திருப்புகழ் 1170 நீரும் என்பு (பொதுப்பாடல்கள்)

தான தந்த தான தான தான தந்த தான தான
தான தந்த தான தான ...... தனதான
நீரு  மென்பு  தோலி  னாலு  மாவ  தென்கை  கால்க  ளோடு 
நீளு  மங்க  மாகி  மாய  ......  வுயிரூறி 
நேச  மொன்று  தாதை  தாய  ராசை  கொண்ட  போதில்  மேவி 
நீதி  யொன்று  பால  னாகி  ......  யழிவாய்வந் 
தூரு  மின்ப  வாழ்வு  மாகி  யூன  மொன்றி  லாது  மாத 
ரோடு  சிந்தை  வேடை  கூர  ......  உறவாகி 
ஊழி  யைந்த  கால  மேதி  யோனும்  வந்து  பாசம்  வீச 
ஊனு  டம்பு  மாயு  மாய  ......  மொழியாதோ 
சூர  னண்ட  லோக  மேன்மை  சூறை  கொண்டு  போய்  விடாது 
தோகை  யின்கண்  மேவி  வேலை  ......  விடும்வீரா 
தோளி  லென்பு  மாலை  வேணி  மீது  கங்கை  சூடி  யாடு 
தோகை  பங்க  ரோடு  சூது  ......  மொழிவோனே 
பாரை  யுண்ட  மாயன்  வேயை  யூதி  பண்டு  பாவ  லோர்கள் 
பாடல்  கண்டு  ஏகு  மாலின்  ......  மருகோனே 
பாத  கங்கள்  வேறி  நூறி  நீதி  யின்சொல்  வேத  வாய்மை 
பாடு  மன்பர்  வாழ்வ  தான  ......  பெருமாளே. 
  • நீரும் என்பு தோலினாலும் ஆவது என் கை கால்களோடு
    நீர், எலும்பு, தோல் இவைகளால் ஆக்கப்பட்டதாகிய என்னுடைய கை, கால்கள் இவைகளோடு,
  • நீளும் அங்கமாகி மாய உயிர் ஊறி
    நீண்ட அங்கங்களை உடையவதாகி, மாயமான உயிர் ஊறப் பெற்று,
  • நேசம் ஒன்று தாதை தாயர் ஆசை கொண்ட போதில் மேவி
    அன்பு பொருந்திய தந்தை தாய் ஆகிய இருவரும் காதல் கொண்ட சமயத்தில் கருவில் உற்று,
  • நீதி ஒன்று பாலனாகி அழிவாய் வந்து
    ஒழுக்க நெறியில் நிற்கும் பிள்ளையாய்த் தோன்றி, அழிதற்கே உரிய வழியில் சென்று,
  • ஊரும் இன்ப வாழ்வும் ஆகி ஊனம் ஒன்று இலாது
    அனுபவிக்கும் இன்ப வாழ்வை உடையவனாகி, குறை ஒன்றும் இல்லாமல்,
  • மாதரோடு சிந்தை வேடை கூர உறவாகி
    மாதர்களுடன் மன வேட்கை மிக்கு எழ, அவர்களுடன் சம்பந்தப்பட்டு,
  • ஊழி இயைந்த கால(ம்) மேதியோனும் வந்து பாசம் வீச
    ஊழ் வினையின்படி ஏற்பட்ட முடிவு காலத்தில் எருமை வாகனனான யமனும் தவறாமல் வந்து பாசக் கயிற்றை வீச,
  • ஊன் உடம்பு மாயும் மாயம் ஒழியாதோ
    (இந்த) மாமிச உடல் அழிந்து போகும் மாயம் முடிவு பெறாதோ?
  • சூரன் அண்ட லோகம் மேன்மை சூறை கொண்டு போய் விடாது
    சூரன் அண்டங்களாம் லோகங்களின் மேலான தலைமையைக் கொள்ளை அடித்துப் போய் விடாமல்,
  • தோகை யின்கண் மேவி வேலை விடும்வீரா
    மயிலின் மேல் ஏறி வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே,
  • தோளில் என்பு மாலை வேணி மீது கங்கை சூடி ஆடு
    தோள் மீது எலும்பு மாலையையும், சடையில் கங்கையையும் தரித்து நடனம் புரிபவரும்,
  • தோகை பங்க ரோடு சூது மொழிவோனே
    மயில் போன்ற பார்வதியின் பக்கத்தில் இருப்பவருமாான சிவபெருமானுக்கு ரகசியப் பிரணவப் பொருளை உபதேசித்தவனே,
  • பாரை உண்ட மாயன் வேயை ஊதி
    இப்பூமியை உண்டவனான மாயவன், மூங்கில் புல்லாங் குழலை ஊதியவன்,
  • பண்டு பாவலோர்கள் பாடல் கண்டு ஏகும் மாலின் மருகோனே
    முன்பு, (திருமழிசை ஆழ்வார் ஆகிய) புலவர்களின் பாடலைக் கேட்டு மகிழ்ந்து (பின்னர் அவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி) அவர்கள் பின்பு செல்பவனாகிய திருமாலின்* மருகனே,
  • பாதகங்கள் வேறி நூறி
    பாபங்களைக் குலைத்துப் பொடி செய்து,
  • நீதியின் சொல் வேத வாய்மை பாடும்
    நீதிச் சொற்களைக் கொண்டு வேத உண்மைகளையே எடுத்துப் பாடுகின்ற
  • அன்பர் வாழ்வதான பெருமாளே.
    அன்பர்களுக்குச் செல்வமாக விளங்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com