திருப்புகழ் 1160 சேலை அடர்த்து ஆலம் (பொதுப்பாடல்கள்)

தானதனத் தானதனத் தானதனத் தானதனத்
தானதனத் தானதனத் ...... தனதான
சேலையடர்த்  தாலமிகுத்  தேயுழையைச்  சீறுவிதித் 
தூறுசிவப்  பேறுவிழிக்  ......  கணையாலே 
தேனிரதத்  தேமுழுகிப்  பாகுநிகர்த்  தாரமுதத் 
தேறலெனக்  கூறுமொழிச்  ......  செயலாலே 
ஆலிலையைப்  போலும்வயிற்  றாலளகத்  தாலதரத் 
தாலுமிதத்  தாலும்வளைப்  ......  பிடுவோர்மேல் 
ஆசையினைத்  தூரவிடுத்  தேபுகழ்வுற்  றேப்ரியநற் 
றாளிணையைச்  சேரஎனக்  ......  கருள்வாயே 
காலனைமெய்ப்  பாதமெடுத்  தேயுதையிட்  டேமதனைக் 
காயஎரித்  தேவிதியிற்  ......  றலையூடே 
காசினியிற்  காணஇரப்  போர்மதியைச்  சூடியெருத் 
தேறிவகித்  தூருதிரைக்  ......  கடல்மீதில் 
ஆலமிடற்  றானையுரித்  தோலையுடுத்  தீமமதுற் 
றாடியிடத்  தேயுமைபெற்  ......  றருள்வாழ்வே 
ஆழியினைச்  சூரனைவெற்  பேழினையுற்  றேயயில்விட் 
டாதுலருக்  காறுமுகப்  ......  பெருமாளே. 
  • சேலை அடர்த்து ஆலம் மிகுத்தே உழையைச் சீறு விதித்து
    சேல் மீனை வெட்கப்படச் செய்து, விஷம் மிகக் கொண்டதாய், மானைக் கோபித்து அவமானப்படுத்தி,
  • ஊறு சிவப்பு ஏறு விழிக் கணையாலே
    செந்நிறம் ஊறி மேற்காட்டும் கண் என்னும் அம்பு கொண்டும்,
  • தேன் இரதத்தே முழுகிப் பாகு நிகர்த்து ஆர் அமுதத் தேறல் எனக் கூறும் மொழிச் செயலாலே
    தேன் சுவையில் தோய்ந்து, வெல்லப் பாகுக்கு ஒப்பாகி, நிறையமுத பானம் என்று சொல்லத் தக்கதான மொழிகளின் திறத்தாலும்,
  • ஆல் இலையைப் போலும் வயிற்றால் அளகத்தால் அதரத்தாலும் இதத்தாலும் வளைப்பிடுவோர் மேல்
    ஆலிலை போன்ற வயிற்றாலும், கூந்தலாலும், வாயிதழாலும் இன்பம் தந்து (ஆண்களின் மனத்தை) வளைத்து இழுப்பவர்களான விலைமாதர் மீதுள்ள
  • ஆசையினைத் தூர விடுத்தே புகழ்வுற்றே ப்ரிய நல் தாள் இணையைச் சேர எனக்கு அருள்வாயே
    காமப் பற்றைத் தூர எறிந்து, புகழ் பெற்று அன்புக்கு இடமான (உனது) நல்ல திருவடியிணைகளைச் சேருவதற்கு எனக்கு அருள் செய்வாயாக.
  • காலனை மெய்ப் பாதம் எடுத்தே உதையிட்டே மதனைக் காய எரித்தே
    யமனை உண்மைக்கு இருப்பிடமான தனது திருவடியைத் தூக்கி உதைத்தும், மன்மதனைச் சுட்டு எரித்தும்,
  • விதியின் தலை ஊடே காசினியில் காண இரப்பு ஓர் மதியைச் சூடி
    பிரமனுடைய கபாலம் கொண்டு பூமியில் உள்ளோர் காணும்படி யாசித்தும், ஒப்பற்ற நிலவைச் சடையில் தரித்தும்,
  • எருத்து ஏறி வகித்து ஊரு திரைக் கடல் மீதில் ஆலம் மிடற்று ஆனை உரித்துத் தோலை உடுத்து
    ரிஷபத்தில் ஏறி அமர்ந்தும், அசைந்து வரும் அலை வீசும் கடல் மீது எழுந்த ஆலகால விஷத்தைக் கண்டத்தில் தரித்தும், (எதிர்த்து வந்த) யானையைக் கொன்று அதன் தோலை உரித்து உடுத்தும்,
  • ஈமம் அது உற்று ஆடி இடத்தே உமை பெற்று அருள் வாழ்வே
    சுடு காட்டை அடைந்து அங்கே நடனம் புரிபவருமான சிவபெருமானது இடப் பாகத்தில் உறையும் உமா தேவி பெற்றருளிய செல்வமே,
  • ஆழியினைச் சூரனை வெற்பு ஏழினை உற்றே அயில் விட்ட ஆதுலருக்கு ஆறு முகப் பெருமாளே.
    கடலையும், சூரனையும், ஏழு மலைகளையும், இவைகளின் மீது பட்டு அவை அழிந்து போகும்படி வேலாயுதத்தைச் செலுத்திய, ஏழைகளுக்கு உகந்த, ஆறுமுகப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com