திருப்புகழ் 1200 வாடையில் மதனை (பொதுப்பாடல்கள்)

தானன தனன தனத்தத்த
தானன தனன தனத்தத்த
தானன தனன தனத்தத்த ...... தனதான
வாடையில்  மதனை  யழைத்துற்று 
வாள்வளை  கலக  லெனக்கற்றை 
வார்குழல்  சரிய  முடித்திட்டு  ......  துகிலாரும் 
மால்கொள  நெகிழ  வுடுத்திட்டு 
நூபுர  மிணைய  டியைப்பற்றி 
வாய்விட  நுதல்மி  சைபொட்டிட்டு  ......  வருமாய 
நாடக  மகளிர்  நடிப்புற்ற 
தோதக  வலையி  லகப்பட்டு 
ஞாலமு  முழுது  மிகப்பித்த  ......  னெனுமாறு 
நாணமு  மரபு  மொழுக்கற்று 
நீதியு  மறிவு  மறக்கெட்டு 
நாயடி  மையும  டிமைப்பட்டு  ......  விடலாமோ 
ஆடிய  மயிலி  னையொப்புற்று 
பீலியு  மிலையு  முடுத்திட்டு 
ஆரினு  மழகு  மிகப்பெற்று  ......  யவனாளும் 
ஆகிய  விதண்மி  சையுற்றிட்டு 
மானின  மருள  விழித்திட்டு 
ஆயுத  கவணொ  ருகைச்சுற்றி  ......  விளையாடும் 
வேடுவர்  சிறுமி  யொருத்திக்கு 
யான்வழி  யடிமை  யெனச்செப்பி 
வீறுள  அடியி  ணையைப்பற்றி  ......  பலகாலும் 
வேதமு  மமர  ருமெய்ச்சக்ர 
வாளமு  மறிய  விலைப்பட்டு 
மேருவில்  மிகவு  மெழுத்திட்ட  ......  பெருமாளே. 
  • வாடையில் மதனை அழைத்து உற்று
    தென்றலைத் தேராகக் கொண்டு வருகின்ற மன்மதனை வரவழைத்து,
  • வாள் வளை கலகல் எனக் கற்றை வார் குழல் சரிய முடித்திட்டு
    ஒளி வீசும் வளையல்கள் கல கல் என்று ஒலி செய்ய, கற்றையான நீண்ட கூந்தல் சரிந்து விழ அதை முடிந்து,
  • துகில் ஆரும் மால் கொ(ள்)ள நெகிழ உடுத்திட்டு நூபுரம் இணை அடியைப் பற்றி வாய் விட
    ஆடையை எப்படிப்பட்டவரும் ஆசை கொள்ளும்படியான வகையில் வேண்டுமென்றே தளர்த்தி உடுத்தி, சிலம்பு இரண்டு பாதங்களிலும் பற்றிச் சூழ்ந்து ஒலி செய்ய,
  • நுதல் மிசை பொட்டிட்டு வரு(ம்) மாய நாடக மகளிர் நடிப்புற்ற தோதக வலையில் அகப்பட்டு
    நெற்றியில் பொட்டு அணிந்து வருகின்ற, மாயமும் ஆடல்களும் வல்ல விலைமாதர்களின் பாசாங்குச் சூழ்ச்சி கொண்ட வஞ்சக வலையில் சிக்கிக்கொண்டு,
  • ஞாலமும் முழுது மிக பித்தன் எனுமாறு நாணமும் மரபும் ஒழுக்கு அற்று நீதியும் அறிவும் அறக் கெட்டு நாய் அடிமையும் அடிமைப்பட்டு விடலாமோ
    உலகில் உள்ளோர் அனைவரும் இவன் பெரிய பித்தன் என்று கூறும்படி, என் மானமும் குடிப்பிறப்பும் ஒழுக்கமும் கெட்டு, நீதி, அறிவு இவை அடியோடு கெட்டு, நாய் அனைய அடிமையாக (அம்மாதர்களுக்கு) அடிமையாகி விடலாமோ?
  • ஆடிய மயிலினை ஒப்புற்று பீலியும் இலையும் உடுத்திட்டு ஆரினும் அழகு மிகப் பெற்று யவனாளும் ஆகிய இதண் மிசை உற்றிட்டு
    ஆடுகின்ற மயிலை நிகராகி, மயில் இறகையும் தழையிலைகளையும் உடம்பில் உடுத்திக் கொண்டு, யாருக்கும் இல்லாத அழகை நிரம்பப் பெற்று, இளமை உடையவளாய் (தினைப் புனத்தில் கட்டப்பட்டப்) பரண் மீது வீற்றிருந்து,
  • மான் இன(ம்) மருள விழித்திட்டு ஆயுத கவண் ஒரு கைச் சுற்றி விளையாடும் வேடுவர் சிறுமி ஒருத்திக்கு
    மானின் கூட்டங்கள் மருண்டு அதிசயித்து விழிக்கும்படிச் செய்து, கவண் கல் என்னும் ஆயுதத்தை ஒரு கையில் சுற்றி (பறவைகளை விரட்டி) விளையாடிய வேடப் பெண்ணாகிய ஒப்பற்றவளாகிய வள்ளிக்கு
  • யான் வழி அடிமை எனச் செப்பி வீறு உ(ள்)ள அடி இணையைப் பற்றி
    நான் உனக்கு வழி அடிமை என்று கூறி, பெருமை பொருந்திய அவளுடைய இரண்டு திருவடிகளையும் பிடித்துக் கொண்டு,
  • பல காலும் வேதமும் அமரரும் மெய்ச் சக்ரவாளமும் அறிய விலைப் பட்டு மேருவில் மிகவும் எழுத்திட்ட பெருமாளே.
    பல முறையும், வேதமும் தேவர்களும் நிலை பெற்ற சக்ரவாள கிரியும் அறியும்படி, அதையே கூறி, (அவளுக்கு) விலைப்பட்ட அடிமையாகி (அங்ஙனம் அடிமைப்பட்டுள்ளதை) மேரு மலையில் நன்றாக விளங்கும்படி (சிலா சாசனமாக) எழுதி வைத்துள்ள பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com