திருப்புகழ் 1166 நரையொடு பல் (பொதுப்பாடல்கள்)

தனதன தத்த தந்த தானத்த
தனதன தத்த தந்த தானத்த
தனதன தத்த தந்த தானத்த ...... தனதான
நரையொடு  பற்க  ழன்று  தோல்வற்றி 
நடையற  மெத்த  நொந்து  காலெய்த்து 
நயனமி  ருட்டி  நின்று  கோலுற்று  ......  நடைதோயா 
நழுவும்வி  டக்கை  யொன்று  போல்வைத்து 
நமதென  மெத்த  வந்த  வாழ்வுற்று 
நடலைப  டுத்து  மிந்த  மாயத்தை  ......  நகையாதே 
விரையொடு  பற்றி  வண்டு  பாடுற்ற 
ம்ருகமத  மப்பி  வந்த  வோதிக்கு 
மிளிருமை  யைச்செ  றிந்த  வேல்கட்கும்  ......  வினையோடு 
மிகுகவி  னிட்டு  நின்ற  மாதர்க்கு 
மிடைபடு  சித்த  மொன்று  வேனுற்றுன் 
விழுமிய  பொற்ப  தங்கள்  பாடற்கு  ......  வினவாதோ 
உரையொடு  சொற்றெ  ரிந்த  மூவர்க்கு 
மொளிபெற  நற்ப  தங்கள்  போதித்து 
மொருபுடை  பச்சை  நங்கை  யோடுற்று  ......  முலகூடே 
உறுபலி  பிச்சை  கொண்டு  போயுற்று 
முவரிவி  டத்தை  யுண்டு  சாதித்து 
முலவிய  முப்பு  ரங்கள்  வேவித்து  ......  முறநாகம் 
அரையொடு  கட்டி  யந்த  மாய்வைத்து 
மவிர்சடை  வைத்த  கங்கை  யோடொக்க 
அழகுதி  ருத்தி  யிந்து  மேல்வைத்து  ......  மரவோடே 
அறுகொடு  நொச்சி  தும்பை  மேல்வைத்த 
அரியய  னித்தம்  வந்து  பூசிக்கும் 
அரநிம  லர்க்கு  நன்றி  போதித்த  ......  பெருமாளே. 
  • நரை ஒடு பல் கழன்று தோல் வற்றி
    மயிர் நரைக்கவும், பற்கள் கழன்று விழவும், தோல் வற்றிப் போகவும்,
  • நடை அற மெத்த நொந்து கால் எய்த்து
    நடை அற்றுப் போகவும், மிகவும் நோவுற்று கால்கள் இளைத்துப் போகவும்,
  • நயனம் இருட்டி நின்று கோல் உற்று நடை தோயா
    கண்கள் இருளடைந்து பார்வையை இழந்து நின்று, தடியை ஊன்று கோலாகக் கொண்டு நடை பயின்று,
  • நழுவும் விடக்கை ஒன்று போல் வைத்து
    நழுவி மறைந்து (இறந்து) போகும் இந்த மாமிச உடலை நிலைத்து நிற்கும் ஒரு பொருள் போல் நினைத்து,
  • நமது என மெத்த வந்த வாழ்வு உற்று
    நம்முடையது என்று உடைமைகளைப் பாராட்டி, அப்படிச் சேகரித்து வந்த நல்வாழ்வை அடைந்து,
  • நடலை படுத்தும் இந்த மாயத்தை நகையாதே
    (முடிவில்) துன்பப் படுத்தும் இந்த மாய வாழ்க்கையை நான் சிரித்து விலக்காமல்,
  • விரையொடு பற்றி வண்டு பாடு உற்ற
    நறு மணத்தை நுகர்ந்து வண்டுகள் பாட
  • ம்ருகமதம் அப்பி வந்த ஓதிக்கு
    கஸ்தூரியைத் தடவித் தோய்ந்துள்ள கூந்தலுக்கும்,
  • மிளிரும் மையைச் செறிந்த வேல்கட்கும்
    விளங்கும் மை தீட்டிய வேல் போன்ற கண்களுக்கும்,
  • வினையோடு மிகு கவின் இட்டு நின்ற மாதர்க்கும்
    தந்திர எண்ணத்துடன் மிக்க அழகைச் செய்துகொண்டு அலங்காரத்துடன் நின்ற விலைமாதர்களுக்கும்
  • இடைபடு சித்தம் ஒன்றுவேன்
    மத்தியில் அவதிப்படுகின்ற மனமோகம் உடையவனாகிய நான்
  • உற்று உன் விழுமிய பொன் பதங்கள் பாடற்கு வினவாதோ
    அன்பு உற்று உனது சிறந்த அழகிய திருவடியைப் பாடிப் புகழ்தற்கு ஆராய்ந்து மேற் கொள்ளமாட்டேனோ?
  • உரையொடு சொல் தெரிந்த மூவர்க்கும்
    பொருளோடு, சொல்லும் தெரிந்த (அதாவது, சிவம், சக்தி இவைகளின் உண்மை தெரிந்த) சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்னும் சைவக்குரவர் மூவர்க்கும்
  • ஒளி பெற நல் பதங்கள் போதித்தும்
    அவர்கள் புகழ் ஒளி பெறுவதற்கு, சிறந்த எழுத்துக்களான (நமசிவாய என்ற) ஐந்தெழுத்தை உபதேசம் செய்தும்,
  • ஒரு புடை பச்சை நங்கையோடு உற்றும்
    தமது ஒரு பக்கத்தில் பச்சை நிறப் பெருமாட்டியாகிய பார்வதியோடு அமைந்தும்,
  • உலகூடே உறு பலி பிச்சை கொண்டு போய் உற்றும்
    உலகம் முழுவதும் கிடைக்கும் பிச்சையை ஏற்றுக் கொண்டும்,
  • உவரி விடத்தை உண்டு சாதித்தும்
    பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தை உண்டு தமது பரத்தையும் அழியாமையையும் நிலை நிறுத்திக் காட்டியும்,
  • உலவிய முப்புரங்கள் வேவித்தும்
    பறந்து உலவிச் செல்லவல்ல திரிபுரங்களையும் எரித்துச் சாம்பலாக்கியும்,
  • உற நாகம் அரையொடு கட்டி அந்தமாய் வைத்தும்
    பொருந்தும்படி விஷப்பாம்பை இடுப்பில் கட்டி அழகாக அமைத்தும்,
  • அவிர் சடை வைத்த கங்கையோடு ஒக்க
    விளங்கும் சடையில் தரித்துள்ள கங்கையுடன் ஒத்திருக்க,
  • அழகு திருத்தி இந்து மேல்வைத்தும்
    அழகாகச் சிங்காரித்து பிறைச் சந்திரனை மேலே வைத்தும்,
  • அரவோடே அறுகொடு நொச்சி தும்பை மேல் வைத்த
    பாம்புடன் அறுகம் புல்லோடு நொச்சியையும், தும்பையையும் மேலே சூடியுள்ளவரும்,
  • அரி அயன் நித்தம் வந்து பூசிக்கும்
    திருமாலும், பிரமனும் நாள்தோறும் வந்து பூஜை செய்யும்
  • அர நிமலர்க்கு நன்று போதித்த பெருமாளே.
    சிவபெருமான் ஆகிய நிர்மல மூர்த்திக்கு நல்ல உபதேசப் பொருளைப் போதித்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com