திருப்புகழ் 1169 ஆரவாரமாய் (பொதுப்பாடல்கள்)

தான தான தான தந்த தான தான தான தந்த
தான தான தான தந்த ...... தனதான
ஆர  வார  மாயி  ருந்து  ஏம  தூத  ரோடி  வந்து 
ஆழி  வேலை  போன்மு  ழங்கி  ......  யடர்வார்கள் 
ஆக  மீதி  லேசி  வந்து  ஊசி  தானு  மேநு  ழைந்து 
ஆலைமீதி  லேக  ரும்பு  ......  எனவேதான் 
வீர  மான  சூரி  கொண்டு  நேரை  நேரை  யேபி  ளந்து 
வீசு  வார்கள்  கூகு  வென்று  ......  அழுபோது 
வீடு  வாச  லான  பெண்டிர்  ஆசை  யான  மாதர்  வந்து 
மேலை  வீழ்வ  ரீது  கண்டு  ......  வருவாயே 
நாரி  வீரி  சூரி  யம்பை  வேத  வேத  மேபு  கழ்ந்த 
நாதர்  பாலி  லேயி  ருந்த  ......  மகமாயி 
நாடி  யோடி  வாற  அன்பர்  காண  வேண  தேபு  கழ்ந்து 
நாளு  நாளு  மேபு  கன்ற  ......  வரைமாது 
நீரின்  மீதி  லேயி  ருந்த  நீலி  சூலி  வாழ்வு  மைந்த 
நீப  மாலை  யேபு  னைந்த  ......  குமரேசா 
நீல  னாக  வோடி  வந்த  சூரை  வேறு  வேறு  கண்ட 
நீத  னான  தோர்கு  ழந்தை  ......  பெருமாளே. 
  • ஆரவாரமாயிருந்து
    ஆடம்பரமாக வாழ்க்கையை நடத்திவந்த நாளிலே,
  • ஏம தூதரோடி வந்து
    யமனுடைய தூதர்கள் ஓடிவந்து
  • ஆழி வேலை போன்முழங்கி யடர்வார்கள்
    சமுத்திரத்தின் அலைகளைப் போலப் பேரொலியைச் செய்து என்னை நெருக்கி வருத்துவார்கள்.
  • ஆக மீதிலே சிவந்து ஊசி தானுமே நுழைந்து
    என் உடலிலே கோபத்துடன் ஊசியைக் குத்தி நுழைப்பார்கள்.
  • ஆலைமீதிலே கரும்பு எனவேதான்
    ஆலையில் நசுக்கப்படும் கரும்பு என்று சொல்லும்படி என் உடலைக் கசக்கி,
  • வீரமான சூரி கொண்டு நேரை நேரையேபிளந்து வீசுவார்கள்
    வீரம் பொருந்திய சூரிக்கத்தியைக் கொண்டுவந்து உடலை நேர் பாதியாகப் பிளந்து எறிவார்கள்.
  • கூகு வென்று அழுபோது
    (இந்த மரண வேதனையை நான் படுகையில்) வீட்டில் உள்ளோர் கூ கூ என அழுது கொண்டிருக்கும்போது
  • வீடு வாசலான பெண்டிர் ஆசையான மாதர் வந்து
    வீடு வாசலில் உள்ள மாதர்களும், என்மீது அன்பு வைத்த மாதர்களும் வந்து
  • மேலை வீழ்வர் ஈது கண்டு வருவாயே
    என் உடல் மீது வீழ்வார்கள். இந்தக் கோலத்தைக் கண்டு நீ வந்து அருள் புரிவாயாக.
  • நாரி வீரி சூரி யம்பை வேத வேதமே புகழ்ந்த
    தேவி, வீரமுள்ளவள், அச்சத்தைத் தருபவள், அம்பிகை, எல்லா வேதங்களும் புகழ்கின்ற
  • நாதர் பாலிலேயிருந்த மகமாயி
    தலைவராம் சிவனாரின் இடது பாகத்தில் இருக்கும் ஆதியாம் அன்னை,
  • நாடி யோடி வாற அன்பர் காண வேணதே புகழ்ந்து
    தன்னை விரும்பி ஓடிவருகின்ற அன்பர்கள் கண்டு நிரம்பவே புகழ்ந்து
  • நாளு நாளுமே புகன்ற வரைமாது
    தினந்தோறும் துதித்த மலைமகள்,
  • நீரின் மீதி லேயிருந்த நீலி
    பாற்கடலில் பள்ளி கொண்ட நீல நிறத்து திருமாலின் அம்சமான விஷ்ணுசக்தி,
  • சூலி வாழ்வு மைந்த
    சூலம் ஏந்தியவள் - ஆகிய உமைக்குச் செல்வமாக அமைந்த மைந்தனே,
  • நீப மாலையேபுனைந்த குமரேசா
    கடப்பமலர் மாலையையே சூடியுள்ள குமரேசனே,
  • நீலனாக வோடி வந்த சூரை வேறு வேறு கண்ட
    நீல நிறத்துடன் (மாறுவேடம் புனைந்து) ஓடிவந்த சூரனை துண்டம் துண்டமாகப் பிளந்த,
  • நீதனான தோர்குழந்தை பெருமாளே.
    நியாய மூர்த்தியான ஒப்பற்ற பாலசுப்பிரமணியப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com