திருப்புகழ் 1171 பகல்மட்க (பொதுப்பாடல்கள்)

தனதத்தத் தத்தத் தனதன
தனதத்தத் தத்தத் தனதன
தனதத்தத் தத்தத் தனதன ...... தனதான
பகல்மட்கச்  செக்கர்ப்  ப்ரபைவிடு 
நவரத்நப்  பத்தித்  தொடைநக 
நுதிபட்டிட்  டற்றுச்  சிதறிட  ......  இதழூறல் 
பருகித்தித்  திக்கப்  படுமொழி 
பதறக்கைப்  பத்மத்  தொளிவளை 
வதறிச்சத்  திக்கப்  புளகித  ......  தனபாரம் 
அகலத்திற்  றைக்கப்  பரிமள 
அமளிக்குட்  சிக்கிச்  சிறுகென 
இறுகக்கைப்  பற்றித்  தழுவிய  ......  அநுராக 
அவசத்திற்  சித்தத்  தறிவையு 
மிகவைத்துப்  பொற்றித்  தெரிவையர் 
வசம்விட்டர்ச்  சிக்கைக்  கொருபொழு  ......  துணர்வேனோ 
இகல்வெற்றிச்  சத்திக்  கிரணமு 
முரணிர்த்தப்  பச்சைப்  புரவியு 
மிரவிக்கைக்  குக்டத்  துவசமு  ......  மறமாதும் 
இடைவைத்துச்  சித்ரத்  தமிழ்கொடு 
கவிமெத்தச்  செப்பிப்  பழுதற 
எழுதிக்கற்  பித்துத்  திரிபவர்  ......  பெருவாழ்வே 
புகலிற்றர்க்  கிட்டுப்  ப்ரமையுறு 
கலகச்செற்  றச்சட்  சமயிகள் 
புகலற்குப்  பற்றற்  கரியதொ  ......  ருபதேசப் 
பொருளைப்புட்  பித்துக்  குருபர 
னெனமுக்கட்  செக்கர்ச்  சடைமதி 
புனையப்பர்க்  கொப்பித்  தருளிய  ......  பெருமாளே. 
  • பகல் மட்கச் செக்கர்ப் ப்ரபை விடு நவ ரத்னப் பத்தித் தொடை நக நுதி பட்டிட்டு அற்றுச் சிதறிட
    சூரியனுடைய ஒளியும் மழுங்கும்படி சிவந்த ஒளியை வீசுகின்ற நவ ரத்தினங்களால் ஆகிய ஒழுங்கு வரிசை கொண்ட மாலை, நகத்தின் நுனி பட்டதனால் அறுபட்டு சிதறுண்ண,
  • இதழ் ஊறல் பருகித் தித்திக்கப் படு மொழி பதறக் கைப் பத்மத்து ஒளி வளை வதறிச் சத்திக்க
    வாயிதழ் ஊறலை உண்டு இனிமையாகப் பேசும் மொழிகள் பதைபதைப்புடன் வெளிவர, தாமரை போன்ற கையில் உள்ள பிரகாசமான வளைகள் கலகலத்து ஒலி செய்ய,
  • புளகித தன பாரம் அகலத்தில் தைக்கப் பரிமள அமளிக்குள் சிக்கிச் சிறுகு என இறுகக் கைப்பற்றித் தழுவிய அநுராக அவசத்தில்
    புளகம் கொண்ட தன பாரம் மார்பில் அழுந்த, மணம் வீசும் படுக்கையில் அகப்பட்டு நிலை தாழுமாறு அழுத்தமாகக் கையால் அணைத்துத் தழுவிய காமப் பற்றால் வரும் மயக்கத்தில்,
  • சித்தத்து அறிவையும் மிக வைத்துப் பொற்றித் தெரிவையர் வசம் விட்டு அர்ச்சிக்கைக்கு ஒரு பொழுது உணர்வேனோ
    விலைமாதர்களின் வசப்படுதலை விட்டுவிட்டு, உள்ளத்தில் உள்ள அறிவை மிகவும் வைத்துப் போற்றி உன்னை அர்ச்சனை செய்து வணங்க ஒரு பொழுதேனும் உணர மாட்டேனோ?
  • இகல் வெற்றிச் சத்திக் கிரணமும் முரண் நிர்த்தப் பச்சைப் புரவியும் இரவிக் கைக் குக்(கு)டத் துவசமும் மற மாதும்
    வலிமையையும் வெற்றியையும் கொண்ட, ஒளி வீசும் வேலாயுதத்தையும், வலிமை உடையதும், ஆடல் செய்வதுமான பச்சை நிறம் கொண்ட குதிரையாகிய மயிலையும், சூரியனுடைய கிரணங்களைக் கூவி வரவழைக்கும் சேவல் கொடியையும், வேடர் மகளாகிய வள்ளியையும்,
  • இடை வைத்துச் சித்ரத் தமிழ் கொடு கவி மெத்தச் செப்பிப் பழுது அற எழுதிக் கற்பித்துத் திரிபவர் பெரு வாழ்வே
    பாட்டின் இடையே பொருந்த வைத்து அழகிய தமிழால் பாடல்களை நிறையப் பாடியும், குற்றம் இல்லாமல் எழுதியும் கற்பித்தும் திரியும் பாவலர்களின் பெரிய செல்வமே,
  • புகலில் தர்க்கிட்டுப் ப்ரமை உறு கலகச் செற்றச் சட் சமயிகள் புகலற்குப் பற்றற்கு அரியது ஒர் உபதேசப் பொருளைப் புட்பித்துக் குருபரன் என
    விருப்பத்துடன் தர்க்கம் செய்து மயக்கம் கொண்டதும் கலகத்தை விளைவிப்பதும் பகைமை ஊட்டுவதுமான ஆறு சமயத்தினரும் சொல்லுதற்கும் அடைவதற்கும் முடியாததான ஒப்பற்ற உபதேசப் பொருளை திருவாய் மலர்ந்து குரு மூர்த்தி என விளங்கி,
  • முக்கண் செக்கர்ச் சடை மதி புனை அப்பர்க்கு ஒப்பித்து அருளிய பெருமாளே.
    முன்று கண்களை உடையவரும், சிவந்த சடை மீது சந்திரனை அணிந்தவருமாகிய தந்தையான சிவபெருமானுக்கு எடுத்துரைத்து அருளிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com