திருப்புகழ் · 1172பத்தித் தரள (பொதுப்பாடல்கள்)

தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான

தினம் ஒரு திருப்புகழ் Dinam oru Thiruppugazh

பத்தித்தர ளக்கொத் தொளிர்வரி
பட்டப்புள கச்செப் பிளமுலை
பட்டிட்டெதிர் கட்டுப் பரதவ ...... ருயர்தாளப்
பத்மத்திய ரற்புக் கடுகடு
கட்சத்தியர் மெத்தத் திரவிய
பட்சத்திய ரிக்குச் சிலையுரு ...... விலிசேருஞ்
சித்தத்தரு ணர்க்குக் கனியத
ரப்புத்தமு தத்தைத் தருமவர்
சித்ரக்கிர ணப்பொட் டிடுபிறை ...... நுதலார்தந்
தெட்டிற்படு கட்டக் கனவிய
பட்சத்தரு ளற்றுற் றுனதடி
சிக்கிட்டிடை புக்கிட் டலைவது ...... தவிராதோ
மத்தப்பிர மத்தக் கயமுக
னைக்குத்திமி தித்துக் கழுதுகள்
மட்டிட்டஇ ரத்தக் குருதியில் ...... விளையாட
மற்றைப்பதி னெட்டுக் கணவகை
சத்திக்கந டிக்கப் பலபல
வர்க்கத்தலை தத்தப் பொருபடை ...... யுடையோனே
முத்திப்பர மத்தைக் கருதிய
சித்தத்தினில் முற்றத் தவமுனி
முற்பட்டுழை பெற்றுத் தருகுற ...... மகள்மேல்மால்
முற்றித்திரி வெற்றிக் குருபர
முற்பட்டமு ரட்டுப் புலவனை
முட்டைப்பெயர் செப்பிக் கவிபெறு ...... பெருமாளே.

பத உரை

  • பத்தித் தரளக் கொத்து ஒளிர் வரி பட்டப் புளகச் செப்பு இள முலை பட்டு இட்டு
    வரிசையாய் அமைந்த முத்துமாலைகளின் கூட்டம் ஒளி வீசுவதும், ரேகைகள் விளங்குவதும், புளகாங்கிதம் கொண்டதும், செப்புக் குடம் போன்றதுமான இளம் மார்பகங்களின் மீது பட்டு ஆடையை அணிந்து,
  • எதிர் கட்டுப் பரதவர் உயர் தாளப் பத்மத்தியர் அற்புக் கடுகடு கண் சத்தியர்
    முற்புறத்தில் கச்சை முடிந்து, பரத நாட்டியத்தில் வல்லவர்களுடைய சிறந்த தாளத்துக்கு இணையான தாமரை மொட்டுப் போன்ற மார்பை உடையவர்கள். (ஒரு சமயத்தில்) அன்பையும் (இன்னொரு சமயம்) சினக் குறிப்பையும் காட்டும் வேல் போன்ற கண்களை உடையவர்கள்.
  • மெத்தத் திரவிய பட்சத்தியர் இக்குச் சிலை உருவு இலி சேரும் சித்தத் தருணர்க்குக் கனி அதரப் புத்தமுதத்தைத் தரும்
    மிகவும் பொருள் மீது ஆசை வைத்துள்ளவர்கள். கரும்பு வில்லை உடைய, உருவம் இல்லாத மன்மதனுடைய காம சேஷ்டைகள் சேர்ந்துள்ள உள்ளத்தை உடைய இளம் வாலிபர்களுக்கு கொவ்வைப் பழம் போன்ற வாயிதழ் அமுதத்தைத் தருபவர்கள்.
  • அவர் சித்ரக் கிரணப் பொட்டு இடு பிறை நுதலார் தம் தெட்டில் படு கட்டக் கனவிய பட்சத்து அருள் அற்று
    அவர்கள் அழகிய ஒளி வீசும் பொட்டை இட்டுள்ள பிறைச் சந்திரன் போன்ற நெற்றியை உடைய விலைமாதர்கள். அவர்களின் வஞ்சனை வலையில் படுகின்ற, கஷ்டமான, மிகுந்த ஆசை என்னும் மகிழ்ச்சி நீங்கி,
  • உற்று உனது அடி சிக்கிட்டு இடை புக்கிட்டு அலைவது தவிராதோ
    உனது திருவடியில் சரணடைந்து மனதை நிறுத்தினால், உலகச் சிக்கலில் மாட்டிக் கொண்டு இடையிலே புகுந்து அலைச்சல் உறுவது தொலையாதோ?
  • மத்தப் பிரமத்தக் கய முகனைக் குத்தி மிதித்துக் கழுதுகள் மட்டிட்ட இரத்தக் குருதியில் விளையாட
    செருக்கையும் மதி மயக்கத்தையும் உடைய யானை முகம் கொண்ட தாரகாசுரனது உடலைக் குத்தியும், மிதித்தும், பேய்கள் அளவில்லாத ரத்தச் சிவப்பில் விளையாடவும்,
  • மற்றைப் பதினெட்டுக் கண வகை சத்திக்க நடிக்கப் பல பல வர்க்கத் தலை தத்தப் பொரு படை உடையோனே
    மற்றும் பதினெட்டு கண வகைகளும் ஒலி செய்து நடனமாட, பல வகையான ஜீவ ராசிகளின் தலைகள் சிதறுண்டு விழும்படியாக சண்டை செய்த வேலாயுதத்தை உடையவனே,
  • முத்திப் பரமத்தைக் கருதிய சித்தத்தினில் முற்றத் தவ முனி முற்பட்டு உழை பெற்றுத் தரு குற மகள் மேல் மால் முற்றித் திரி வெற்றிக் குருபர
    முக்தி என்னும் மேலான பொருளைப் பெற நினைத்த உள்ளத்தோடு, முதிர்ந்த தவ நிலையில் இருந்த சிவ முனிவரின் (உருவில் வந்த திருமாலின்) முன்னிலையில் நின்று லக்ஷ்மியாகிய பெண் மான் பெற்றுத் தந்த குற மகளாகிய வள்ளியின்* மேல் ஆசை நிரம்பக் கொண்டு, (வள்ளி இருந்த தினைப் புனத்தில்) திரிந்த வெற்றி வீரனாகிய குரு மூர்த்தியே,
  • முற்பட்ட முரட்டுப் புலவனை முட்டைப் பெயர் செப்பிக் கவி பெறு பெருமாளே.
    எதிர்ப்பட்ட பிடிவாதம் பிடித்த பொய்யாமொழி** என்னும் புலவனை முட்டை என்ற பெயர் என்று சொல்லி, அந்தப் புலவனைத் தம் மீது பாடவைத்த பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * சிவ முனிவர் தவ நிலையில் இருக்க, திருமகள் மானுருவுடன் எதிரில் செல்ல, அந்த மான் ஒரு பெண் குழவியை ஈன்றது. இக்குழந்தை வேடர்களால் வளர்க்கப்பட்டு வள்ளிக் கிழங்கு தோண்டிய குழியில் இருந்ததால் வள்ளி எனப் பெயரிடப்பட்டது.
  • ** சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக வந்து காட்டில் புலவர் தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.
  • * When the Saivaite sage went into deep meditation, Goddess Lakshmi appeared in front of him in the form of a deer; She delivered a female child which was discovered by the hunters in a pit of VaLLi roots; the girl was therefore named VaLLi.
  • ** PoyyAmozhi was a poet bent upon praising SivA only and was totally against Murugan. In an interesting episode, Murugan came in the disguise of a hunter with a bow, challenged the poet and eventually won him over.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout