திருப்புகழ் 1168 நிருதரார்க்கு ஒரு (பொதுப்பாடல்கள்)

தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன ...... தனதான
நிருத  ரார்க்கொரு  காலா  ஜேஜெய 
சுரர்க  ளேத்திடு  வேலா  ஜேஜெய 
நிமல  னார்க்கொரு  பாலா  ஜேஜெய  ......  விறலான 
நெடிய  வேற்படை  யானே  ஜேஜெய 
எனஇ  ராப்பகல்  தானே  நான்மிக 
நினது  தாட்டொழு  மாறே  தானினி  ......  யுடனேதான் 
தரையி  னாழ்த்திரை  யேழே  போலெழு 
பிறவி  மாக்கட  லூடே  நானுறு 
சவலை  தீர்த்துன  தாளே  சூடியு  ......  னடியார்வாழ் 
சபையி  னேற்றியின்  ஞானா  போதமு 
மருளி  யாட்கொளு  மாறே  தானது 
தமிய  னேற்குமு  னேநீ  மேவுவ  ......  தொருநாளே 
தருவி  னாட்டர  சாள்வான்  வேணுவி 
னுருவ  மாய்ப்பல  நாளே  தானுறு 
தவசி  னாற்சிவ  னீபோய்  வானவர்  ......  சிறைதீரச் 
சகல  லோக்கிய  மேதா  னாளுறு 
மசுர  பார்த்திப  னோடே  சேயவர் 
தமரை  வேற்கொடு  நீறா  யேபட  ......  விழமோதென் 
றருள  ஏற்றம  ரோடே  போயவ 
ருறையு  மாக்கிரி  யோடே  தானையு 
மழிய  வீழ்த்தெதிர்  சூரோ  டேயம  ......  ரடலாகி 
அமரில்  வீட்டியும்  வானோர்  தானுறு 
சிறையை  மீட்டர  னார்பால்  மேவிய 
அதிப  ராக்ரம  வீரா  வானவர்  ......  பெருமாளே. 
  • நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய
    அசுரர்களுக்கு ஒரு யமனாக ஏற்பட்டவனே, வெல்க, வெல்க,
  • சுரர்கள் ஏத்திடு வேலா ஜேஜெய
    தேவர்கள் போற்றித் துதிக்கும் வேலனே, வெல்க, வெல்க,
  • நிமலனார்க்கு ஒரு பாலா ஜேஜெய
    பரிசுத்த மூர்த்தியாம் சிவனாருக்கு ஒப்பற்ற குமாரனே, வெல்க, வெல்க,
  • விறலான நெடிய வேற்படையானே ஜேஜெய
    மிக வலிமையான வேலினை ஆயுதமாய்க் கொண்டோனே, வெல்க, வெல்க,
  • எனஇராப்பகல் தானே நான்மிக
    என்றெல்லாம் இரவும் பகலுமாக நான் நிரம்பவுமே
  • நினது தாள் தொழு மாறே தான்
    உன்னுடைய திருவடியைப் பணிந்து போற்றும் படியாக
  • இனி யுடனேதான்
    இனியும் சிறிதும் தாமதம் செய்யாமலேதான்,
  • தரையின்ஆழ்த்திரை யேழே போலெழு
    இந்தப் புவியில் ஆழமுள்ள ஏழு கடல்களைப் போல் எழுகின்ற
  • பிறவி மாக்கட லூடே நான் உறு
    பிறவி என்னும் பெருங்கடலில் நான் அனுபவிக்கும்
  • சவலை தீர்த்து உன தாளே சூடி
    மனக் குழப்பங்களைத் தீர்த்து, உன் பாதமே தலையில் சூடியவனாய்,
  • உன் அடியார்வாழ் சபையி னேற்றி
    உன் அடியார்கள் வாழ்கின்ற கூட்டத்திலே கூட்டி வைத்து,
  • இன் ஞானா போதமும் அருளி
    இனிய ஞான உபதேசத்தையும் எனக்கு அருளி,
  • ஆட்கொளு மாறே தானது
    என்னை ஆண்டுகொண்டு அருள்வதன் பொருட்டே
  • தமியனேற்கு முனே நீ மேவுவது ஒருநாளே
    தனியேனாக உள்ள என் முன் நீ தோன்றும் ஒருநாள் உண்டோ?
  • தருவி னாட்டரசாள்வான்
    கற்பகத் தருக்கள் நிறைந்த தேவநாட்டு அரசாட்சியைப் புரியும் இந்திரன்*
  • வேணுவினுருவமாய்ப்பல நாளே
    மூங்கிலின் உருவம் எடுத்து, பல நாட்களாக
  • தானுறு தவசினால்
    தான் செய்த தவத்தின் பயனாக
  • சிவன் நீபோய் வானவர் சிறைதீர
    சிவபிரான் உன்னை அழைத்து நீ சென்று தேவர்களின் சிறையை நீக்க,
  • சகல லோக்கியமே தான் ஆளுறும்
    எல்லாவிதமான உலகப்பற்றும் சுகபோகமும் ஆண்டு அனுபவிக்கும்
  • அசுர பார்த்திபனோடே சேயவர் தமரை
    அசுரர்களின் அரசன் சூரனையும், அவனது மக்கள், சுற்றத்தாரையும்
  • வேற்கொடு நீறாயேபட விழ மோதென்று
    வேல் கொண்டு அவர்கள் பொடியாக விழும்படி தாக்கு என்று
  • அருள ஏற்று அமரோடே போய்
    திருவாய் மலர்ந்து ஆணையிட, அதனை ஏற்று போர்க்களத்துக்குச் சென்று
  • அவருறையு மாக்கிரியோடே தானையும்
    அசுரர் தங்கிய பெரிய கிரெளஞ்சம், ஏழு மலைகளுடன், சேனையும்
  • அழிய வீழ்த்து எதிர் சூரோடே அமர் அடலாகி
    அழிந்து விழச்செய்து, எதிர்த்து வந்த சூரனுடன் பகை பூண்டு,
  • அமரில் வீட்டியும்
    போரிலே அவனை அழித்தும்,
  • வானோர் தானுறு சிறையை மீட்டு
    அடைபட்டிருந்த சிறையினின்றும் தேவர்களை விடுவித்துக் காத்தும்,
  • அரனார்பால் மேவிய அதி பராக்ரம வீரா
    சிவபிரானிடம் திரும்பி வந்து சேர்ந்த மகா பராக்ரம வீரனே,
  • வானவர் பெருமாளே.
    தேவர்கள் தொழும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com