திருப்புகழ் 1176 பால்மொழி படித்து (பொதுப்பாடல்கள்)

தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த
தானன தனத்தத் தாத்த ...... தனதான
பால்மொழி  படித்துக்  காட்டி  ஆடையை  நெகிழ்த்துக்  காட்டி 
பாயலி  லிருத்திக்  காட்டி  ......  யநுராகம் 
பாகிதழ்  கொடுத்துக்  காட்டி  நூல்களை  விரித்துக்  காட்டி 
பார்வைகள்  புரட்டிக்  காட்டி  ......  யுறவாகி 
மேல்நக  மழுத்திக்  காட்டி  தோதக  விதத்தைக்  காட்டி 
மேல்விழு  நலத்தைக்  காட்டு  ......  மடவார்பால் 
மேவிடு  மயக்கைத்  தீர்த்து  சீர்பத  நினைப்பைக்  கூட்டு 
மேன்மையை  யெனக்குக்  காட்டி  ......  யருள்வாயே 
காலனை  யுதைத்துக்  காட்டி  யாவியை  வதைத்துக்  காட்டி 
காரணம்  விளைத்துக்  காட்டி  ......  யொருகாலங் 
கானினில்  நடித்துக்  காட்டி  யாலமு  மிடற்றிற்  காட்டி 
காமனை  யெரித்துக்  காட்டி  ......  தருபாலா 
மாலுற  நிறத்தைக்  காட்டி  வேடுவர்  புனத்திற்  காட்டில் 
வாலிப  மிளைத்துக்  காட்டி  ......  அயர்வாகி 
மான்மகள்  தனத்தைச்  சூட்டி  ஏனென  அழைத்துக்  கேட்டு 
வாழ்வுறு  சமத்தைக்  காட்டு  ......  பெருமாளே. 
  • பால் மொழி படித்துக் காட்டி ஆடையை நெகிழ்த்துக் காட்டி பாயலில் இருத்திக் காட்டி
    பால் போன்ற இனிய பேச்சுக்களைப் பேசி, உடுத்துள்ள ஆடையைத் தளர்த்திக் காட்டி, படுக்கையில் உடன் அமர்த்திவைத்துக் காட்டி,
  • அநுராகம் பாகு இதழ் கொடுத்துக் காட்டி நூல்களை விரித்துக் காட்டி
    வெல்லம் போன்ற இனிய வாயிதழ் ஊறலைத் தந்து, காம நூல்களை விவரமாக எடுத்துக் காட்டி,
  • பார்வைகள் புரட்டிக் காட்டி உறவாகி மேல் நகம் அழுத்திக் காட்டி தோதக விதத்தைக் காட்டி மேல் விழு(ம்) நலத்தைக் காட்டு(ம்) மடவார் பால்
    கண் பார்வையை சுழற்றிக் காட்டி நட்புப் பூண்டு, உடலின் மேல் நகத்தை அழுத்தி நகக்குறி இட்டு, வஞ்சகச் செயல்களைக் காட்டி, மேலே விழுந்து தழுவும் சுகங்களைக் காட்டும் விலைமாதர்களிடத்தே
  • மேவிடு(ம்) மயக்கைத் தீர்த்து சீர் பத நினைப்பைக் கூட்டு(ம்) மேன்மையை எனக்குக் காட்டி அருள்வாயே
    சென்று அடையும் காம மயக்கத்தை ஒழித்து, சீரான உனது திருவடி நினைப்பைக் கூட்டி வைக்கும் மேன்மையான எண்ணத்தை எனக்கு அருள் புரிவாயாக.
  • காலனை உதைத்துக் காட்டி ஆவியை வதைத்துக் காட்டி காரணம் விளைத்துக் காட்டி
    யமனைக் காலால் உதைத்துக் காட்டியும், அவனுடைய உயிரை (திருக்கடையூரில்) வதம் செய்து காட்டியும், அவ்வாறு வதைத்ததன் காரணத்தை* விளக்கிக் காட்டியும்,
  • ஒரு காலம் கானினில் நடித்துக் காட்டி ஆலமும் மிடற்றில் காட்டி காமனை எரித்துக் காட்டி தரு பாலா
    அந்திப் பொழுதில் சுடு காட்டில் நடனம் செய்து காட்டியும், ஆலகால விஷத்தை கண்டத்தில் நிறுத்திக் காட்டியும், மன்மதனை (நெற்றிக்) கண்ணால் எரித்துக் காட்டியும் செய்த சிவபெருமான் அருளிய மகனே,
  • மால் உற நிறத்தைக் காட்டி வேடுவர் புனத்தில் காட்டில் வாலிபம் இளைத்துக் காட்டி அயர்வு ஆகி
    (வள்ளி) காதல் உறும்படி உனது திரு மேனியின் ஒளியைக் காட்டி, வேடர்கள் தினைப் புனக் காட்டில் காளைப் பருவத்தின் சோர்வைக் காட்டி தளர்ச்சியுற்று,
  • மான் மகள் தனத்தைச் சூட்டி ஏன் என அழைத்துக் கேட்டு வாழ்வு உறு சமத்தைக் காட்டு(ம்) பெருமாளே.
    மான் பெற்ற மகளாகிய வள்ளியின் மார்பினில் தலைவைத்துச் சாய்ந்து, அவளைத் தழுவி, (நீ) ஏன் (இச்சிறு குடிலில் இருக்க வேண்டுமென்று) கூறி, தன்னுடன் (திருத்தணிகைக்கு) வரும்படி அழைத்து (அவள் இணங்கியதைக்) கேட்டு, அவளோடு இனிய வாழ்வு பெற்று, தனது சாமர்த்தியத்தைக் காட்டிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com