தந்தனந் தனந்த தந்த, தந்தனந் தனந்த தந்த
தந்தனந் தனந்த தந்த ...... தனதான
சந்தனங் கலந்த குங்கு மம்புனைந் தணிந்த கொங்கை
சந்திரந் ததும்ப சைந்து ...... தெருவூடே
சங்கினங் குலுங்க செங்கை யெங்கிலும் பணிந்து டம்பு
சந்தனந் துவண்ட சைந்து ...... வருமாபோல்
கொந்தளங் குலுங்க வண்சி லம்புபொங் கஇன்சு கங்கள்
கொஞ்சிபொன் தொடர்ந்தி டும்பொன் ...... மடவார்தோள்
கொங்கைபைங் கரம்பு ணர்ந்த ழிந்துணங் கலுந்த விர்ந்து
கொஞ்சுநின் சரண்க ளண்ட ...... அருள்தாராய்
தந்தனந் தசெஞ்சி லம்பு கிண்கிணின் குலங்கள் கொஞ்ச
தண்டையம் பதம்பு லம்ப ...... வருவோனே
சந்தனம் புனைந்த கொங்கை கண்களுஞ் சிவந்து பொங்க
சண்பகம் புனங்கு றம்பொன் ...... அணைமார்பா
வந்தநஞ் சுகந்த மைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி
மந்தரம் பொதிந்த கொங்கை ...... யுமையீனும்
மைந்தனென் றுகந்து விஞ்சு மன்பணிந் தசிந்தை யன்பர்
மங்கலின் றுளம்பு குந்த ...... பெருமாளே.
- சந்தனம் கலந்த குங்குமம் புனைந்து அணிந்த கொங்கை
சந்திரம் ததும்ப அசைந்து
சந்தனத்தையும் அதனுடன் கலந்த குங்குமத்தையும் பூசி அணிந்துள்ள மார்பகம் பொன் ஆபரணங்களின் ஒளி மிகுந்து வீச அசைந்து, - தெருவூடே சங்கு இனம் குலுங்க செம் கை எங்கிலும் பணிந்து
உடம்பு சந்து அ(ன்)னம் துவண்டு அசைந்து வருமா போல்
தெருவிலே, சங்கினால் செய்த கை வளைகளின் கூட்டம் ஒலி செய்யும் சிவந்த கரங்களுடன், பணிவு காட்டும் உடல் தூதுக்கு* அமைந்த அன்னப் பட்சி துவட்சியுற்று அசைந்து வருவது போல் நடந்து வந்து, - கொந்தளம் குலுங்க வண் சிலம்பு பொங்க இன் சுகங்கள்
கொஞ்சி பொன் தொடர்ந்திடும் பொன் மடவார்
கூந்தலின் முடி அசைய, (காலில்) நல்ல சிலம்பின் ஒலி நிறைந்து எழ, இனிமையான சுகத்தைத் தரும் பேச்சுக்களைக் கொஞ்சிப் பேசி, (வாடிக்கையாளரிடம்) பொற்காசு பெறுவதற்கு வேண்டிய வழிகளைப் பின் பற்றி முயலுகின்ற அழகிய விலைமாதர்களின் - தோள் கொங்கை பைங்கரம் புணர்ந்து அழிந்து உணங்கலும்
தவிர்ந்து கொஞ்சு நின் சரண்கள் அண்ட அருள்தாராய்
தோள்களையும், மார்பையும், அழகிய கைகளையும் தழுவி உடல் நலம் அழிவதும், சிந்தை வாடி மெலிவதும் நீங்கி ஒழிந்து, கொஞ்சும் உனது திருவடிகளை நெருங்க அருள் புரிவாயாக. - தந்தனந்த செம் சிலம்பு கிண்கிணின் குலங்கள் கொஞ்ச
தண்டை அம் பதம் புலம்ப வருவோனே
தந்தனந்த என்ற ஒலியுடன் செவ்விய சிலம்பும், கிண்கிணியின் கூட்டங்களும் கொஞ்சி ஒலிக்க, தண்டைகள் அழகிய திருவடியில் ஒலிக்க வருபவனே, - சந்தனம் புனைந்த கொங்கை கண்களும் சிவந்து பொங்க
சண்பகம் புனம் குறம் பொன் அணை மார்பா
சந்தனம் அணிந்துள்ள மார்பகங்களும் கண்களும் சிவந்து பொங்க, சண்பக மரங்கள் உள்ள மலைக் கொல்லையில் இருந்த அழகிய குறப் பெண்ணாகிய வள்ளியைத் தழுவும் மார்பை உடையவனே, - வந்த நஞ்சு உகந்து அமைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி
மந்தரம் பொதிந்த கொங்கை உமை ஈனும்
(பாற்கடலில் தோன்றி) வந்த ஆலகால விஷத்தை மகிழ்ச்சியுடன் தங்க வைத்த கழுத்தை உடைய சிவபெருமான் கலந்த வஞ்சிக் கொடி போன்றவளும் மந்தர மலை போல நிறைந்த மார்பை உடையவளும் ஆகிய உமாதேவி பெற்ற - மைந்தன் என்று உகந்து விஞ்சு மன் பணிந்த சிந்தை அன்பர்
மைந்தன் என்று மகிழ்ச்சியுடன் மேலான வகையில் நன்றாகத் தொழுகின்ற உள்ளத்தைக் கொண்டுள்ள அடியார்களின் - மங்கலின்று உ(ள்)ளம் புகுந்த பெருமாளே.
ஒளி மழுங்குதல் இல்லாமல் விளக்கமாகப் புகுந்து விளங்கும் பெருமாளே.