்ட முலைக்கச்சு (பொதுப்பாடல்கள்)

தத்த தனத்தத் தனத்த தத்தன
தத்த தனத்தத் தனத்த தத்தன
தத்த தனத்தத் தனத்த தத்தன ...... தனதான
வட்ட  முலைக்கச்  சவிழ்த்து  வைத்துள 
முத்து  வடத்தைக்  கழுத்தி  லிட்டிரு 
மைக்கு  வளைக்கட்  குறிப்ப  ழுத்திய  ......  பொதுமாதர் 
மட்ட  மளிக்குட்  டிருத்தி  முத்தணி 
மெத்தை  தனக்குட்  செருக்கி  வெற்றிலை 
வைத்த  பழுப்பச்  சிலைச்சு  ருட்கடி  ......  யிதழ்கோதிக் 
கட்டி  யணைத்திட்  டெடுத்து  டுத்திடு 
பட்டை  யவிழ்த்துக்  கருத்தி  தத்தொடு 
கற்ற  கலைச்சொற்  களிற்ப  யிற்றுள  ......  முயல்போதுங் 
கைக்கு  ளிசைத்துப்  பிடித்த  கட்கமும் 
வெட்சி  மலர்ப்பொற்  பதத்தி  ரட்சணை 
கட்டு  மணிச்சித்  திரத்தி  றத்தையு  ......  மறவேனே 
கொட்ட  மிகுத்திட்  டரக்கர்  பட்டணம் 
இட்டு  நெருப்புக்  கொளுத்தி  யத்தலை 
கொட்டை  பரப்பச்  செருக்க  ளத்திடை  ......  யசுரோரைக் 
குத்தி  முறித்துக்  குடிப்ப  ரத்தமும் 
வெட்டி  யழித்துக்  கனக்க  ளிப்பொடு 
கொக்க  ரியிட்டுத்  தெரித்த  டுப்பன  ......  வொருகோடிப் 
பட்ட  பிணத்தைப்  பிடித்தி  ழுப்பன 
சச்ச  ரிகொட்டிட்  டடுக்கெ  டுப்பன 
பற்கள்  விரித்துச்  சிரித்தி  ருப்பன  ......  வெகுபூதம் 
பட்சி  பறக்கத்  திசைக்குள்  மத்தளம் 
வெற்றி  முழக்கிக்  கொடிப்பி  டித்தயில் 
பட்ட  றவிட்டுத்  துரத்தி  வெட்டிய  ......  பெருமாளே. 
  • வட்ட முலைக் கச்சு அவிழ்த்து வைத்துள முத்து வடத்தைக் கழுத்தில் இட்டு இரு மைக் குவளைக் கண் குறிப்பு அழுத்திய பொது மாதர்
    வட்ட வடிவான மார்பகத்தில் அணிந்த கச்சை அவிழ்த்து வைத்திருக்கின்ற, முத்து மாலையை கழுத்தில் போட்டுக் கொண்டு மை பூசப்பட்ட இரண்டு குவளை மலர் போன்ற கண் கொண்டு தங்களது விருப்பத்தை நன்றாகத் தெரியப்படுத்துகின்ற விலைமாதர்கள்.
  • மட்டு அமளிக்குள் திருத்தி முத்து அணி மெத்தை தனக்குள் செருக்கி வெற்றிலை வைத்த பழுப் பச்சிலைச் சுருள் கடி இதழ் கோதி
    நறுமணப் படுக்கையில் அவர்களுடைய முத்தாலான அணிகலன்களை ஒழுங்கு படுத்தி, மெத்தையில் களிப்புடன் இருந்து, வெற்றிலையில் வைத்த பழுத்த பாக்குடன் கூடிய பசுமையான இலைச் சுருளைக் கடிக்கும் வாயிதழ் ஊறலைச் சிறிது சிறிதாகப் பருகி,
  • கட்டி அணைத்திட்டு எடுத்து உடுத்திடு பட்டை அவிழ்த்துக் கருத்து இதத்தோடு கற்ற கலைச் சொற்களில் பயிற்று உள(ம்) முயல் போதும்
    கட்டி அணைத்திட்டு எடுத்து, அவர்கள் அணிந்துள்ள பட்டாடையை அவிழ்த்து, மனதில் இன்பத்தோடு நான் கற்ற சிற்றின்ப நூல்களில் உள்ள சொற்களின் பயிற்சியில் என் மனம் முயற்சி செய்த போதிலும்,
  • கைக்குள் இசைத்துப் பிடித்த கட்கமும் வெட்சி மலர்ப் பொன் பதத்து இரட்சணை கட்டு மணிச் சித்திரத் திறத்தையு(ம்) மறவேனே
    உனது திருக்கையில் பொருந்த வைத்துப் பிடித்துள்ள வாளையும், வெட்சி மலர் சூழ்ந்த அழகிய திருவடியாகிய காப்பையும் உடை மணி முதலிய கட்டியுள்ள அழகிய சாமர்த்தியத்தையும் மறக்கவே மாட்டேன்.
  • கொட்ட(ம்) மிகுத்திட்ட அரக்கர் பட்டணம் இட்டு நெருப்புக் கொளுத்தி அத் தலை கொட்டை பரப்பச் செருக் களத்து இடை அசுரோரைக் குத்தி முறித்துக் குடிப்ப ரத்தமும் வெட்டி அழித்து
    இறுமாப்பு மிகுந்திட்ட அசுரர்களுடைய பட்டணங்களை தீயிட்டுக் கொளுத்தி, அவ்விடத்தில் அசுரர்களை போர்க்களத்தில் சிதறுண்ண வைக்க, (அப்போது) குத்தி முறித்து ரத்தத்தைக் குடிக்க வெட்டி அழித்து,
  • கனக் களிப்பொடு கொக்கரி இட்டுத் தெரித்து அடுப்பன ஒரு கோடிப் பட்ட பிணத்தைப் பிடித்து இழுப்பன சச்சரி கொட்டிட்டு அடுக்கு எடுப்பன பற்கள் விரித்துச் சிரித்து இருப்பன வெகு பூதம்
    மிக்க மகிழ்ச்சியுடன் ஆரவாரத்துடன கர்ச்சனை செய்து வெளிப்பட்டுக் கூடிய, ஒரு கோடிக்கணக்கில் அழிந்த பிணங்களைப் பிடித்து இழுப்பனவும், வாத்தியதைக் கொட்டிக் கொண்டு அடுக்குப் பாத்திரம் போல் எடுத்து அடுக்குவனவும், பற்களை விரியக் காட்டி சிரித்துக் கொண்டிருப்பனவுமாகிய நிறைய பூதங்கள்.
  • பட்சி பறக்கத் திசைக்குள் மத்தளம் வெற்றி முழக்கிக் கொடிப் பிடித்து அயில் பட்டு அற விட்டுத் துரத்தி வெட்டிய பெருமாளே.
    கருடன் முதலிய பறவைகள் மேலே பறந்து, திசைகள் தோறும் மத்தளங்கள் ஜெய பேரிகை முழக்க, வெற்றிக் கொடியை ஏந்தி, வேலாயுதத்தை நன்றாகச் செலுத்தி அசுரர்களைத் துரத்தி வெட்டிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com