திருப்புகழ் 1167 நிமிர்ந்த முதுகு (பொதுப்பாடல்கள்)

தனந்த தனனந் தனந்த தனந்த தனனந் தனந்த
தனந்த தனனந் தனந்த ...... தனதான
நிமிர்ந்த  முதுகுங்  குனிந்து  சிறந்த  முகமுந்  திரங்கி 
நிறைந்த  வயிறுஞ்  சரிந்து  ......  தடியூணி 
நெகிழ்ந்து  சடலந்  தளர்ந்து  விளங்கு  விழியங்  கிருண்டு 
நினைந்த  மதியுங்  கலங்கி  ......  மனையாள்கண் 
டுமிழ்ந்து  பலருங்  கடிந்து  சிறந்த  வியலும்  பெயர்ந்து 
உறைந்த  உயிருங்  கழன்று  ......  விடுநாள்முன் 
உகந்து  மனமுங்  குளிர்ந்து  பயன்கொள்  தருமம்  புரிந்து 
ஒடுங்கி  நினையும்  பணிந்து  ......  மகிழ்வேனோ 
திமிந்தி  யெனவெங்  கணங்கள்  குணங்கர்  பலவுங்  குழும்பி 
திரண்ட  சதியும்  புரிந்து  ......  முதுசூரன் 
சிரங்கை  முழுதுங்  குடைந்து  நிணங்கொள்  குடலுந்  தொளைந்து 
சினங்க  ழுகொடும்  பெருங்கு  ......  ருதிமூழ்கி 
அமிழ்ந்தி  மிகவும்  பிணங்கள்  அயின்று  மகிழ்கொண்டு  மண்ட 
அடர்ந்த  அயில்முன்  துரந்து  ......  பொருவேளே 
அலங்க  லெனவெண்  கடம்பு  புனைந்து  புணருங்  குறிஞ்சி 
அணங்கை  மணமுன்  புணர்ந்த  ......  பெருமாளே. 
  • நிமிர்ந்த முதுகுங் குனிந்து சிறந்த முகமுந் திரங்கி
    நிமிர்ந்திருந்த முதுகும் கூன் விழுந்து, பரந்து விளங்கிய முகமும் சுருக்கம் கண்டு,
  • நிறைந்த வயிறுஞ் சரிந்து தடியூணி
    நிறைந்து ஒழுங்காய் இருந்த வயிறும் சரிதலுற்று, தடியை ஊன்றும் நிலை ஏற்பட்டு,
  • நெகிழ்ந்து சடலந் தளர்ந்து விளங்கு விழியங்கு இருண்டு
    நெகிழ்வுற்று உடம்பு தளர்ச்சி அடைந்து, ஒளியுடன் இருந்த கண்கள் அங்கு இருள் அடைந்து,
  • நினைந்த மதியுங் கலங்கி
    நினைவோடு இருந்த அறிவும் கலக்கம் அடைந்து,
  • மனையாள் கண்டுமிழ்ந்து பலருங் கடிந்து
    மனையவள் இந்த நிலையைக் கண்டு சீ என உமிழ்ந்து, பிறரும் வசைகள் பல பேசி,
  • சிறந்த இயலும் பெயர்ந்து
    சிறப்பாக இருந்த குணத்தன்மையும் நீங்கி,
  • உறைந்த உயிருங் கழன்று விடுநாள்முன்
    உடலில் குடிகொண்டிருந்த உயிரும் பிரிந்து விடும் நாள் வருவதற்கு முன்பாக,
  • உகந்து மனமுங் குளிர்ந்து பயன்கொள் தருமம் புரிந்து
    மனமகிழ்ச்சியுடன் உள்ளக் குளிர்ச்சியுடன் நல்ல பயனைத் தரும் தர்மங்களைச் செய்து,
  • ஒடுங்கி நினையும் பணிந்து மகிழ்வேனோ
    என் ஆணவம் ஒடுங்கி, உன்னைப் பணிந்து மகிழ மாட்டேனோ?
  • திமிந்தி யெனவெங் கணங்கள் குணங்கர் பலவுங் குழும்பி
    திமிந்தி என்ற ஒலியோடு பிசாசுக் கணங்கள் பல வகையானவை ஒன்று கூடி
  • திரண்ட சதியும் புரிந்து
    கூட்டமாக நின்று தாளத்துடன் கூத்தாடி,
  • முதுசூரன் சிரம் கை முழுதுங் குடைந்து
    பழையவனான சூரனின் தலை, கை இவையாவற்றையும் நோவுபடச் செய்து,
  • நிணங்கொள் குடலுந் தொளைந்து
    மாமிசம் நிறைந்த குடலைத் தொளை செய்து,
  • சினங் கழுகொடும் பெருங்குருதிமூழ்கி
    கோபம் கொண்ட கழுகுகளுடன், அந்தச் சூரனின் மிகுத்துப் பெருகும் ரத்தத்தில் முழுகி,
  • அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ்கொண்டு மண்ட
    அமிழ்ந்தும், நிரம்பப் பிணங்களை உண்டும், மகிழ்ச்சி கொண்டு நெருங்கும்படியாக,
  • அடர்ந்த அயில்முன் துரந்து பொருவேளே
    தாக்கும் வேலாயுதத்தை முன்பு செலுத்திப் போர் செய்த செவ்வேளே.
  • அலங்க லெனவெண் கடம்பு புனைந்து
    மாலையாக வெண்மையான கடப்பமலரை அணிந்து கொண்டு,
  • புணருங் குறிஞ்சி அணங்கை மணமுன் புணர்ந்த பெருமாளே.
    உன்னுடன் சேர்ந்த மலைநாட்டுப் பெண்ணான வள்ளியை முன்பு திருமணம் செய்து கூடிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com