திருப்புகழ் · 1159செம் கனல் புகை (பொதுப்பாடல்கள்)

தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன
தந்த தத்தன தானாதன ...... தனதான

தினம் ஒரு திருப்புகழ் Dinam oru Thiruppugazh

செங்க னற்புகை யோமாதிகள் குண்ட மிட்டெழு சோமாசிகள்
தெண்டெ னத்துணை தாள்மேல்விழ ...... அமராடிச்
சிந்த னைப்படி மோகாதியி லிந்த்ரி யத்தினி லோடாசில
திண்டி றற்றவ வாள்வீரரொ ...... டிகலாநின்
றங்கம் வெட்டிய கூர்வாள்விழி மங்கை யர்க்கற மாலாய்மன
மந்தி பட்டிருள் மூடாவகை ...... யவிரோத
அந்த நிற்குண ஞானோதய சுந்த ரச்சுட ராராயந
லன்பு வைத்தரு ளாமோர்கழ ...... லருளாதோ
கொங்க டுத்தகு ராமாலிகை தண்க டுக்கைது ழாய்தாதகி
கும்பி டத்தகு பாகீரதி ...... மதிமீது
கொண்ட சித்ரக லாசூடிகை யிண்டெ ருக்கணி காகோதர
குண்ட லத்தர்பி னாகாயுத ...... ருடனேயச்
சங்கு சக்ரக தாபாணியு மெங்க ளுக்கொரு வாழ்வேசுரர்
தங்க ளைச்சிறை மீளாயென ...... அசுரேசன்
தஞ்ச மற்றிட வேதாகர னஞ்ச வெற்புக வீராகர
சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே.

பத உரை

  • செம் கனல் புகை ஓமாதிகள் குண்டம் இட்டு எழு சோமாசிகள்
    சிவந்த தீயில் புகை எழும்படியாக ஓம குண்டங்கள் அமைத்து யாகங்களைச் செய்த சோமயாஜிகளும்* கூட
  • தெண்டு எனத் துணை தாள் மேல் விழ அமர் ஆடி
    சரணாகதி என்று (தங்கள்) இரு திருவடிகளில் விழும்படி போர் செய்ய வல்லதும்,
  • சிந்தனைப் படி மோகாதியில் இந்த்ரியத்தினில் ஓடா
    மனதில் அழுந்திய மோகம், மதம், மாற்சரியம், இடும்பு, அசூயை, காமம், குரோதம், உலோபம் எனப்படும் எட்டு வகைப்பட்ட துர்க்குணங்களும் பொறிகளின் சபலங்களும் தாக்கித் தம்மை ஆட்டாத
  • சில திண் திறல் தவ வாள் வீரரொடு இகலா நின்று
    சில வலிய வன்மையை உடைய தவ ஒளியைக் கொண்ட வீரர்களுடன் மாறுபட்டு அவர்களை வென்று நின்று (அவர்களுடைய)
  • அங்கம் வெட்டிய கூர் வாள் விழி மங்கையர்க்கு அற மாலாய்
    உடலை வெட்டும்படியான கூரிய கண்களை உடைய (விலை) மாதர் மீது முற்றும் காம மயக்கம் கொண்டவனாய்,
  • மனம் அந்தி பட்டு இருள் மூடா வகை அவிரோத அந்த நிற் குண ஞான உதய சுந்தரச் சுடர் ஆராய
    மனம் அழிந்து போய் அஞ்ஞானம் என்ற இருள் வந்து மூடாத வகையில், பகையின்மை எனப்படும் அந்தக் குணம் கடந்த ஞானோதய அழகு ஒளியை நான் ஆராய்வதற்கு,
  • நல் அன்பு வைத்து அருள் ஆம் ஓர் கழல் அருளாதோ
    நல்ல அன்பை என் மீது வைத்து திருவருளுக்கு இடமான ஒப்பற்ற உனது திருவடியை எனக்கு தந்தருளக் கூடாதோ?
  • கொங்கு அடுத்த குரா மாலிகை தண் கடுக்கை துழாய் தாதகி
    வாசனை கொண்ட குரா மலர் மாலை, குளிர்ந்த கொன்றை, துளசி, ஆத்தி
  • கும்பிடத் தகு பாகீரதி மதி மீது கொண்ட சித்ர கலா சூடிகை இண்டு எருக்கு அணி
    வணங்கத் தகுந்த கங்கைநதி, சந்திரனிடத்தே கொண்டுள்ள அழகிய கலை, (இவைகள் விளங்கும்) ஜடாமுடியில் ஈகைக் கொடிப்பூ, எருக்க மலர் அணிந்துள்ளவர்,
  • காகோதரம் குண்டல அத்தர் பினாக ஆயுதருடனே
    பாம்பைக் குண்டலமாக அணிந்தவர், பினாகம் என்னும் வில்லை ஆயுதமாக ஏந்தியவர் (ஆகிய சிவபெருமானும்),
  • ஏயச் சங்கு சக்ர கதா பாணியும் எங்களுக்கு ஒரு வாழ்வே சுரர் தங்களைச் சிறை மீளாய் என
    நன்கு பொருந்திய சங்கு, சக்கரம், கதை இவைகளைக் கையில் ஏந்திய திருமாலும், எங்களுடைய செல்வமே, தேவர்களைச் சிறையினின்றும் மீட்டருள்க என்று வேண்ட
  • அசுரேசன் தஞ்சம் அற்றிட வேதாகரன் அஞ்ச வெற்பு உக
    அசுரர்கள் தலைவனான சூரன் பற்றுக் கோடின்றி வேதனைப்பட, வேதத்துக்கு இருப்பிடமான பிரமன் பயந்து நிற்க, கிரெளஞ்ச மலை பிளப்புண்டு சிதறி விழ,
  • வீர ஆகர சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே.
    வீரத்துக்கு இருப்பிடமாய் வேகமும் வலிமையும் கொண்ட வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * சோம யாகம் = தேவர்கள் பொருட்டுச் சோமரசம் அளிக்கும் வேள்வி வகை. இதைச் செய்தவர்கள் சோமயாஜிகள். சோமயாஜிகளும், தவ வீரர்களும் கூடப் பெண்களால் மதி மயங்குவர் என்பது கருத்து.
  • * sOma yAkam is the sacrifice performed with nectar of the moon to appease the celestials. Those who perform this sacrifice are called sOmayAjees. The idea here is that even the sOmayAjees and other warriors who are credited with several sacrifices are vulnerable to the passion for women.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout