திருப்புகழ் 1157 சுருதி வெகுமுக (பொதுப்பாடல்கள்)

தனன தனதனன தான தானன
தனதனன தான தானன
தனன தனதனன தான தானன தந்ததான
சுருதி  வெகுமுகபு  ராண  கோடிகள் 
சரியை  கிரியைமக  யோக  மோகிகள் 
துரித  பரசமய  பேத  வாதிகள்  ......  என்றுமோடித் 
தொடர  வுணரஅரி  தாய  தூரிய 
பொருளை  யணுகியநு  போக  மானவை 
தொலைய  இனியவொரு  ஸ்வாமி  யாகிய  ......  நின்ப்ரகாசங் 
கருதி  யுருகியவி  ரோதி  யாயருள் 
பெருகு  பரமசுக  மாம  கோததி 
கருணை  யடியரொடு  கூடியாடிம  ......  கிழ்ந்துநீபக் 
கனக  மணிவயிர  நூபு  ராரிய 
கிரண  சரண  அபி  ராம  கோமள 
கமல  யுகளமற  வாது  பாடநி  ......  னைந்திடாதோ 
மருது  நெறுநெறென  மோதி  வேரோடு 
கருது  மலகைமுலை  கோதி  வீதியில் 
மதுகை  யொடுதறுக  ணானை  வீரிட  ......  வென்றுதாளால் 
வலிய  சகடிடறி  மாய  மாய்மடி 
படிய  நடைபழகி  யாயர்  பாடியில் 
வளரு  முகில்மருக  வேல்வி  நோதசி  ......  கண்டிவீரா 
விருதர்  நிருதர்குல  சேனை  சாடிய 
விஜய  கடதடக  போல  வாரண 
விபுதை  புளகதன  பார  பூஷண  ......  அங்கிராத 
விமலை  நகிலருண  வாகு  பூதர 
விபுத  கடககிரி  மேரு  பூதர 
விகட  சமரசத  கோடி  வானவர்  ......  தம்பிரானே. 
  • சுருதி வெகுமுக புராண கோடிகள்
    வேதமும், பலவிதமான கோடிக் கணக்கான புராணங்களும்,
  • சரியை கிரியை மக யோக மோகிகள்
    சரியை மார்க்கத்தில்* இருந்து கோவில்களுக்குத் தொண்டு செய்பவர்களும், கிரியை மார்க்கத்தில் நடந்து நியமமாய் மலர் தூவித் தொழுபவர்களும், மகாயோக மார்க்கத்தில் ஆசை பூண்டு யோக நிஷ்டையில் இருப்பவர்களும்,
  • துரித பர சமய பேத வாதிகள் என்றும் ஓடி
    கலக்கத்தைத் தரும் பர சமய பேதங்களை மேற்கொண்டு வாதிப்பவர்களும் என்றெல்லாம் ஓடி ஓடி ஆராய்ந்து,
  • தொடர உணர அரிதாய தூரிய பொருளை அணுகி
    தொடர்ந்து பற்றுதற்கும், உணர்ந்து கொள்ளுவதற்கும் அரியதானதான சுத்த நிலைப் பரம் பொருளை அண்டி நெருங்கி,
  • அநுபோகமானவை தொலைய இனிய ஒரு ஸ்வாமியாகிய நின் ப்ரகாசம் கருதி உருகி
    என் உலக அனுபவங்களும் ஆசைகளும் தொலைந்து ஒழிய, இன்பம் தரும் ஒரு ஸ்வாமியாகிய உன்னுடைய பேரொளியை தியானித்து மனம் உருகி,
  • அவிரோதியாய் அருள் பெருகு பரம சுக மா மகா உததி
    எல்லா உயிரும் எனதுயிரின் பகுதிகளே என்னும் பேதமற்ற மனம் உடையவனாக, அருள் நிறைந்த மேலான இன்பப் பெரிய கடலில்
  • கருணை அடியரொடு கூடி ஆடி மகிழ்ந்து
    கருணைமிக்க உன் அடியார்களுடன் கூடி மகிழ்ந்து,
  • நீபக் கனக மணி வயிர நூபுர
    கடப்ப மலரும், பொன், இரத்தினம், வைரம் இவை விளங்கும் சிலம்பு அணிந்ததும்,
  • ஆரிய கிரண சரண அபிராம கோமள கமல உகளம் மறவாது பாட நினைந்திடாதோ
    மேலான ஒளி வீசுவதும், அடைக்கலம் தருவதும், அழகிய இளமை விளங்குவதுமான திருவடித் தாமரைகளை (நான்) மறக்காமல் பாட உனது திருவுள்ளம் நினைவு கொள்ளாதோ?
  • மருது நெறு நெறு என மோதி வேரோடு
    மருத மரங்களை நெறுநெறு என்று ஒலிக்குமாறு வேருடன் முறியும்படி (இடுப்பில் கட்டிய உரலோடு) மோதியும்,
  • கருதும் அலகை முலை கோதி
    (தன்னை விஷப்பாலை ஊட்டுவித்துக் கொல்லும்) எண்ணத்துடன் வந்த அலகைப் பேய் பூதனையின் கொங்கையைக் குடைந்து தோண்டி அவள் உயிரைப் பருகியும்,
  • வீதியில் மதுகையொடு தறுகண் ஆனை வீரிட வென்று
    தெருவில் வலிமையுடன் வஞ்சகமாகக் கொல்ல வந்த (குவலயா பீடம் என்னும்) யானை அலறிக் கூச்சலிட அதை வென்றும்,
  • தாளால் வலிய சகடு இடறி மாயமாய் மடி படிய நடை பழகி
    பாதத்தால் வலிமை வாய்ந்த வண்டிச் சக்கரத்தை (சகடாசுரனை) எற்றி உதைத்து, தந்திரமாய் அவன் இறக்கும்படிச் செய்தும், மீண்டும் சாதாரணக் குழந்தை போலத் தவழ்ந்தும், நடந்தும்,
  • ஆயர் பாடியில் வளரும் முகில் மருக வேல் விநோத சிகண்டி வீரா
    இடைச் சேரியில் வளர்ந்த மேக வண்ணனாகிய திருமாலின் மருகனே, வேலாயுதத்தை ஏந்தும் அற்புத மூர்த்தியே, மயில் வீரனே,
  • விருதர் நிருதர் குல சேனை சாடிய விஜய
    வீரர்களாகிய அசுரர்களின் குலச் சேனைகளைத் துகைத்தழித்த வெற்றியாளனே,
  • கட தட கபோல வாரண விபுதை புளக தன பார பூஷண
    விசாலமான தாடையை உடைய யானை (ஐராவதம்) வளர்த்த தேவயானையின் புளகம் கொண்ட மார்பகங்களை உன் மார்பில் அணிகளாகத் தரித்துள்ளவனே,
  • அம் கிராத விமலை நகில் அருண வாகு பூதர
    அழகிய, வேடர் குலத்துத் தூயவளான வள்ளியின் மார்பினை அணைத்துக் கொள்ளும் சிவந்த தோள் மலையை உடையவனே,
  • விபுத கடக கிரி மேரு பூதர விகட சமர
    தேவர்கள் சேனைக்கு நாயகனே, மலைகளுள் மேருமலையுடன் மாறுபட்டு போர் செய்தவனே,
  • சத கோடி வானவர் தம்பிரானே.
    நூறு கோடி தேவர்களுக்குத் தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com