தானனா தனன தத்த, தானனா தனன தத்த
தானனா தனன தத்த ...... தனதான
கோழையா ணவமி குத்த வீரமே புகல்வர் அற்பர்
கோதுசே ரிழிகு லத்தர் ...... குலமேன்மை
கூறியே நடுவி ருப்பர் சோறிடார் தரும புத்ர
கோவுநா னெனஇ சைப்பர் ...... மிடியூடே
ஆழுவார் நிதியு டைக்கு பேரனா மெனஇ சைப்பர்
ஆசுசேர் கலியு கத்தி ...... னெறியீதே
ஆயுநூ லறிவு கெட்ட நானும்வே றலஅ தற்கு
ளாகையா லவைய டக்க ...... வுரையீதே
ஏழைவா னவர ழைக்க ஆனைவா சவனு ருத்ர
ஈசன்மேல் வெயிலெ றிக்க ...... மதிவேணி
ஈசனார் தமதி டுக்க மாறியே கயிலை வெற்பில்
ஏறியே யினிதி ருக்க ...... வருவோனே
வேழமீ துறையும் வஜ்ர தேவர்கோ சிறைவி டுத்து
வேதனா ரையும் விடுத்து ...... முடிசூடி
வீரசூ ரவன் முடிக்கு ளேறியே கழுகு கொத்த
வீறுசேர் சிலை யெடுத்த ...... பெருமாளே.
- கோழையாய் ஆணவம் மிகுத்த வீரமே புகல்வர்
பயந்தவராய் இருப்பினும் அகங்காரம் மிக்க வீரப் பேச்சைப் பேசுவார்கள் சிலர். - அற்பர் கோது சேர் இழி குலத்தர் குல மேன்மை கூறியே நடு
இருப்பர்
கீழ் மக்களாகவும் குற்றம் உள்ள இழி குலத்தவராகவும் இருப்பினும், சிலர் தங்கள் குலத்தின் பெருமையே பேசி சபை நடுவே வீற்றிருப்பர். - சோறு இடார் தரும புத்ர கோவு(ம்) நான் என இசைப்பர்
(பசித்தவருக்குச்) சோறு இடாத பேர்வழிகள் தரும புத்ர அரசனே நான்தான் என்று தம்மைப் புகழ்ந்து பேசுவர். - மிடி ஊடே ஆழுவார் நிதி உடை குபேரனாம் என இசைப்பர்
தரித்திர நிலையில் ஆழ்ந்து கிடப்பவர் செல்வம் மிக்க குபேரன் நான் என்று தம்மைத் தாமே புகழ்வர். - ஆசு சேர் கலி யுகத்தின் நெறி ஈதே
குற்றம் நிறைந்த கலி யுகத்தின் போக்கு இப்படித்தான் இருக்கிறது. - ஆயு நூல் அறிவு கெட்ட நானும் வேறு அ(ல்)ல அதற்குள்
ஆகையால் அவை அடக்க உரை ஈதே
ஆய வேண்டிய நூல் அறிவு இல்லாத நானும் இந்த வழிக்கு வேறுபட்டவன் அல்லன். அந்த வழியில் ஆதலால் வெறும் அவை அடக்கப் பேச்சுப்போல் நான் சொன்ன உரையாகும் இது. - ஏழை வானவர் அழைக்க ஆனை வாசவன் உருத்ர ஈசன் மேல்
வெயில் எறிக்க
கஷ்ட நிலையில் இருந்த தேவர்கள் அழைக்க, ஐராவதம் என்னும் யானையை உடைய இந்திரன், ருத்ர தேவன் இவர்கள் மீது (சூரனுடைய) வெயில்போன்ற கொடுமை தாக்க, - மதி வேணி ஈசனார் தமது இடுக்கம் மாறியே கயிலை
வெற்பில் ஏறியே இனிது இருக்க வருவோனே
சந்திரன் அணிந்த சடையை உடைய சிவபெருமான் தங்களுடைய துன்பத்தை (உன் துணை கொண்டு) நீக்கிய பின், கயிலை மலையில் ஏறி இன்புற்றிருக்க வந்த பெருமானே, - வேழம் மீது உறையும் வஜ்ர தேவர் கோ சிறை விடுத்து
ஐராவதத்தின் மீது வீற்றிருக்கும் வஜ்ராயுதத்தை ஏந்திய தலைவனாகிய இந்திரனைச் சிறையினின்று விடுத்து, - வேதனாரையும் விடுத்து முடி சூடி
பிரமனையும் சிறையிலிருந்து விடுத்து, இந்திரனுக்கு வானுலக அரசாட்சியைத் தந்து, - வீர சூர் அவன் முடிக்குள் ஏறியே கழுகு கொத்த
வீரமுள்ள சூரனின் தலையில் ஏறி கழுகுகள் கொத்தும்படியாக - வீறு சேர் சிலை எடுத்த பெருமாளே.
பெருமை வாய்ந்த வில்லை எடுத்த பெருமாளே.