திருப்புகழ் 1158 சுற்றத்தவர்களும் (பொதுப்பாடல்கள்)

தத்தத் தனதன தத்தன தனதன
தத்தத் தனதன தத்தன தனதன
தத்தத் தனதன தத்தன தனதன ...... தனதானத்
சுற்றத்  தவர்களு  மக்களு  மிதமுள 
சொற்குற்  றரிவையும்  விட்டது  சலமிது 
சுத்தச்  சலமினி  சற்றிது  கிடைபடு  ......  மெனமாழ்கித் 
துக்கத்  தொடுகொடி  தொட்டியெ  யழுதழல் 
சுட்டக்  குடமொடு  சுட்டெரி  கனலொடு 
தொக்குத்  தொகுதொகு  தொக்கென  இடுபறை  ......  பிணமூடச் 
சற்றொப்  புளதொரு  சச்சையு  மெழுமுடல் 
சட்டப்  படவுயிர்  சற்றுடன்  விசியது 
தப்பிற்  றவறுறு  மத்திப  நடையென  ......  உரையாடிச் 
சத்திப்  பொடுகரம்  வைத்திடர்  தலைமிசை 
தப்பிற்  றிதுபிழை  யெப்படி  யெனுமொழி 
தத்தச்  சடம்விடு  மப்பொழு  திருசர  ......  ணருள்வாயே 
சிற்றிற்  கிரிமகள்  கொத்தலர்  புரிகுழல் 
சித்ரப்  ப்ரபைபுனை  பொற்பின  ளிளமயில் 
செற்கட்  சிவகதி  யுத்தமி  களிதர  ......  முதுபேய்கள் 
திக்குச்  செககெண  தித்தரி  திகுதிகு 
செச்செச்  செணக்ருத  டொட்டரி  செணக்ருத 
டெட்டெட்  டுடுடுடு  தத்தரி  தரியென  ......  நடமாடுங் 
கொற்றப்  புலியதள்  சுற்றிய  அரனருள் 
குட்டிக்  கரிமுக  னிக்கவ  லமுதுசெய் 
கொச்சைக்  கணபதி  முக்கண  னிளையவ  ......  களமீதே 
குப்புற்  றுடனெழு  சச்சரி  முழவியல் 
கொட்டச்  சுரர்பதி  மெய்த்திட  நிசிசரர் 
கொத்துக்  கிளையுடல்  பட்டுக  அமர்செய்த  ......  பெருமாளே. 
  • சுற்றத்தவர்களும் மக்களும் இதம் உள சொற்கு உற்ற அரிவையும்
    உறவினர்களும், மக்களும், இன்பம் தருவதான சொல்லுக்கு உரிய மனைவியும்,
  • விட்டது சலம் இது சுத்தச் சலம் இனி சற்று இது கிடைபடும் என மாழ்கி
    (நோயாளியின் அருகில் ஈரம் இருக்கக் கண்டு) அது நோயாளி விட்ட சிறுநீர், இது நல்ல நீர் (என்றெல்லாம் பேசி), கொஞ்ச நேரத்தில் இந்நோய் படுக்க வைக்கும் என்று மயங்கி மனம் வருந்தி,
  • துக்கத்தொடு கொடிது ஒட்டியெ அழுது
    துயரத்துடனும், கஷ்டத்துடனும் அணுகியிருந்து அழுது,
  • அழல் சுட்ட குடமொடு சுட்டு எரி கனலொடு தொக்குத் தொகு தொகு தொக் என இடு பறை
    தீயால் சுட்டெரிக்க, நெருப்புச் சட்டியில் சுடுதற்கு வேண்டிய தீயுடன் (செல்ல) தொக்குத் தொகு தொகு தொக்கு என்று அடிபடும் பறை தொடங்கி ஒலி செய்ய,
  • பிணம் மூட சற்று ஒப்புளது ஒரு சச்சையும் எழும்
    பிணத்தை துணியால் மூடுவதற்கு கொஞ்சம் ஏற்புடையதான நேரம் எது என்ற ஆராய்ச்சிப் பேச்சும் பிறக்கும்.
  • உடல் சட்டப்பட உயிர் சற்று உடன் விசியது தப்பில் தவறு உறும் மத்திப நடை என உரையாடி
    உடல் நன்றாகக் கெட்டுப் போக, உயிர் கொஞ்ச நேரத்துக்குள் (உயிருக்கும் உடலுக்கும் உள்ள) கட்டு தவறிப் போனால் பிழை உண்டாகும், இப்போது நாடி மட்டமான நிலையில் உள்ளது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்க,
  • சத்திப்பொடு கரம் வைத்து இடர் தலை மிசை தப்பிற்று இது பிழை எப்படி எனும் மொழி தத்த
    கூச்சலிட்டு வருத்தத்துடன் தலையின் மேல் கையை வைத்து, (நாடி) தவறுகின்றது, இச்சமயம் இவ்வுயிர் பிழைத்தல் எப்படி முடியும் என்கின்ற பேச்சு பரவ,
  • சடம் விடும் அப்பொழுது இரு சரண் அருள்வாயே
    உடலை உயிர் விடும் போது, உனது இரண்டு திருவடிகளையும் தந்து அருளுக.
  • சிற்று இல் கிரி மகள் கொத்து அலர் புரி குழல் சித்ரப் ப்ரபை புனை பொற்பினள் இள மயில் செல் கண் சிவ கதி உத்தமி களி தர
    சிறு வீடு கட்டி விளையாடும் மலை (இமவான்) மகள், கொத்தான மலர்கள் வைத்துள்ள சுருண்ட கூந்தலை உடையவள், விசித்திரமான ஒளி வாய்ந்த அழகை உடையவள், இள மயில் போன்றவள், மழை போலும் குளிர்ந்த கண்ணை உடையவள், முக்தியைத் தரும் உத்தமி ஆகிய பார்வதி கண்டு களிக்க,
  • முது பேய்கள் திக்குச் செககெண தித்தரி திகுதிகு செச்செச் செணக்ருத டொட்டரி செணக்ருத டெட்டெட் டுடுடுடு தத்தரி தரியென நடமாடும்
    பழமையான பேய்க் கூட்டங்கள் 'திக்குச் செககெண தித்தரி திகுதிகு செச்செச் செணக்ருத டொட்டரி செணக்ருத டெட்டெட் டுடுடுடு தத்தரி தரி' என சூழ்ந்து நடனமாட,
  • கொற்றப் புலி அதள் சுற்றிய அரன் அருள்
    வீரமுள்ள புலியின் தோலை ஆடையாகச் சுற்றியுள்ள சிவபிரான் அருளிய
  • குட்டிக் கரி முகன் இக்கு அவல் அமுது செய் கொச்சைக் கணபதி முக்க(ண்)ணன் இளையவ
    குழந்தை யானை முகன், கரும்பு அவல் இவைகளை உண்ணும் எளிய தோற்றத்தை உடைய கணபதி, மூன்று கண்களை உடையவன் (ஆகிய விநாயகனுக்கு) தம்பியே,
  • கள(ம்) மீதே குப்புற்றுடன் எழு சச்சரி முழவு இயல் கொட்டச் சுரர் பதி மெய்த்திட
    போர்க் களத்தில் மேற்கிளம்பி ஒலிக்கும் வாத்திய வகை, முரசு முதலியவை தகுதியுடன் முழங்க, தேவர்கள் அரசனான இந்திரன் நிலை பெற்று உண்மையாய் வாழ,
  • நிசிசரர் கொத்துக் கிளை உடல் பட்டு உக அமர் செய்த பெருமாளே.
    அசுரர்கள் கூட்டமும் சுற்றமும் உடல் அழிபட்டுச் சிதற, சண்டை செய்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com