தானத்தத் தனான தானன தானத்தத் தனான தானன
தானத்தத் தனான தானன ...... தந்ததான
பாணிக்குட் படாது சாதகர் காணச்சற் றொணாது வாதிகள்
பாஷிக்கத் தகாது பாதக ...... பஞ்சபூத
பாசத்திற்படாது வேறொரு பாயத்திற் புகாது பாவனை
பாவிக்கப் பெறாது வாதனை ...... நெஞ்சமான
ஏணிக்கெட் டொணாது மீதுயர் சேணுக்குச் சமான நூல்வழி
யேறிபபற் றொணாது நாடினர் ...... தங்களாலும்
ஏதுச்செப் பொணாத தோர்பொருள் சேரத்துக் கமாம கோததி
யேறச்செச் சைநாறு தாளைவ ...... ணங்குவேனோ
ஆணிப்பொற் ப்ரதாப மேருவை வேலிட்டுக் கடாவி வாசவன்
ஆபத்தைக் கெடாநி சாசரர் ...... தம்ப்ரகாசம்
ஆழிச்சத் ரசாயை நீழலி லாதித்தப் ப்ரகாச நேர்தர
ஆழிச்சக் ரவாள மாள்தரும் ...... எம்பிரானே
மாணிக்க ப்ரவாள நீலம தாணிப்பொற் கிராதைநூபுர
வாசப்பத் மபாத சேகர ...... சம்புவேதா
வாசிக்கப் படாத வாசகம் ஈசர்க்குச் சுவாமி யாய்முதல்
வாசிப்பித் ததேசி காசுரர் ...... தம்பிரானே.
- பாணிக்கு உட்படாது சாதகர் காணச் சற்று ஒணாது
கரங்களால் தொட்டுப் பிடிக்க முடியாதது, யோக வழியில் சாதகம் செய்பவர்களால் சிறிதும் காண முடியாதது, - வாதிகள் பாஷிக்கத் தகாது
தர்க்க வாதிகளால் பேசி முடிவு காணமுடியாதது, - பாதக பஞ்ச பூதப் பாசத்தில் படாது
பாவங்களுக்கு இடம் தரும் ஐந்து பூதங்களால் நிகழும் பாசங்களிலும் தளைகளிலும் அகப்படாதது, - வேறு ஒரு உபாயத்தில் புகாது
வேறு எந்தவிதமான உபாயத்திலும் மாட்டிக் கொள்ளாதது, - பாவனை பாவிக்கப் பெறாது
எவ்வித தியான வகையாலும் தியானிக்கமுடியாதது, - வாதனை நெஞ்சமான ஏணிக்கு எட்டொணாது
வருத்தங்களுக்கு இடமான மனம் என்கின்ற ஏணி கொண்டு எட்டமுடியாதது, - மீது உயர் சேணுக்குச் சமான நூல்வழி ஏறிப் பற்ற ஒணாது
மேலே உயரத்தில் இருக்கும் ஆகாயத்துக்கு ஒப்பான கருத்துள்ள கலை நூல்களின் வழியே ஆய்ந்து ஏறிக்கொண்டு பிடிக்கமுடியாதது, - நாடினர் தங்களாலும் ஏதுச் செப்ப ஒணாதது
தேடி முயல்பவர்களாலும் அதன் காரண மூலம் இன்னதென்று சொல்லமுடியாதது, - ஓர் பொருள் சேரத் துக்கமாம் மகா உததி
இத்தகைய ஒப்பற்ற பரம்பொருளை நான் அடைய, துக்கம் என்னும் பெரிய கடலினின்றும் - ஏறச் செச்சை நாறு தாளை வணங்குவேனோ
நான் கரை ஏறுவதற்காக, வெட்சி மலரின் நறு மணம் கமழும் உனது திருவடிகளை வணங்க மாட்டேனோ? - ஆணிப் பொன் ப்ரதாப மேருவை வேல் இட்டுக் கடாவி
பத்தரை மாற்றுப் பொன் மயமானதும், புகழ் பெற்றதுமான மேரு மலையை வேலாயுதத்தை எடுத்துச் செலுத்தியும்,* - வாசவன் ஆபத்தைக் கெடா
இந்திரனுடைய ஆபத்தைக் கெடுமாறு செய்தும், - நிசாசரர் தம் ப்ரகாசம் ஆழிச் சத்ர சாயை நீழலில்
அசுரர்களுடைய ஒளிமயமான சக்கரங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றின் சாயையின் நிழல் நீங்க - ஆதித்த ப்ரகாச நேர் தர
சூரியனுடைய ஒளிக்கு நிகராக விளங்கும், - ஆழிச் சக்ரவாளம் ஆள் தரும் எம்பிரானே
வட்டமான சக்ரவாள கிரிவரையில் உள்ள உலகை ஆண்டருளும் எம்பெருமானே, - மாணிக்க ப்ரவாள நீலம் மதாணி
மாணிக்கமணி, பவளம், நீலமணி (இவைகள் பதிக்கப் பெற்ற) பதக்கத்தை அணிந்த - பொன் கிராதை நூபுரவாசப் பத்ம பாத சேகர
அழகிய வேடப் பெண் வள்ளியின் சிலம்பு அணிந்த தாமரைபோன்ற திருவடியின் நறுமணத்தைச் சூடியுள்ளவனே (அதாவது முருகனின் சிரம் வள்ளியின் பாதங்களில் விழுந்ததின் காரணமாக), - சம்பு வேதா வாசிக்கப் படாத வாசகம்
பிரம்ம தேவர் படித்துக் கூறமுடியாத தனிமந்திரத்தின் உட்பொருளை, - ஈசர்க்குச் சுவாமியாய் முதல் வாசிப்பித்த தேசிகா சுரர்
தம்பிரானே.
சிவ பெருமானுக்கு நல்லாசிரியனாக இருந்து முன்பு உபதேசித்த குரு நாதனே, தேவர்கள் போற்றும் தனிப்பெரும் தலைவனே.