தனதனன தந்ததன தானத் தாத்தன
தனதனன தந்ததன தானத் தாத்தன
தனதனன தந்ததன தானத் தாத்தன ...... தனதான
பரதவித புண்டரிக பாதத் தாட்டிகள்
அமுதுபொழி யுங்குமுத கீதப் பாட்டிகள்
பலர்பொருள்க வர்ந்திடைக லாமிட் டோட்டிகள் ...... கொடிதாய
பழுதொழிய அன்புமுடை யாரைப் போற்சிறி
தழுதழுது கண்பிசையு மாசைக் கூற்றிகள்
பகழியென வந்துபடு பார்வைக் கூற்றினர் ...... ஒருகாம
விரகம்விளை கின்றகழு நீரைச் சேர்த்தகில்
ம்ருகமதமி குந்தபனி நீரைத் தேக்கியெ
விபுதர்பதி யங்கதல மேவிச் சாற்றிய ...... தமிழ்நூலின்
விததிகமழ் தென்றல்வர வீசிக் கோட்டிகள்
முலைகளில்வி ழுந்துபரி தாபத் தாற்றினில்
விடியளவு நைந்துருகு வேனைக் காப்பது ...... மொருநாளே
உரகபணை பந்தியபி ஷேகத் தாற்றிய
சகலவுல குந்தரும மோகப் பார்ப்பதி
யுடனுருவு பங்குடைய நாகக் காப்பனும் ...... உறிதாவும்
ஒருகளவு கண்டுதனி கோபத் தாய்க்குல
மகளிர்சிறு தும்புகொடு மோதிச் சேர்த்திடும்
உரலொடுத வழ்ந்தநவ நீதக் கூற்றனு ...... மதிகோபக்
கரவிகட வெங்கடக போலப் போர்க்கிரி
கடவியபு ரந்தரனும் வேளைப் போற்றுகை
கருமமென வந்துதொழ வேதப் பாற்பதி ...... பிறியாத
கடவுளைமு னிந்தமர ரூரைக் காத்துயர்
கரவடக்ர வுஞ்சகிரி சாயத் தோற்றெழு
கடலெனவு டைந்தவுண ரோடத் தாக்கிய ...... பெருமாளே.
- பரத வித புண்டரிக பாதத்து ஆட்டிகள்
பரத நாட்டிய வகைகளுக்கு ஏற்றதும், தாமரை மலர் போன்றதுமான பாதங்களைக் கொண்டு (நாட்டியம்) ஆடுபவர்கள். - அமுது பொழியும் குமுத கீதப் பாட்டிகள்
அமுதம் பொழிகின்ற குமுத மலர் போன்ற வாயினின்றும் கீதங்கள் நிறைந்த பாடல்களைப் பாடுபவர்கள். - பலர் பொருள் கவர்ந்து இடைக் கலாம் இட்டு ஓட்டிகள்
பல பேருடைய பொருள்களைக் கவர்ந்து, மத்தியில் சண்டை செய்து, (கவர்ந்த பின்பு) ஓட்டி விடுபவர்கள். - கொடிது ஆய பழுது ஒழிய அன்பும் உடையாரைப் போல்
சிறிது அழுது அழுது கண் பிசையும் ஆசைக் கூற்றிகள்
பொல்லாத குற்றம் (தம்மேல்) சாராத வகைக்கு, அன்பு உள்ளவர்கள் போல சிறிதளவு அழுது கொண்டே கண்களைப் பிசைந்து ஆசை மொழிகளைப் பேசுபவர்கள். - பகழி என வந்து படு பார்வைக் கூற்றினர்
அம்பு என்று சொல்லும்படி வந்து பாய்கின்ற பார்வையை உடையவர்கள். - ஒரு காம விரகம் விளைகின்ற கழு நீரைச் சேர்த்து அகில்
ம்ருகமத மிகுந்த பனி நீரைத் தேக்கியெ
ஒரு தலைக் காமமாகிய நோயை விளைவிக்கும் செங்கழு நீர்ப் பூவைச் சேர்த்து முடித்து, அகில், கஸ்தூரி, நிரம்ப பன்னீர் இவைகளை நிறைய அணிபவர்களாகிய விலைமாதர்கள். - விபுதர் பதி அங்க தலம் மேவிச் சாற்றிய தமிழ் நூலின் விததி
கமழ் தென்றல் வர வீசிக் கோட்டிகள்
தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுடைய உடம்பில் உள்ள அடையாளக் குறியை* விரும்பிப் பாடிய தமிழ் நூல்களின் பரப்பின் இனிய நறு மணம் வீசும் தென்றல் காற்று வரும்படி வீசி, மக்கள் மனதை வளைப்பவர்கள் (ஆகிய இவர்களின்) - முலைகளில் விழுந்து பரிதாபத்து ஆற்றினில் விடி அளவு
நைந்து உருகுவேனைக் காப்பதும் ஒரு நாளே
மார்பகங்களில் விழுந்து பரிதாபமான வழியில் விடியும் வரை வருந்தி உருகுகின்ற என்னைக் காத்தருளும் நாள் ஒன்று உண்டோ? - உரக பணை பந்தி அபிஷேகத் தாற்றிய சகல உலகும் தரும்
அமோகப் பார்ப்பதி
ஆதிசேஷனுடைய பெருமை வாய்ந்த படக் கூட்டமாகிய முடியின் மேல் தாங்கப்பட்ட எல்லா உலகங்களையும் ஈன்றருளிய மருள் இல்லாத பார்வதி தேவியை - உடன் உருவு பங்கு உடைய நாகக் காப்பனும்
தனது உருவில் ஒரு பாகத்தில் உடையவனும், பாம்பைக் கங்கணமாக அணிந்துள்ளவனுமாகிய சிவபெருமானும், - உறி தாவும் ஒரு களவு கண்டு தனி கோபத்து ஆய்க் குல
மகளிர் சிறு தும்பு கொ(ண்)டு மோதிச் சேர்த்திடும்
உரலொடு தவழ்ந்த நவநீதக் கூற்றனும்
உறி மீது தாவிய ஒரு திருட்டுத் தனத்தைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டவர்களாகிய ஆயர் குலப் பெண்கள் சிறு கயிறு கொண்டு மோதிக் கட்டி வைத்த உரலோடு தவழ்ந்த வெண்ணெய் திருடியவன் என்று பேசப்படுபவனாகிய கண்ணனும், - அதி கோபக் கர விகட வெம் கட கபோலப் போர்க் கிரி
கடவிய புரந்தரனும்
மிக்க கோபத்தைக் கொண்டதும், துதிக்கையை உடையதும், அழகானதும், கொடிய மதநீர் வழியும் கன்னத்தை உடையதும், போருக்கு அமைந்ததுமான மலை போன்ற ஐராவதம் என்னும் வெள்ளை யானையைச் செலுத்தும் இந்திரனும், - வேளைப் போற்றுகை கருமம் என வந்து தொழ
(இந்த மூவரும்) உன்னைத் துதித்தல் தமது கடமைச் செயலாகும் என்று உணர்ந்து வந்து வணங்க, - வேதப் பால் பதி பிறியாத கடவுளை முனிந்து அமரர் ஊரைக்
காத்து
வேதப் பிரணவத்தில் பதிப் பொருள் விளங்கப் பெறாத தேவனாகிய பிரமனைக் கோபித்தும், தேவர்கள் ஊராகிய அமராவதியைக் காத்தும், - உயர் கரவட க்ரவுஞ்ச கிரி சாயத் தோற்று எழு கடல் என
உடைந்த அவுணர் ஓடத் தாக்கிய பெருமாளே.
உயரமுள்ளதும், வஞ்சகம் நிறைந்துள்ளதுமான கிரவுஞ்ச மலை மாண்டு அழிந்து தோல்வி அடைந்து, ஏழு கடல்களும் பெருக்கு எழுந்தது போல் சிதறுண்டு, அசுரர்கள் யாவரும் போர்க்களத்தை விட்டு ஓட்டம் பிடிக்கும்படி எதிர்த்து மோதிய பெருமாளே.