திருப்புகழ் 1197 வடிகட்டிய தேன் என (பொதுப்பாடல்கள்)

தனனத்தன தானன தானன
தனனத்தன தானன தானன
தனனத்தன தானன தானன ...... தனதான
வடிகட்டிய  தேனென  வாயினி 
லுறுதுப்பன  வூறலை  யார்தர 
வரைவிற்றிக  ழூடலி  லேதரு  ......  மடவார்பால் 
அடிபட்டலை  பாவநிர்  மூடனை 
முகடித்தொழி  லாமுன  நீயுன 
தடிமைத்தொழி  லாகஎ  நாளினி  ......  லருள்வாயோ 
பொடிபட்டிட  ராவணன்  மாமுடி 
சிதறச்சிலை  வாளிக  ளேகொடு 
பொருகைக்கள  மேவிய  மாயவன்  ......  மருகோனே 
கொடுமைத்தொழி  லாகிய  கானவர் 
மகிமைக்கொள  வேயவர்  வாழ்சிறு 
குடிலிற்குற  மானொடு  மேவிய  ......  பெருமாளே. 
  • வடி கட்டிய தேன் என வாயினில் உறு துப்பு அ(ன்)ன ஊறலை ஆர்தர
    வடிகட்டப்பட்ட தேன் என்று சொல்லும்படி வாயினில் நுகர் பொருளாகிய இதழ் ஊறலை அனுபவிக்க,
  • வரைவில் திகழ் ஊடலிலே தரு மடவார் பால் அடி பட்டு அலை பாவ நிர் மூடனை
    ஓரளவு ஊடலை நிகழ்த்தி, பின்பு தருகின்ற மாதர்களிடத்தே அலைப்புண்டு அலைகின்ற பாவியும் முழு முட்டாளுமாகிய என்னை,
  • முகடித் தொழில் ஆம் முன் நீ உனது அடிமைத் தொழிலாக எ(ந்)நாளினில் அருள்வாயோ
    கீழ்த்தரமான தொழிலையே மேற்கொண்டவனாய் இழிந்த நிலையை அடைவதற்கு முன்னம், உனக்கு அடிமைப் பணி செய்யும் (பாக்கியத்) தொழில் எனக்குக் கிடைக்கும்படி எந்த நாளில் அருள்வாயோ?
  • பொடி பட்டிட ராவணன் மா முடிசிதறச் சிலை வாளிகளே கொ(ண்)டு பொருகைக் கள(ம்) மேவிய மாயவன் மருகோனே
    பொடிபட்டுப் போய் ராவணனுடைய சிறந்த முடிகள் சிதறும்படி வில்லும் அம்புகளும் கொண்டு சண்டை செய்வதற்கு போர்க்களத்தை அடைந்த மாயவனாகிய ராமனின் மருகனே,
  • கொடுமைத் தொழில் ஆகிய கானவர் மகிமைக் கொளவே அவர் வாழ் சிறு குடிலில் குறமானொடு மேவிய பெருமாளே.
    கொடுந் தொழிலைச் செய்யும், காட்டில் வாழும் வேடர்கள் பெருமை அடையுமாறு, அவர்கள் வாழ்ந்திருந்த சின்னக் குடிசையில் மான் போன்ற குறப்பெண் வள்ளியோடு வீற்றிருந்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com