தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன ...... தனதான
புகரில் சேவல தந்துர சங்க்ரம
நிருதர் கோபக்ர வுஞ்சநெ டுங்கிரி
பொருத சேவக குன்றவர் பெண்கொடி ...... மணவாளா
புனித பூசுர ருஞ்சுர ரும்பணி
புயச பூதர என்றிரு கண்புனல்
பொழிய மீமிசை யன்புது ளும்பிய ...... மனனாகி
அகில பூதவு டம்புமு டம்பினில்
மருவு மாருயி ருங்கர ணங்களு
மவிழ யானுமி ழந்தஇ டந்தனி ...... லுணர்வாலே
அகில வாதிக ளுஞ்சம யங்களும்
அடைய ஆமென அன்றென நின்றதை
யறிவி லேனறி யும்படி யின்றருள் ...... புரிவாயே
மகர கேதன முந்திகழ் செந்தமிழ்
மலய மாருத மும்பல வெம்பரி
மளசி லீமுக மும்பல மஞ்சரி ...... வெறியாடும்
மதுக ராரம்வி குஞ்சணி யுங்கர
மதுர கார்முக மும்பொர வந்தெழு
மதன ராஜனை வெந்துவி ழும்படி ...... முனிபால
முகிழ்வி லோசன ரஞ்சிறு திங்களு
முதுப கீரதி யும்புனை யுஞ்சடை
முடியர் வேதமு நின்றும ணங்கமழ் ...... அபிராமி
முகர நூபுர பங்கய சங்கரி
கிரிகு மாரித்ரி யம்பகி தந்தருள்
முருக னேசுர குஞ்சரி ரஞ்சித ...... பெருமாளே.
- புகரில் சேவல
குற்றமற்ற சேவற்கொடியை உடையவனே, - தந்துர சங்க்ரம நிருதர் கோப
உயர்ந்த பற்களுடையவர்களும், போரை விரும்பும் தன்மையும் உடைய அசுரர்கள் மீது கோபிக்கின்றவனே, - க்ரவுஞ்சநெ டுங்கிரி பொருத சேவக
நீண்ட மலையாகிய கிரெளஞ்சமலையைப் பிளந்த வீர மூர்த்தியே, - குன்றவர் பெண்கொடி மணவாளா
வேடர் குலக்கொழுந்தாகிய வள்ளியின் கணவனே, - புனித பூசுரருஞ் சுரரும்பணி
தூய்மையான அந்தணரும், தேவர்களும் வணங்கும், - புயச பூதர என்று
மலைபோன்ற தோள்களை உடையவனே எனத் துதித்து, - இரு கண்புனல் பொழிய
இரு கண்களிலிருந்தும் ஆனந்தக் கண்ணீர் சொரியவும், - மீமிசை யன்பு துளும்பிய மனனாகி
மேன்மேலும் அன்பு பெருகிய மனத்தனாகி - அகில பூதவுடம்பும்
எல்லா பூதங்களும் சேர்ந்த உடம்பும், - உடம்பினில் மருவு மாருயிரும்
உடம்பில் பொருந்திய அரிய உயிரும், - கரணங்களும்
மனம், புத்தி முதலிய கரணங்களும் - அவிழ யானுமிழந்த இடந்தனில்
கட்டு நீங்கவும், யான் என்ற நினைப்பும் விலகியபோது - உணர்வாலே
சிவ போதம் என்ற ஓர் உணர்வினாலே - அகில வாதிகளுஞ்சம யங்களும்
மாறுபட்ட எல்லா வாதிகளும்*, சமயங்களும் - அடைய
ஒதுங்கிப் போய்விடவும், - ஆமென அன்றென நின்றதை
உள்ளது என்றும், இல்லது என்றும் நின்ற உண்மைப் பொருளை - அறிவி லேனறி யும்படி
அறிவில்லாத சிறிய அடியேன் அறியும்படியாக - இன்றருள் புரிவாயே
இன்றைய தினம் உபதேசித்து அருள் புரிவாயாக. - மகர கேதன முந்திகழ்
மகர மீனக் கொடியைக் கொண்டு விளங்குவதும், - செந்தமிழ் மலய மாருதமும்
செம்மையான தமிழ் முழங்குவதுமான சந்தன மலையாம் பொதிகையில் பிறந்த தென்றல் காற்றும், - பல வெம்பரிமள சிலீமுகமும்
நானாவிதமான ஆசையைத் தூண்டும் மணமுள்ள மலர் அம்புகளும், - பல மஞ்சரி வெறியாடும்
பலவிதமான மலர்க் கொத்துக்களில் உள்ள மணத்தில் விளையாடும் - மதுக ராரம் விகுஞ்சணியும்
வண்டுகளின் வரிசையாகிய நாணுடன், மேலான மலர் அலங்காரமும், - கர மதுர கார்முகமும்
கரத்திலே ஏந்திய இனிய கரும்பு வில்லும் கொண்டு - பொர வந்தெழு மதன ராஜனை
காதல் போர் செய்ய எழுந்து வந்த மன்மத ராஜனை - வெந்துவிழும்படி முனி
வெந்து சாம்பலாகும்படியாகக் கோபித்த - பால முகிழ்விலோசனர்
நெற்றியில் குவிந்த கண்ணை உடையவரும், - அஞ்சிறு திங்களு முதுபகீரதியும்
அழகிய இளம்பிறைச் சந்திரனையும், பழமையான கங்கா நதியையும் - புனையுஞ்சடைமுடியர்
தரித்த ஜடாமுடியை உடையவருமாகிய சிவபெருமானும், - வேதமு நின்று
வேதமும் நின்று தொழும்படியாக விளங்கி - மணங்கமழ் அபிராமி
ஞான மணம் திகழும் அபிராமி அம்மையும், - முகர நூபுர பங்கய சங்கரி
சங்குகளால் செய்த கொலுசுகளை அணிந்த திருவடித் தாமரையை உடைய சங்கரியும், - கிரிகு மாரித்ரி யம்பகி
ஹிமவானின் புத்திரியும், மூன்று கண்களை உடையவளுமான பார்வதியும் - தந்தருள் முருகனே
பெற்றருளிய முருகனே, - சுர குஞ்சரி ரஞ்சித பெருமாளே.
தேவயானை விரும்புகின்ற பெருமாளே.