தனதன தானத் தனந்த தனதன தானத் தனந்த
தனதன தானத் தனந்த ...... தனதான
பழுதற வோதிக் கடந்து பகைவினை தீரத் துறந்து
பலபல யோகத் திருந்து ...... மதராசன்
பரிமள பாணத் தயர்ந்து பனைமட லூர்தற் கிசைந்து
பரிதவி யாமெத்த நொந்து ...... மயல்கூர
அழுதழு தாசைப் படுங்க ணபிநய மாதர்க் கிரங்கி
யவர்விழி பாணத்து நெஞ்ச ...... மறைபோய்நின்
றழிவது யான்முற் பயந்த விதிவச மோமற்றையுன்ற
னருள்வச மோஇப்ர மந்தெ ...... ரிகிலேனே
எழுதரு வேதத்து மன்றி முழுதினு மாய்நிற்கு மெந்தை
யெனவொரு ஞானக் குருந்த ...... ருளமேவும்
இருவுரு வாகித் துலங்கி யொருகன தூணிற் பிறந்து
இரணியன் மார்பைப் பிளந்த ...... தனியாண்மை
பொழுதிசை யாவிக்ர மன்தன் மருகபு ராரிக்கு மைந்த
புளகப டீரக் குரும்பை ...... யுடன்மேவும்
புயல்கரி வாழச் சிலம்பின் வனசர மானுக் குகந்து
புனமிசை யோடிப் புகுந்த ...... பெருமாளே.
- பழுது அற ஓதிக் கடந்து பகை வினை தீரத் துறந்து
குற்றம் இல்லாத நல்ல வகையில் கல்விகளை ஓதியும், உலக ஆசைகளைக் கடந்தும், உட்பகையாக வரும் இரண்டு வினைகளை முற்றும் உதறி விலக்கியும், - பல பல யோகத்து இருந்து
பல வகையான யோக மார்க்கங்களை அநுஷ்டித்து இருந்தும், - மத ராசன் பரிமள பாணத்து அயர்ந்து
மன்மத ராஜனான காமனுடைய நறு மணம் வீசும் பாணங்களால் மனக் கவலையும் சோர்வும் கொண்டு, - பனை மடல் ஊர்தற்கு இசைந்து
பனை மடலால் செய்த குதிரையில் ஏறுதற்கும் இணங்கி* - பரிதவியா மெத்த நொந்து மயல் கூர
பரிதவித்து, மிகவும் மனம் நொந்து, காம இச்சை மிகுதிப்பட, - அழுது அழுது ஆசைப் படுங்கண் அபிநய மாதர்க்கு இரங்கி
அன்பு போல் நடித்து மிகவும் அழுது, விரும்புவது போலக் கண்களால் அபிநயிக்கும் விலைமாதர்களின் மேல் ஆசை வைத்து, - அவர் விழி பாணத்து நெஞ்சம் அறை போய் நின்று அழிவது
அவர்களுடைய கண்களாகிய அம்பினால் உள்ளம் குமைந்து நின்று அழிந்துபோவது, - யான் முன் பயந்த விதி வசமோ மற்றை உன் தன் அருள்
வசமோ
நான் முன்பு செய்த விதியின் விளைவோ? அல்லது உன்னுடைய திருவருளின் கூத்தோ? - இ ப்ரமம் தெரிகிலேனே
இந்த மயக்கத்தின் காரணம் எனக்கு விளங்கவில்லையே? - எழுத அரு வேதத்தும் அன்றி முழுதினுமாய் நிற்கும் எந்தை
என
யாராலும் எழுதுவதற்கு முடியாத வேதத்தில் மாத்திரம் அல்லாமல், மற்று எல்லாப் பொருள்களிலும் விளங்கி நிற்கும் எம்பெருமான் என்று கூறிய - ஒரு ஞானக் குருந்தர் உ(ள்)ளம் மேவும்
ஒப்பற்ற ஞானக் குழந்தையாகிய பிரகலாதருடைய உள்ளத்தில் வீற்றிருப்பவரும், - இரு உருவாகித் துலங்கி ஒரு கன தூணில் பிறந்து
மனிதன், சிங்கம் என இரண்டு உருவம் அமைந்த (நரசிம்ம) மூர்த்தியாய்த் துலங்கித் தோன்றி, ஒரு பெரிய தூணில் விளக்கம் உற்று எழுந்து, - இரணியன் மார்பைப் பிளந்த தனி ஆண்மை
இரணியனின் மார்பைப் பிளந்த ஒப்பற்ற வீரத்தை, - பொழுது இசையா விக்ரமன் தன் மருக
பிரகலாதன் வேண்டிய அந்தப் பொழுதிலேயே உடன்பட்டுக் காட்டிய வலிமைசாலியானவரும் ஆகிய திருமாலின் மருகனே, - புராரிக்கு மைந்த
திரிபுரத்தை எரித்த சிவபெருமானுக்கு மைந்தனே, - புளக படீரக் குரும்பை உடன் மேவும்
புளகாங்கிதம் கொண்டதும், சந்தனம் பூசியதும், தென்னங்குரும்பை போன்ற இள மார்பு விளங்கியவளும், - புயல் கரி வாழச் சிலம்பின் வனசர மானுக்கு உகந்து
மேகமும், யானையும் வாழ்கின்ற வள்ளி மலையின் வேடர் குலத்து மான் போன்றவளுமான வள்ளியின் மீது தீராக்காதல் பூண்டு, - புனம் மிசை ஓடிப் புகுந்த பெருமாளே.
அவள் காத்துவந்த தினைப்புனத்தில் ஓடிப்புகுந்து நின்ற பெருமாளே.